சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: பிரதோஷ நாளில் மலையேற தொடங்கிய பக்தர்கள்

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான இன்று (ஆக.1) பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையேற தொடங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சித்தர் மலை என போற்றப்படும் சதுரகிரி உள்ளது. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, ஆனந்த வல்லியம்மன், பிலாவடி கருப்பசாமி, சட்டநாத முனி குகை, 18 சித்தர்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளது. சதுரகிரி மலைக்குச் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய 8 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சதுரகிரியில் ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை, மகா சிவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஆகஸ்ட் 1-ம் தேதி பிரதோஷ சிறப்பு பூஜையும், ஆகஸ்ட் 2-ம் தேதி சிவராத்திரி சிறப்பு வழிபாடும், ஆகஸ்ட் 4-ம் தேதி ஆடி அமாவாசை விஷேச அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வருவார்கள் என்பதால் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே நூற்றுக் கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் முன் திரண்டனர். காலை 6 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். 8 மணி நிலவரப்படி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்றுள்ளனர்.பக்தர்கள் வசதிக்காக சதுரகிரி மலைப்பாதையில் 5 இடங்களில் குடிநீர் தொட்டியும், 4 இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE