காளிகாம்பாள் கோயிலில் ரூ.2.17 கோடி செலவில் வெள்ளித் தேர்: அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித் தேர் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மரத்தேருக்கு வெள்ளித் தகடு வேயும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்து, 277 கிலோ வெள்ளி கட்டிகளை வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறைசார்பில் கோயில்களுக்கு ரூ.58.28 கோடி மதிப்பீட்டில் 97 புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருவதோடு,ரூ.11.38 கோடி மதிப்பீட்டில் 50 தேர்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலையத் துறைகோயில்களில் 68 தங்க ரதங்களும், 55 வெள்ளி ரதங்களும் உள்ளன.தற்போது 5 தங்கத் தேர்கள் மற்றும் 9 வெள்ளித் தேர்கள் செய்யஅறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ரூ.4 கோடி செலவில் திருத்தணி வெள்ளித் தேர் பணி நிறைவுபெற்று கோயிலில் வலம் வருகிறது.

அதேபோல் பழுதடைந்த வெள்ளித் தேர்களும் முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளன. காளிகாம்பாள் கோயிலுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித் தேர் செய்ய ரூ.11 லட்சம் செலவில் மரத்தேர் உருவாக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து 277 கிலோ கிராம் எடைகொண்ட வெள்ளியைக் கொண்டு அத்தேருக்கு வெள்ளித் தகடு வேயும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளித்தேர் வெள்ளோட்டம் விடப்படும்.

தற்போது வரை 1,922 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நிறைவு பெற்றிருக்கிறது. ரூ.6,447 கோடி மதிப்பிலான 6,746.97 ஏக்கர் நிலம்ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என். தர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், மங்கையர்க்கரசி, ஜ.முல்லை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE