சதுரகிரி ஆடி அமாவாசை விழா: கடந்த ஆண்டில் நிலவிய குறைகளை சரிசெய்ய சார் ஆட்சியர் அறிவுறுத்தல்

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து, சிரமமின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாடுகளை அனைத்துத் துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்திபெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் அதற்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி-யான முகேஷ் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டிஎஸ்பி-யான முகேஷ் ஜெயகுமார் பேசுகையில், "தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் பார்க்கிங், மலைப்பாதை ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும். வாகன நிறுத்து மிடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்களில் வாகனங்கள் சென்று வர இரு வழிகளை ஏற்படுத்த வேண்டும். அடிவாரம் முதல் சதுரகிரி மலை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.

சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் பேசுகையில், "ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். தனியார் இடங்களில் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மலைப் பாதையில் உள்ள மருத்துவ முகாம்களில் ஸ்ட்ரெச்சர் இருக்க வேண்டும். மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு பொருட்கள் வைப்பு அறை ஏற்படுத்த வேண்டும். தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தால் பக்தர்கள் அடிவாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க தகுந்த முன்னேற்பாடுகளை வனத்துறை செய்ய வேண்டும்.

வயதானவர்கள் மலையேறுவதற்கும், உடல் நலம் பாதித்தவர்களை அடிவாரம் அழைத்து வருவதற்கும் டோலிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மலையேறும் போது பக்தர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்சினைகளை தீர்க்க தேவையான மருந்துகளுடன் சுகாதார துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கழிப்பறை பற்றாக்குறை, போதிய பேருந்து இல்லாதது, சதுரகிரி மலையில் அனைவருக்கும் உணவு இல்லாதது போன்ற பல்வேறு குறைபாடுகளை சரி செய்து, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஜூலை 27-ம் தேதி ஒருங்கிணைந்த ஆய்வு நடத்தப்படும். அப்போது, முன்னேற்பாட்டுப் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து இருக்க வேண்டும்" என பிரியா ரவிச்சந்திரன் கூறினார்.

செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, வட்டாட்சியர் சரஸ்வதி, போக்குவரத்துக் கழக மேலாளர் ரவிச்சந்திரன், வனச்சரகர்கள் பிரபாகரன், கார்த்திக் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE