வில்லிவாக்கம் தேவி ஸ்ரீ பாலியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும் 

By செய்திப்பிரிவு

சென்னை வில்லிவாக்கத்தில் பழமை வாய்ந்த சக்தி தலமாக இருப்பது ஸ்ரீ பாலியம்மன் திருக்கோயில். பாலியம்மன் இங்கு கைகளில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தி பக்தர்களுக்கு காட்சித் தருகிறார்.

பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும் என்ற நம்பிக்கை உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், செய்வினை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பாலியம்மனை மனமுருகி வேண்டி அபிஷேகம் செய்தால், அங்கப்பிரதட்சணம் செய்தால் பிரச்சினைகள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. எந்தவகையான நீங்க வேண்டிய குணாதிசயங்கள் இருந்தாலும், இந்த மண்ணை மிதித்தால், அவர்களின் குணங்கள் மாறி அன்னையின் அருள் அவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

பக்தர்களுக்கு என்ன குறை இருந்தாலும், அன்னையின் பாவாடை துணியால் மந்திரித்து, வேப்பிலை அடித்து, விபூதி, குங்குமம் பூசினால் அவர்களின் குறை உடனடியாக நிவர்த்தியடையும். ஆடி மாதம் முழுவதும் பாலியம்மனுக்கு விழா தான். ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்த்து, சீர் கஞ்சி ஊற்றி விழா நடைபெறும்.

ஆடி கடைசி வாரத்தில் இங்கு தீ மிதி திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். திருமணமாகாதவர்கள் இக்கோயிலில் உள்ள சுமார் 300 ஆண்டு பழமையான அரச மரத்தில், மஞ்சள் கயிற்றை கட்டி பூஜை செய்தால், 48 நாட்களில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இங்கு நாகதோஷ நிவர்த்தி சர்ப்ப சாந்தி பெற்று சுகமடையலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE