திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் 66 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 65 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, திருவான்மியூர் மயூரபுரத்தில் பாம்பன் குமரகுருதாசர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடைசியாக கடந்த 1958-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 7-ம் தேதி கும்பாபிஷேக விழாதொடங்கியது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ஸோம கும்ப பூஜை, பலவண்ண சாத்துபடியும், 5 மணிக்கு யாத்ரா தானம், தசதானங்களும், அதன்பிறகு அதிகாலை 5.15 மணிக்கு கலச புறப்பாடும் நடைபெற்றது. 6 மணிக்கு சித்தி விநாயகர், மயூரநாதர், மத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா நடந்தது. பின்னர், மகா அபிஷேகம், மண்டலாபிஷேகம், மகா தீபாராதனை, உற்சவ மூர்த்திகளின் வீதி உலா நடந்தது.

விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்எம்டி. டீக்காராமன், என்.செந்தில் குமார், அறநிலையத் துறைசிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், திருப்பூர் சிவ வாக்கிய ஜோதிடம் `வாக்கு சித்தர்’ தம்பிரான் ரிசபானந்தர் சுவாமிகள் கலந்து கொண்டு, மனமுருகி வழிபட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE