செங்கரை காட்டுச் செல்லியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலை யையொட்டி அமைந்துள்ளது செங்கரை காட்டுச் செல்லியம்மன் கோயில். இக்கோயில் உள்ள பகுதி, பல ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்துள்ளது. அப்போது அங்குள்ள புற்றில், இருளர் இன மக்கள் கைவிட்டு, பாம்பு உள்ளதா என பார்க்க முயன்ற போது, கையில் கல் ஒன்று தென்பட, புற்றை உடைத்து பார்க்க, அம்மன் சிலை இருந்துள்ளது.

அங்கு வந்த கிராம மக்கள் அச்சிலையை ஊருக்கு எடுத்து வர முயல, அப்போது ஒரு சிறுமி மீது அம்மன் அருள் வந்து, ‘கிராமத்தினுள் என்னைக் கொண்டு சென்று வைக்க வேண்டும் என்றால், ஒரு அடிக்கு ஒரு காவு கொடுக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்க, அதையேற்ற கிராம மக்கள் காவு கொடுத்து, அம்மனை அழைத்து வர, கிராம எல்லையில், காட்டுப் பகுதியில் காவு அனைத்தும் தீர்ந்து விட, அம்மன் அங்கே அமர்ந்தார். அதைத் தொடர்ந்து அம்மனை காட்டுச் செல்லியம்மன் என்றழைத்து மக்கள் வணங்கி வர, இக்கோயில் உருவானது.

கோயில் வளாகம் முழுவதும் வேதைக் கொடிகள் படர்ந்திருக்க, அம்மன் 7 கிராமங்களுக்கு கிராம தேவதையாக விளங்குகிறாள். மருத்துவ குணமுடைய இந்த வேதைக் கொடியின் இலைகள், தை மாதத்தில் முழுவதும் உதிர்ந்து, பங்குனி 15-ம் தேதிக்குள் புத்திலைகள் தோன்றி, புது நிழல் தரத் தொடங்கி விடும். வேதைக்கொடி சூழ அமர்ந்திருக்கும் காட்டுச் செல்லியம்மனை கிராமப்புற பக்தர்கள் மட்டுமல்ல, நகர்ப்புற மக்களும் நாள் தோறும் தரிசித்து செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE