திருமலையில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

By செய்திப்பிரிவு

திருமலை: ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில்ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் மதியம் 12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆகம விதிகளின்படி ஆண்டுதோறும் 4 முறை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும். குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம், உகாதி மற்றும் பிரம்மோற்சவ விழா ஆகிய விசேஷ நாட்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை இந்த ஆழ்வார் திருமஞ்சன சேவை நடத்தப்படும்.

இதையொட்டி மூலவர் சன்னதி உட்பட கோயிலில் உள்ள உப சன்னதிகள், பலிபீடம், கொடிமரம், விமான கோபுரம், கோயில் முகப்பு கோபுர வாசல், அனைத்து மதில்கள், மேற்கூரைகள் உள்ளிட்டவை பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் கொண்டு சுத்தம் செய்யப்படும். அதன் பின்னர் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப் படுவர்.

இம்முறை, ஆனிவார ஆஸ்தானம் வரும் 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட உள்ளது. அன்று ஐதீகப்படி சுவாமிக்கு கணக்கு, வழக்குகள் ஒப்படைக்கப்படும். இதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது.

இதையொட்டி, காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். அதன் பின்னர் நைவேத்திய பூஜைகள் நடத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE