தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

442-ம் ஆண்டு திருவிழா: தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் ஆண்டு பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. தொடர்ந்து மூன்று திருப்பலிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

கொடியேற்றம்: கூட்டுத்திருப்பலி முடிந்ததும் பேராலயத்தில் இருந்து திருக்கொடியை ஆயர் ஸ்டீபன், மேளதாளங்கள் முழங்க, பேராலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வந்தார். பின்னர் பேராலயத்துக்கு முன்புள்ள கொடிமரத்தில் காலை 8.40 மணிக்கு அன்னையின் திருக்கொடியை ஆயர் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ''மரியே வாழ்க'' என்று முழக்கமிட்டனர். கொடி ஏற்றப்பட்ட போது சமாதானத்தை குறிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்து ஏராளமான வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், பேராலயத்துக்கு எதிரே பழைய துறைமுகத்தில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

பக்தர்கள் நேர்ச்சை: பக்தர்கள் நேர்ச்சையாக பால் குடம், வாழைத்தார் போன்றவற்றை கொடிமரத்தின் பீடத்தில் வைத்து வழிபட்டனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கொடிமரத்தின் பீடத்தில் வைத்து அன்னையிடம் ஒப்புக் கொடுத்தனர். கொடியேற்றம் முடிந்ததும் பால், பழத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். கொடியேற்ற நிகழ்ச்சியில், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பனிமய மாதா பேராலய கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று காலை கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்பி தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தில் சாதாரண உடையில் ஏராளமான போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொன் மகுடம்: தொடர்ந்து பகல் 12 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை குமார்ராஜா தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபகரணங்களை ஆயர் அணிவித்தார். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து மாலையில் சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3-ம் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு புதுநன்மை சிறப்பு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெறுகிறது.

தேர் பவனி: ஆகஸ்ட் 4-ம் தேதி 10-ம் நாள் திருவிழாவில் இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறுகிறது. அன்னையின் பெருவிழா தினமான ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலை 7 மணியளவில் நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை ஸ்டார்வின், உதவி பங்குத்தந்தை பாலன், அருட்சகோதரர் தினகரன் மற்றும் பங்கு பேரவையினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE