சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா பிரசித்தி பெற்றது. ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திர நாளில் தவமிருக்கும் கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகமும், 9 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திர மவுலீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரமும் நடைபெற் றது.

அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு அம்பாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 1.35 மணிக்கு மேல் தெற்கு ரத வீதியில் உள்ள ஆடித்தபசு மண்டகப்படிக்கு தங்கச் சப்பரத்தில் கோமதி அம்பாள் எழுந்தருளினார்.

மாலை 4.15 மணிக்கு மேல் தெற்கு ரத வீதியில் உள்ள தபசுகாட்சி கொடுக்கும் பந்தலுக்கு சங்கரநாராயணசுவாமி புறப்பாடாகினார்.

மாலை 6.50 மணிக்கு மேல் சிவபெருமான் ஹரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயண சுவாமியாக கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆடித்தபசு விழாவையொட்டி சங்கரன்கோவிலில் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE