திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா இன்று தொடக்கம்: 560 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினியுடன் ஜூலை 27-ம் தேதி (இன்று) ஆடிக் கிருத்திகை திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழாவுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் இந்தாண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா இன்று தொடங்குகிறது. ஜூலை 31-ம் தேதி வரை, 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவில், இன்று ஆடி அஸ்வினி திருவிழாவும், நாளை (ஜூலை 28-ம் தேதி) ஆடி பரணி திருவிழாவும் நடைபெற உள்ளன.

தொடர்ந்து, ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய திருவிழாவான, ஆடிக் கிருத்திகை விழா, ஜூலை 29-ம் தேதி நடக்கிறது. அன்று இரவு ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முதல்நாள் தெப்பத் திருவிழாவும், 30-ம் தேதி 2-ம் நாள் தெப்பத் திருவிழாவும், 31-ம் தேதி 3-ம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. ஆடிக் கிருத்திகை திருவிழாவில், சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

இந்தவிழாவில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஆடிக் கிருத்திகை திருவிழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பால் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், தலைமுடி காணிக்கையை செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர்.

கடந்தாண்டு ஆடிக் கிருத்திகை திருவிழாவின்போது சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள். ஆகவே, இந்தாண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயில் நிர்வாகம் மற்றும் திருத்தணி நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் 160 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் கடந்தாண்டை விட கூடுதலாக காவல் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபட உள்ளனர்.

திருவிழா நாட்களில் குப்பைகள் எங்கும் சேரா வண்ணம் உடனுக்குடன் அகற்ற 900 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ( விழுப்புரம் கோட்டம்) மூலம் இன்று முதல், ஜூலை 29-ம் தேதி வரை சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, ஜூலை 29-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு, ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார். மேலும், சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.200-லிருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE