ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.

மகத்துவம் வாய்ந்த ஆடிமாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோயில்கள் நேற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தன.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து,வண்ண மலர்களால் அலங்கரித்திருந்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். பலர் பொங்கல் வைத்து படையலிட்டனர்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், கோலவிழிஅம்மன், சூளை அங்காள பரமேஸ்வரி, பாரிமுனை காளிகாம்பாள், கீழ்ப்பாக்கம் பாதாளபொன்னியம்மன், முத்தமிழ் நகர் பவானி அம்மன், தி.நகர்முப்பாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன், நாகாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருமுல்லைவாயல் பச்சையம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உட்பட சென்னை மற்றும் புறநகரில்உள்ள அனைத்து அம்மன்கோயில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் நெரிசலின்றி அம்மனை தரிசனம் செய்யும் வகையில் மரக்கட்டை தடுப்புகளால் பாதை அமைக்கப்பட்டிருந்தது. போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சென்னையில் பல அம்மன் கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை தீபம் ஏற்றியும் பெண்கள் மனமுருகி வேண்டினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE