சி
த்தர்களின் வசிப்பிடம்; காட்டு விலங்கினங்களின் புகலிடம்; அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழிடமாகவும் விளங்கும் சதுரகிரி மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றது. சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை) வீதம் பதினாறு கிரிகள் சமமாக, சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
சதுரகிரி மலையடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்த பச்சைமால் என்பவர் பசுக்களை மேய்த்துப் பிழைத்துவந்தார். இவரது பெற்றோர் தில்லைக்கோன் – திலகமதி. மனைவி சடைமங்கை. சடைமங்கை, வழக்கம்போல் தன் மாமனார் வீட்டுக்குப் பால் கொண்டு சென்றபோது, ஒருநாள் துறவி ஒருவர் தனக்குப் பால் அளிக்கும்படி கேட்டார். அதுவே பிறகு, தினமும் வழக்கமாகிவிட்டது. தினமும் பால் குறைவாக வருவதாக, தன் மகனிடம் புகார் தெரிவித்தார் தில்லைக்கோன். உண்மையறிந்த பச்சைமால், மனைவியைத் துன்புறுத்தினார். அது கண்ட அத்துறவி சடைமங்கை மீது இரக்கம் கொண்டு, அவளுக்கு ‘சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியைப் பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்குப் பால் கொடுத்து உதவினார்.
ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்குப் பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்துப் பால் குடித்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தார். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதார்.
சாய்ந்த நிலையில் மகாலிங்கம்
சிவபெருமான் அவரைத் தேற்றி, “நீ தேவலோகத்தைச் சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னைப் பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தாய். உன்னை மீட்டுச் செல்லவே வந்தேன்” என்று கூறி அவருக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி ‘மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும் தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்தச் சன்னிதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பார்வதி பூஜித்த லிங்கம்
இங்கே சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விட்டார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியைத் தன்னுடன் இணைத்து ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் எனத் தல வரலாறு கூறுகிறது.
சிவனைப் போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாகத் தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாகத் தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ‘ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்வது வழக்கம்.
நோய் தீர்க்கும் மலை
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும் மூலிகைகளும் நோய்களைத் தீர்க்க வல்லவை. இந்த மலையில் ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். மருத்துவக் குணம் கொண்ட தாவரங்களின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கிய சுனைகள் இங்கே இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கது உதகநீர் சுனை.
ஜோதி விருட்சம், சாயா விருட்சம், கருநெல்லி விருட்சம், ஏர் அழிஞ்ச விருட்சம், சுணங்க விருட்சம், கனையெருமை விருட்சம் போன்ற பல விருட்சங்கள் இம்மலையில் காணப்படும்.
சந்திர தீர்த்தம், கெளண்டின்ய தீர்த்தம், சந்தன மகாலிங்க தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பொய்கைத் தீர்த்தம், பசுக்கிடைத் தீர்த்தம், குளிராட்டித் தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன. அகத்தையும் புறத்தையும் குணமூட்டும் சதுரகிரி.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago