புலியகுளம் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

கோவையில் உள்ள பழமையான அம்மன் கோயில்களில் முதன்மையானது புலியகுளம் மாரியம்மன் கோயில். வடக்கு நோக்கி நின்ற கோலத்தில், அம்மன் இக்கோயிலில் காட்சி தருகிறார். கருவறையில் முன்புறம் குறிஞ்சி மண்டபமும், உள்ளே முன் மண்டபத்தில் கொடிமரமும் காட்சியளிக்கின்றன. இக்கோயில் வளாகத்தில் விநாயகர், முருகன், தேவேந்திரன் எனப்படும் இந்திரன், துர்க்கையம்மன், நவ நாகர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வேண்டுதலுடன் இக்கோயிலுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆடி மாதம் முழுவதும் அம்மன் அருள் வேண்டி பூஜைகள் நடைபெற, ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் காட்சி தருகிறார். இங்கு வந்து பூப்போட்டுப் பார்த்து, அம்மனின் உத்தரவு கேட்டு, அதன்பின் வீட்டில் நல்ல காரியங்களை நடத்துவது உண்டு. திருமணத் தடை நீங்க, வீட்டில் உள்ளவர்களின் நோய்கள் தீர என இந்த அம்மனை வேண்டிச் செல்வோர் உண்டு.

இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவையில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக, 9 நாக சிலைகளுடன் கூடிய நவ நாகர் சந்நிதி இங்குள்ளது. ஏழரை அடி உயரத்தில் இரும்பினால் ஆன, பிரத்யேக சனீஸ்வர பகவான் சந்திதியும் இங்கிருப்பது, இந்த அம்மன் கோயிலின் தனிச்சிறப்பு. தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து, அம்மனின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE