சிங்கப்பூர் முனீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேக விழா: அதிபர் தர்மன் சண்முகரத்னம் பங்கேற்பு

By கே.சுந்தரராமன்

சென்னை/சிங்கப்பூர்: சிங்கப்பூர் முனீஸ்வரன் கோயிலில் ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் உள்ளிட்ட எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சிங்கப்பூர் நகரின் காமன்வெல்த் டிரைவ் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற  முனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 90 ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

குயின்ஸ்டவுன் பகுதியில் உள்ள மலேயன் ரயில் நிலையம் அருகே, ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த சில ரயில்வே தொழிலாளர்கள் இணைந்து ஒரு சிறிய குடிசையில் முக்கோண கல்லின் மீது ‘சூலம்’ என்ற ஆயுதத்தை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் 1990-களில் இந்த இடத்துக்கு அருகே உள்ள குயின்ஸ்டவுன் பகுதியின் முதல் கத்தோலிக்க தேவாலயம் சமீபம்  முனீஸ்வரருக்கு கோயில் எழுப்பப்பட்டது.

பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் ராஜகோபுரம், வசந்த மண்டபம், பிரகாரங்கள், கற்பக விநாயகர், அரச விநாயகர், பாலமுருகன்,  விசாலாட்சி சமேத  விஸ்வநாதர், கிருஷ்ணர், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், இடும்பர், சண்டிகேஸ்வரர், மாரியம்மன், துர்கையம்மன், பிரத்யங்கரா தேவி, நாகேந்திரன், நாகராணி, பைரவர், நவக்கிரக சந்நிதிகள் கட்டப்பட்டு, நித்திய வழிபாடுகள், பிரசாத விநியோகம், வருடாந்திர திருவிழாக்கள் என்று பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

இந்நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகக் குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி கடந்த மே 13-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை எந்திர பூஜை நடைபெற்றது. கடந்த 3-ம் தேதி காலை மங்கள இசையுடன் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. இதையடுத்து தினமும் கணபதி பூஜை, சாந்திஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றன.

கடந்த 6-ம் தேதி மாலை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கடந்த 12-ம் தேதி காலை 4 மணி முதல் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

விநாயகர் பூஜை, சோமகும்ப பூஜை, வேதிகார்ச்சனை, பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்று, 5-45 மணிக்கு புனித நீர் நிறைந்த கலசங்கள் புறப்பட்டு, காலை 6.40 – 6-50 மணிக்குள் மிதுன லக்னத்தில் அனைத்து கோபுரம் மற்றும் விமானங்களுக்கும் சமகால கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 4 மணி அளவில் சிறப்பு மகா அபிஷேகம், சாயரட்சை பூஜை, தீபாராதனை, சீர்வரிசை எடுத்தல்,  முனீஸ்வரர் புறப்பாடு நடைபெற்றன. குடமுழுக்கு வைபவத்தை சிவாகம சிரோமணிகள் திருச்சி எஸ்.சந்திரசேகர சிவாச்சாரியார், வைரம்பட்டி பி.சிவக்குமார் குருக்கள், சென்னிமலை சி.குமார சுப்பிரமணிய குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

விழாவில் பங்கேற்ற சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியதாவது: வழிபாட்டுத் தலங்களின் தனித்துவமான சமூக வரலாறுகளை நாம் அறிந்து நினைவில் வைத்திருக்க வேண்டும், பாரம்பரியத்தை மறவாமல் இருக்க வேண்டும். கும்பாபிஷேக வைபவத்தை, அனைத்து மக்களுடன் இணைந்து தரிசித்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் என்றார்.

விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் ரத்தினம் செல்வராஜூ தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர். ஜூலை 13-ம் தேதி தொடங்கிய மண்டலாபிஷேக பூஜை ஆக. 29-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE