செமணாம்பதி  உதிர காளியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் மலையடிவாரத்தில் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் வீற்றிருக்கிறாள் உதிர காளியம்மன். உதிர பகவதியம்மன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் கேரள எல்லையில் செமணாம்பதி கிராமத்தில் மலையடிவாரத்தில் சிற்றோடை பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், அங்குள்ள எட்டி மரத்தின் கீழ் தெய்வீக சக்தி ஆட்கொண்டு இருப்பதை உணர்ந்து, மரத்தின் கீழ் உள்ள புதர்களை தூய்மைப்படுத்தினர். அங்கு உதிர காளியம்மன் சுயம்பு வடிவமாக இருந்தை கண்டு, வழிபடத் தொடங்கினர்.

இன்றைக்கு, பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியின் சிறந்த வேண்டுதல் தலமாக மாறியிருக்கிறது. பெரும்பாலும் குழந்தை பாக்கியம் வேண்டியே இந்தக் கோயிலு்ககு வருகிறார்கள். குழந்தை வரம் வேண்டும் பெண்கள் தாங்கள் உடுத்திச் சென்ற சேலையின் முந்தானையில் இருந்து சிறுபகுதியை கிழித்து, அங்குள்ள மரத்தில் கட்டிச் செல்கின்றனர். ‘சொந்த வீடு அமைய வேண்டும்’ என வேண்டி, கற்களை அடுக்கி வைத்து செல்வோரும் உண்டு.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோயில் மரத்தில் தொட்டில் மற்றும் மரத்தால் ஆன சிறிய வீடுகளை கட்டி, வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், மாதந்தோறும் அமாவாசை நாட்களில், ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடிப்பெருக்கில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒரு கோயிலுக்கான தேர்ந்த கட்டமைப்புகள் இன்றி, திறந்த வெளியில் இயற்கையோடு இயைந்து இருக்கும் இந்தக் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து, அம்மன் அருள் பெற்றுச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE