சேலம் சின்ன மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில், பாதுகாக்கப்பட்ட கோட்டையாக இருந்த இடத்தில், அம்மன் வீற்றிருக்க, கோட்டைக்கு வெளியே வசிக்கும் பாமர பக்தர்கள், கோட்டைக்குள் எளிதில் வந்து, வழிபட முடியாமல் தவித்தனர்.

பக்தர்களின் குறையை அறிந்தவளான பெரிய மாரியம்மன், கோட்டைக்கு வெளியே வந்து, சின்னக்கடை வீதி என்னும் இடத்திலும் குடி கொண்டு, பாமர பக்தர்களுக்கும் தாயாகி அருள்பாலிக்க, இங்குள்ள அம்மனுக்கு, ‘சின்ன மாரியம்மன்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.

இதன் காரணமாகவே, கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியதும், அதைத் தொடர்ந்து இங்கும் பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கும். பின்னர், பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு, சின்ன மாரியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு தான் மீண்டும் கோயில் திரும்பும். பழங்காலத்தில், ஊர் மக்களால் வீண் பழி சுமத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணை, தனது திருவிளையாடல் மூலம் ‘உத்தமி’ என உணர்த்தியதாக சின்ன மாரியம்மனின் அருள் பற்றி சிலிர்த்துக் கூறும் பக்தர்கள் உண்டு.

குழந்தை வரம் வேண்டுகிற பெண்கள், சின்ன மாரியம்மனுக்கு வளையல் வைத்து வழிபடுவதும், அந்த வளையல்களை தங்கள் கைகளில் அணிந்து வளைகாப்பு வழிபாடு நடத்துவதும் இக்கோயிலில் இன்றளவும் பிரசித்தம். இக்கோயிலில் வளையல் வாங்கி வேண்டுதல் வைத்தால் அவர்களுக்கு உடனே திருமணமும், தொடர்ந்து வளைகாப்பும் நடைபெறும் என்பது நம்பிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE