சேதுபதி ராணியால் கட்டப்பட்ட சேதுக்கரை பெருமாள் கோயிலை பாதுகாக்க கோரிக்கை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: சேதுக்கரையில் இடிந்த நிலையில் உள்ள சேதுபதி ராணி கட்டிய பெருமாள் கோயிலை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியிலிருந்து சேதுக்கரை செல்லும் வழியில் அகத்திய தீர்த்தம் அருகில் உள்ளது சீனிவாசகப் பெருமாள் கோயில். இதை சின்னக்கோயில் என்கிறார்கள். சுமார் 220 ஆண்டுகளுக்கு முன் சேதுபதி ராணியால் மிக அழகிய கட்டிடக்கலை அம்சத்துடன் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ளது.

இக்கோயில் பற்றி ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறும்போத், "கிழக்கு நோக்கியுள்ள இக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் உள்ளது. கருவறையானது, அதிட்டானம் முதல் பிரஸ்தரம் வரை கடற்கரைப் பாறைக் கற்களாலும், அதன் மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவில் இரு தளங்களுடன் துவிதள விமானமாக இக்கோயில் அமைந்துள்ளது. இதன்மேல் இருந்த கலசம் சேதமடைந்து அழிந்துள்ளது.

கருவறையின் பின்பகுதி இடிந்துவிட்டது. கருவறையில் சங்கு, சக்கரம் ஏந்தி நின்ற நிலையில் சீனிவாசகப்பெருமாள் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் வெள்ளை மார்பிள் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செய்யப்பட்ட நின்ற நிலையிலான திருமால் சிற்பம் ஒன்றும் உள்ளது. இதில் திருமால் உருவத்தைச் சுற்றி தசாவதாரச் சிற்பங்கள் சில உள்ளன.

கோயிலில் உள்ள திருமால் சிற்பம்

ராமநாதபுரம் ஜமீன்தாரினி சேதுபதி ராணி மங்களேஸ்வரி நாச்சியார் மற்றும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆகியோரின் புத்திரியாகிய சேஷம்மா, கி.பி.1805, கார்த்திகை மாதம் 4ம் நாள், சங்குமுகம் அகத்திய தீர்த்தத்தில் சீனிவாசகப் பெருமாள் கோயிலை பிரதிஷ்டை செய்துள்ளார்.

கோயிலின் அபிஷேகம், பூஜை, நெய்வேதனத்துக்கு காமன்கோட்டை அருகிலுள்ள நெடியமாணிக்கம் என்ற ஊரை கொடையாக விட்டுக் கொடுத்து செப்பேடு வழங்கியுள்ளார். செப்பேட்டின் இறுதியில் சேதுபதி ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கையொப்பமிட்டுள்ளார். இதன் மூலம் மங்களேஸ்வரி நாச்சியார் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதை அறிய முடிகிறது.

கோயிலில் உள்ள கல்வெட்டு

கோயில் பிரதிஷ்டை செய்த இரு மாதங்களுக்குப் பின் கி.பி.1806, தை 4-ல் ஸ்ரீசேஷம்ம நாச்சியார் இப்பெருமாள் கோயிலுக்குச் செய்த நித்திய சதாசேவை திருப்பணி வேலை கைங்கிரியம் பற்றிய தகவல் சொல்லும் கல்வெட்டு இக்கோயில் மகாமண்டபத்தின் நுழைவு வாயில் இடப்புறமுள்ள தூணில் உள்ளது. அதன் கீழ் இறைவனை வணங்கிய நிலையில் ராணியின் உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டில், கோயில் இருக்கும் இடம் அகத்தியதீர்த்தம் சேதுமாசிவபுரம் எனவும், செப்பேட்டில் சங்குமுகம் அகத்திய தீர்த்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. சேதுபதி ராணி மங்களேஸ்வரி நாச்சியார் தன் மகள் ஸ்ரீசேஷம்ம நாச்சியார் பெயரில் இக்கோயிலை கட்டியுள்ளார். தற்போது பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ள இக்கோயிலை அரசு நிதி வழங்கி பாதுகாக்க வேண்டும்" என்று ராஜகுரு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE