அபங்கம் பிறந்த கதை

By என்.ராஜேஸ்வரி

காராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஞானேஸ்வர் மகராஜ் கோயிலில் சுமார் இருபது லட்சம் பேர் கலந்துகொள்ளும் வாரகரி யாத்திரை ஆண்டுதோறும் நடக்கும். இந்த யாத்திரை தொடங்கிய காலத்தில் இந்த யாத்திரையில் பங்கேற்ற எளிமையான சாதுக்கள் பாடும் பஜனைப் பாடல்கள் தான் அபங்கம். விட்டல் பகவான் குறித்த பாடல்களைப் பாடிய மகான்கள் அபங்கம் என்ற சொல்லுக்கு ஏற்ப மாசற்றவர்கள்.

விட்டல் என்று அறியப்பட்ட, விட்டல் பந்த் குல்கர்னி சிறந்த வேத சாஸ்திரங்களைப் பயின்றவர். திருமணம் ஆனவர். இவருக்கு மூன்று மகன்களும் ஒரு பெண்ணும் உண்டு. நிவிர்த்தி, ஞானதேவ், சோபான், முக்தாபாய் என்பது அவர்களுடைய பெயர்கள்.

விட்டலுக்கு சந்நியாசம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. பண்டிதர்கள் நிறைந்த கிராமத்துக்கு முதலில் சென்றார். சந்நியாசமும் பெற்றார். மணம் முடித்தவர், சந்நியாசம் பெற்றதை அவருடைய குருவும் ஊர்ப் பெரியோர்களும் கண்டித்தனர். சாஸ்திரத்தில் இதற்கு இடமில்லை என்று சொல்லி, ஊரைவிட்டு அவரைக் குடும்பத்தோடு ஒதுக்கிவைத்தனர். நாட்கள் கடந்தன. ஊர் மக்களின் ஒத்துழைப்பு இன்றி வாழ முடியாமல் இக்குடும்பம் மிகுந்த துன்பத்தை அனுபவித்தது.

இருந்தாலும், மகன்களும் பெண்ணும் வளர்ந்துவிட்டதால், திருமணம் முடிக்க வேண்டும் என்று ஊர்ப் பெரியோரிடம் ஒத்துழைப்பு கேட்டார் விட்டல் பந்த் குல்கர்னி. சந்நியாசி பெற்றவரின் பிள்ளைகள் என்பதால் அவர்கள் மணம் முடிக்கக் கூடாது என்று மக்கள் தடுத்தனர். இதைக் கேட்ட குல்கர்னி உடல் நலம் குன்றி இறந்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய மனைவியும் மறைந்தார்.

அபங் இயற்றிய வாரிசுகள்

சில நாட்கள் கழித்து, சாஸ்திரங்களை அறிந்த பண்டிதர்கள் நிறைந்த கிராமத்துக்குச் சென்று, இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா என்பதை அறிந்து வரலாம் என்றும், பின்னர் தனது அண்ணா நிவிர்த்திக்கு மணம் முடிக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தாள் முக்தாபாய். சகோதரர்களும் ஒப்புக்கொள்ள அனைவரும் புறப்பட்டார்கள். பண்டிதர்கள் திண்ணைதோறும் அமர்ந்து வேதம் சொல்லிக்கொண்டிருந்த ஊருக்கு வந்தார்கள்.

இவர்கள் வருவதைப் பார்த்து, வேதம் சொல்லிக்கொண்டிருந்ததை இடையிலேயே சிலர் நிறுத்திவிட்டார்கள். இவர்கள் ஊருக்கு வந்த காரணத்தைக் கேட்டார்கள். நால்வரும் காரணத்தைச் சொல்ல, வேத பண்டிதர்கள் எள்ளி நகையாடினார்கள். இதைப் பார்த்து ஆதிபராசக்தி ரூபமான முக்தாபாய் வெகுண்டாள்.

“எனது அண்ணா கூறினால், இதோ இங்கே மேய்ச்சல் முடிந்து கடந்து போகிறதே, அந்த எருமை மாடுகூட வேதம் சொல்லும்” என்றாள். “எங்கே சொல்லச் சொல் பார்க்கலாம்” என்றார்கள் அப்பண்டிதர்கள். நிவிர்த்தி கையை அசைக்க எருமை நின்றது, பண்டிதர்கள் இருக்கும் திசை நோக்கிப் பார்த்தது.

மிக அரிய சாம வேதத்தைக் கானம் செய்தது. இவர்களின் மிக உயர்ந்த பாண்டித்தியத்தைக் கண்டு பண்டிதர்கள் அதிசயித்தார்கள். உயர்ந்த ஞானத்தைப் பெற்ற அவர்கள் இப்படியே இருந்துவிடுவதுதான் சமுதாயத்துக்கு நல்லது என்றனர். அவர்களும் அப்படியே இருந்து, உயர்ந்த ‘அபங்’ இயற்றிப் பாடி விட்டலைப் போற்றி வந்தனர்.

பொறுமையின் சிகரம்

அபங்கம் பாடியவர்களில் முக்கியமானவர் ஏக்நாத். இவர் மிகுந்த பொறுமைசாலி. இவரிடம் வரும் விட்டல் பக்தர்களின் சொந்தக் குறைகளைக் கேட்டு அவர்களுக்குச் சமாதானம் கூறுவார். அவரது இந்தக் குணத்தை மெச்சி எப்போதும் அவரைச் சுற்றி பக்தர்கள் கூட்டம் இருக்கும். இதைக் கண்ட சில பொறாமைக்காரர்கள் அவரைக் கோபம்கொள்ளச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்கள். இதை அறியாத ஏக்நாத் வழக்கம்போல் அன்றும் கோதாவரி ஆற்றில் குளித்துவிட்டு, கரை ஏறி வந்தார். அங்கிருந்த பொறாமைக்காரர்கள் இருவரும் அவர் மீது எச்சில் உமிழ்ந்தனர்.

துளியும் கோபப்படாத ஏக்நாத் மீண்டும் கோதாவரியில் இறங்கிக் குளித்தார். இதுபோல 27 முறை நடைபெற்றது. ஏக்நாத்தும் மீண்டும் மீண்டும் குளித்துவிட்டு வந்தார். அவர் அசரவே இல்லை. ஆனால், எச்சில் துப்பிய பொறமைக்காரர்களோ அசந்து போனார்கள். “தினமும் காலை மாலை என இருமுறை மட்டுமே குளிப்பேன். உங்களால் இன்று 108 முறை குளித்தேன். இல்லாவிட்டால் இந்தச் சிந்தனைகூட எனக்கு வந்திருக்காதே. உங்களால்தான் இந்தப் புண்ணிய பலன் கிடைத்தது" என்றார் .

விட்டலே செல்வம்

அபங்கம் பாடியவர்களில் பரவலாக அறியப்பட்டவர் பக்த துக்காராம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி தன் குரு ராமதாசரிடம் பெரும் மரியாதை கொண்டவர். அவர்தான், “உங்கள் பகுதியில் விட்டல் பக்தர் பக்த துக்காராம் இருக்கிறார். அவரைத் தரிசித்தாலே போதுமானது” என்றார் .

நாடு திரும்பிய சிவாஜி தன் தூதர்களை, பக்த துக்காராமின் இருப்பிடத்தையும் நிலைமையையும் அறிந்து வர அனுப்பினார். துக்காராம் மிகுந்த ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாகவும் கூறினார்கள். பெரிய பெரிய தட்டுகளில் நவமணிகளையும், பொன்னையும் பொருளையும், சாசனங்களையும் எடுத்துச் சென்றார்.

அப்போது தனது ஊர்த் திடலில், ஊர் மக்கள் பெரும் திரளாய் அமர்ந்திருக்க, தன்னை மறந்து ‘அபங்’ பாடிக்கொண்டு இருந்தார் பக்த துக்காராம். மன்னர் பரிவாரங்களுடன் வருவதைக் கண்ட மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எழுந்து வழிவிட்டார்கள். ஆனால், பீடத்தில் அமர்ந்திருந்த துக்காராம் எழுந்திருக்கவும் இல்லை; வணக்கம் தெரிவிக்கவும் இல்லை. தொடர்ந்து பஜனை செய்துகொண்டே இருந்தார்.

சத்ரபதி சிவாஜியும் மக்களோடு மக்களாக அமர்ந்து பஜனையில் கலந்துகொண்டார். விட்டல் பஜனை முடிந்தது. துக்காராமும் எழுந்து கீழே வந்தார். பின்னர், மன்னரை மரியாதை நிமித்தம் வணங்கினார். “இறை நாமங்களைக் கொண்ட ‘அபங்’ பாட அமர்ந்துவிட்டால், அது வியாஸ பீடமாகிவிடும்.

வியாஸ பீடத்தில் இருப்பவரே உயர்ந்தவர். அப்பீடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது வரன்முறைப்படி மன்னரே ஆனாலும், மரியாதை செலுத்த முடியாது. எனவே, தற்போது தான் வணக்கம் தெரிவிப்பதாக” கூறினார் துக்காராம்.

பொன், பொருள், தனம், வித்து என்கின்ற சாசனங்கள் தனக்குத் தேவையில்லை என்றும் அன்றன்றைய உணவைத் தனக்கு அளிப்பவர் விட்டல்தான் என்றும் கூறி துக்காராம் அவற்றைப் பெற மறுத்துவிட்டார்.

சிவாஜியும் தன் குருவின் வார்த்தையை எடுத்துக் கூறி பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அதற்கு துக்காராம், சிவாஜியிடம் ஏகாதசி விரதமிருக்குமாறும், துளசி மணிமாலை அணியுமாறும் கூறி, அதுவே தனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்