பஞ்சுப்பேட்டை திரௌபதி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே, அரக்கோணம் சாலை பிரியும் இடத்துக்குப் பக்கத்தில் பஞ்சுப்பேட்டை பகுதியில் உள்ளது அருள்மிகு பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் திருக்கோயில். கோயிலின் மூலவராக திரௌபதி அம்மன் வீற்றிருக்கிறார். அவருடன் குந்திதேவி, பஞ்ச பாண்டவர்கள் உள்ளிட்டோரும் இங்கு தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர்.

கோயிலின் பின் பகுதியில் சப்த கன்னிகள் வீற்றிருக்கின்றனர். இங்கு, சித்திரை மாதத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீ மிதித் திருவிழா 22 நாள் உற்சவமாக கோலாகலமாக நடைபெறும். இதில், 11 நாட்கள் தெருக்கூத்து நடத்தப்பட்டு, அனைத்து நாட்களிலும் பாரத கதை படிக்கப்படும். அர்ஜூனன் தபசு நடைபெறும் நாளில் பக்தர்களுக்கு வழங்கப்படும் எலுமிச்சை பழம் பிரசாதம் இங்கு மிக விசேஷம். இதைச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருமணம் ஆகாதோர் இங்கு வழிபாடு செய்வதுண்டு. அம்மனின் வரம் பெற்று, இந்தக் கோயிலிலேயே திருமணம் செய்வோரும் உண்டு. இத்திருமண வைபவங்களுக்காக கோயில் வளாகத்திலேயே மண்டபம் உள்ளது. உணவு பரிமாறவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் தீ மிதித் திருவிழா தவிர்த்து, ஆடி மாதத்தில் விளக்கு பூஜையும் நடைபெறும். இந்த பழங்கால கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை தோறும் சிறப்பு வழிபாடும் பஞ்சுப்பேட்டை திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE