சதுரகிரிக்கு ஆபத்தான வருசநாடு உப்புத்துறை, சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக செல்லும் பக்தர்கள்!

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, தாணிப்பாறை வழியாக செல்வதற்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதால், ஆபத்து நிறைந்த வருசநாடு உப்புத்துறை, சாப்டூர் வாழைத்தோப்புபாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இங்கு அகஸ்தியர், போகர், கோரக்கர் உள்ளிட்ட 18 சித்தர்கள் தவம் புரிந்துள்ளதாகவும், இன்றும் சதுரகிரி மலையில் சித்தர்கள் அரூபமாக தவம் செய்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இங்கு தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை, சிவராத்திரி, நவராத்திரி விழாக்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்கின்றனர். வட இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற சிவதலங்களான கேதார்நாத், அமர்நாத் போன்ற கோயில்களுக்கு செல்ல இயலாதவர்கள் தமிழகத்தில் உள்ள வெள்ளியங்கிரி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாகவும், மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு வழியாகவும், தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை வழியாகவும் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி வந்தனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சாப்டூர்
வாழைத்தோப்பு வழியில் உள்ள குறுகலான மலைப்பாதை.

சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சொந்தமான 65.76 ஏக்கர் நிலப்பகுதிக்கு கடந்த 1984-ம் ஆண்டில் பட்டா வழங்கியபோது, தாணிப்பாறை வழிதான் பாதையாக குறிப்பிடப்பட்டது. இவ்வழியே செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தாணிப்பாறை வழியில் 5 இடங்களில் நிரந்தர வனத்துறை முகாம் அமைக்கப்பட்டு, மலையேறும் பக்தர்களுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

2015-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், தாணிப்பாறை வழியில் உள்ள ஓடைகளில் மேம்பாலம் மற்றும் மலைப்பாதை முழுவதும் நடைபாதை அமைக்க அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் முதல் மாங்கனி ஓடை வரை நடைபாதை அமைக்கப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர் இறந்ததால், ஒப்பந்தம் ரத்தானது. ஆனால் அதன்பின் பணிகள் நடைபெறவில்லை.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாத அமாவாசை நாட்களில் 5 ஆயிரம் பக்தர்கள் வரை தாணிப்பாறை வழியாக மலையேறிச் செல்வர். ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி, 2 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்படும் வாகனங்கள், நுழைவு சீட்டு வாங்க காத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களால் தாணிப்பாறை வழியை தவிர்த்து, வருசநாடு, சாப்டூர் வழியாக பக்தர்கள் மலையேறிச் செல்கின்றனர்.

மதுரை மாவட்டம் சாப்டூர் கருப்பசாமி கோயில் வாழைத்தோப்பு வழியாக கீழ் குளிராட்டி அருவி, மேல் குளிராட்டி, படிவெட்டுப்பாறை, மரப்பொந்து ஓடை, கொய்யாத்தோப்பு, காத்தாடி பாறை ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும். இந்த வழி தாணிப்பாறை பாதையை விட தூரம் குறைவு என்றாலும், செங்குத்தான மலைகளையும், அடர்ந்த வனப்பகுதியையும் கடந்து செல்ல வேண்டும். குளிராட்டி அருவியை கடந்த பின் தண்ணீர் வசதி கிடையாது. பல இடங்களில் பெரிய பாறைகள் நடைபாதையிலேயே உள்ளன.

சாப்டூர் வாழைத்தோப்பு பாதையில்
உள்ள படிவெட்டுப்பாறை.

அதேபோல் தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதை வழியாக யானை கஜம் அருவி, நரியூத்து-சதுரகிரி வழியாக 22 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், பாதை ஒழுங்கற்று இருப்பதாலும், ஆபத்தான பாதையாக உள்ளது.

தாணிப்பாறை வழியில் மலைப்பாதை முழுவதும் மின் விளக்குகள், மருத்துவ முகாம், குடிநீர், மீட்பு படை முகாம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பாக மலையேற முடியும். இதனால் தாணிப்பாறை வழியாக கூடுதல் நேரம் அனுமதித்தால் ஆபத்தான முறையில் சாப்டூர் மற்றும் வருசநாடு வழியாக கோயிலுக்குச் செல்வது தவிர்க்கப்படும். இதுகுறித்து மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்