தெய்வத்தின் குரல்: கர்மத்திலிருந்தே தொடங்குங்கள்

By செய்திப்பிரிவு

யோ

கம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்று பொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால், இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக்கொண்டேயிருக்கிறது. இப்படி இல்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும் சேர்ந்துவிட்டோம், அதற்கப்புறம் நாம் என்ற ஒன்று, அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கிக் கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகம். நம் மனசுகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள்! ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே, சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கிவிடுகிறது.

யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’. விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பைவிட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா?

துக்கத்தை விட்டால் யோகம்

ஒரு தினுசான வியோகம் வந்துவிட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார். அந்த ஒன்று என்ன? துக்கம் என்பதே. துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரித்துத் தள்ளிவிட்டால் அதுவே யோகம் என்கிறார். (தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோக ஸமஞிதம்.)

லோக ரீதியில் நாம் சொல்கிற ‘இன்பங்களும்’கூட இந்தத் துக்கத்தைச் சேர்ந்தனவே. பரமாத்மாவைப் பிரிந்திருக்கிற எல்லா அனுபவமுமே துக்கம்தான்.

சித்தம் ஓடிக்கொண்டே இருப்பதால்தான் இன்ப துன்ப அனுபவங்கள் ஏற்படுகின்றன. சித்தம் சஞ்சலிக்காமல் நிறுத்திவிட்டால் இவை இல்லை. ஒரே முனையைவிட்டு அகலாமல்—ஏகாக்ரம் என்று சொல்வார்கள்—இருப்பதற்கு சித்தத்தைப் பழக்குவதே சித்தசுத்தி. யோக சித்திக்கு இதுவே உபாயம். பொதுவாக நாம் ‘யோகிகள்’ என்று சொல்கிறவர்களைப் போல் எல்லோரும் ஆரம்பத்திலேயே சுவாச பந்தம் செய்துகொண்டு உட்காருவதில்லை. ஏதாவது ஒரு நல்ல விஷயத்திலே நாம் பூரணமாக ஈடுபடப் பழகினால், அப்போது சித்தம் கூடிய மட்டும் அழுக்குப் படாமல் இருக்கும். சித்தத்தை நேராக அடக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலா திசையும் பாயத்தான் செய்யும். எனவே, சித்தத்தில் கவனம் வைக்காமல் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டுவிட்டால் அப்போது சித்தத்துக்கு சஞ்சலிக்க இடம் குறைந்து போகும்.

பழைய நாளில் அரிகண்டம் என்று போட்டுக்கொள்வார்கள். படுக்காமலே நியமமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கழுத்திலே பெரிய கம்பி வளையம் போட்டுக் கொள்வார்கள். அதற்கு அரிகண்டம் என்று பெயர். ஒருத்தர் இதைப் போட்டுக் கொண்டபின் இஷ்டப்பட்டால்கூடப் படுக்க முடியாது. அந்த மாதிரி, நம் சித்தத்தை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போகாதபடி செய்வதற்கு அரிகண்டம் மாதிரி, ஸத் காரியங்களில் பூரணமாகத் தலையைக் கொடுக்க வேண்டும்.

துன்பம் அவமானம் உண்டு

அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்துவந்தார்களே, இவை எல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்றுவிடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாக்கப் பழக்குவதேயாகும். இந்த ஸத் காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக்கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாச பந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம்.

முடிவிலே, ஒரு கூழாங்கல் உருண்டை எந்த அழுக்கிலும் பட்டுக்கொள்ளாமல் கிறுகிறு என்று உருளுகிறதோ — அந்தக் கூழாங்கல் மேல் நாம் கொஞ்சம் விபூதியைப் பூசினால் அதைக்கூட உதிர்த்துவிட்டு ஓடும் — அப்படி எந்த இன்ப துன்பத்திலும் ஒட்டாமல் பரமாத்மாவை நோக்கி ஓடி அவரைச் சேர்ந்துவிடுவோம். இந்தச் சேர்க்கைதான் யோகம் என்பது. அதுதான் நம் மூலமான நிலை. அதுவேதான் முடிவான நிலையும். நடுவாந்திரத்தில் நாம் எப்படியோ மாறிப் போயிருக்கிறோம். அதனால் அந்த நிலை இப்போது நமக்குப் புரியவில்லை. நமக்குப் புரிகிற இடத்திலிருந்து அந்த நிலைக்குப் போக வேண்டுமானால் கர்மத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.

(தெய்வத்தின் குரல்)

(முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்