சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி அம்மன் தொகுப்பு திட்டத்தில் தரிசனம்: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா திட்டத்தில் சென்னையில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா பேருந்துகளை கடந்த 17-ம்தேதி முதல் இயக்கி வருகின்றன. இந்த பேருந்துகள் செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் காலை 8.30 முதல் இரவு 8.30 மணி வரை இயங்கும்.

பயணிகள் திருவல்லிக்கேணியில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு பாரிமுனை காளிகாம்பாள், ராயபுரம் அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன்,புட்லூர் அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயில் திருவுடையம்மன் மற்றும் பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன். வில்லிவாக்கம் பாலியம்மன் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்யலாம். இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.1,000 ஆகும்

அதேபோல், திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்தில் இருந்து மற்றொரு சுற்றுலா பேருந்தில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு மயிலாப்பூர் கற்பகாம்பாள், முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், தேனாம்பேட்டை ஆலயம்மன், தி.நகர் முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளி அம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி , திருவேற்காடு தேவி கருமாரியம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் ஆகியகோயில்களில் தரிசனம் செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.800 ஆகும்.

இரு சுற்றுலாக்களிலும் பயணிகளுக்கு மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம், சிறப்பு விரைவு தரிசனம் ஆகியவை உண்டு. எனவே, ஆன்மிக அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் (www.ttdconline.com) பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE