ரா
மநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை, தொண்டிப் பகுதிகளில் ‘துதல்’ என்றோர் இனிப்பு வகை மிகவும் புகழ் பெற்றது. கோதுமை மாவு, தேங்காய்ப் பால், கருப்பட்டி ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவது. ‘துதலின் சுவை எப்படி இருக்கும்?’ என்று அதைத் தின்று பார்க்காதவர்கள் கேட்கலாம். ‘தேவ அமுதமாய் இருக்கும்!’ என்று அதைத் தின்று பார்த்தவர்கள் சொல்லலாம். ‘எனில் தேவ அமுதம் என்பது எப்படி இருக்கும்?’ என்று தின்று பார்க்காதவர்கள் அடுத்த கேள்வியைக் கேட்கலாம். யாருக்குத் தெரியும்? தேவ அமுதத்தைச் சுவைத்துப் பார்த்த தேவர்களையும் அசுரர்களையும் எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? ஒருவேளை தேடிக் கண்டுபிடித்துக் கேட்டாலுந்தான் அவர்கள் என்ன சொல்வார்கள்? ‘மெய்மறக்க இனிக்கும்’ என்று சொல்வார்களாய் இருக்கும். கேட்கிறவர்களோ ‘மெய்மறக்க இனித்தல் என்றால் என்ன?’ என்று அடுத்த கேள்வி கேட்பார்கள்.
கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?
மருப்புஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்!ஆழி வெண்சங்கே!
(நாச்சியார் திருமொழி, 64)
‘ஏ வெண்சங்கே! ஆனைக் கொம்பை ஒடித்த மாதவன், உன் வாயில் தன் வாய் வைத்து ஊதுகின்றானே! ஊதுகின்ற அந்தத் திருப் பவளச் செவ்வாய், கருப்பூரம் மணக்குமா? தாமரைப்பூ மணக்குமா? தித்திப்பாய் இருக்குமா? அறியார்வத்தை அடக்கமாட்டாமல் கேட்கிறேன்! சொல்!’ என்று சங்கை விசாரிக்கிறாள் ஆண்டாள்.
சுவையையும் மணத்தையும் சங்கு சொல்லுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். சொன்னாலும் கேட்கிறவரால் அதைத் தன்னுடைய அனுபவமாக ஆக்கிக்கொள்ள முடியுமா? இன்பங்களானாலும் சரி, துன்பங்களானாலும் சரி, தானே பட்டு அனுபவித்துத் தெரிந்துகொள்ளப்பட வேண்டியனவே தவிர, படித்தோ கேட்டோ தெரிந்துகொள்ளத் தக்கன அல்ல.
என் பாடு உனக்குத் தெரிந்திருக்கும்
மாணவர்கள் ஒரு தேர்வு எழுத வேண்டும். என்ன காரணம்பற்றியோ, பல நூறு காதங்கள் பயணம் செய்து போய், வேறோர் இடத்தில் அந்தத் தேர்வை எழுதுமாறு விதிக்கின்றன தேர்வுக்குப் பொறுப்பேற்றிருக்கிற அமைப்புகள். தாங்கள் படுகிற பாட்டைப் புலம்புகிறார்கள் மாணவர்களும் பெற்றோரும். வீக்கதூக்கம் பார்க்காமல் எல்லோருக்கும் நடுநிலையாக இருக்க வேண்டிய அமைப்புகளோ ‘யாம் அறியோம் பராபரமே’ என்று பொறுப்பு மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. படுகிறவர்களின் துன்பம், படாதவர்களுக்குத் தெரியாது.
கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்;
கேடு இலாதாய்! பழி கொண்டாய்!
படுவேன் படுவது எல்லாம்நான்
பட்டால் பின்னைப் பயன்என்னே?
கெடுமா நரகத்து அழுந்தாமே
காத்துஆட் கொள்ளும் குருமணியே!
நடுவாய் நில்லாது ஒழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே?
(திருவாசகம், ஆனந்தமாலை, 4)
நான் எளியவன்; படுவதெல்லாம் படுகின்றேன்; பட்டுக் கெட்டு நாசமாகிக் கொண்டிருக்கின்றேன். துன்பக் கேணியில் நான் அழுந்தாமல் கைதூக்கிவிட வேண்டிய குருமணியே, நீயோ என்னைக் காப்பாற்றாமல், ‘எனக்கென்ன?’ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன், நல்லதுக்கும் பொல்லதுக்கும் நடுவில் நிற்கின்றவன் என்று உனக்குப் பெயர். ஆனால் நீயோ நடுநிலையில் நில்லாது, விரும்புகிற சிலரைச் சேர்த்துக்கொள்கிறாய்; விரும்பாத சிலரைக் கைவிடுகிறாய். இது நல்லதா? அது சரி. படுவதைப் பற்றியும் கெடுவதைப் பற்றியும் உனக்கு என்ன தெரியும்? நான் படுகின்றவற்றையெல்லாம் நீயும் பட்டிருந்தால், நான் கெடுவது மாதிரி நீயும் கெட்டிருந்தால், என் பாடு உனக்குத் தெரிந்திருக்கும்.
பட்டால்தான் தெரியும் பல்லிக்கு
ஆகவே, துதலின் இன்பமாய் இருந்தாலும் சரி, திருப்பவளச் செவ்வாயின் தித்திப்பாய் இருந்தாலும் சரி, பல நூறு காதம் தாண்டிப் போய்த் தேர்வெழுதும் மாணவர்களின் துன்பமானாலும் சரி, அவரவர் பட்டால்தான் தெரியும். ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று நம்முடைய மக்கள் பேசுவதில்லையா? ‘பட்டால்தான் தெரியும் பல்லிக்கு; சுட்டால்தான் தெரியும் நண்டுக்கு’ என்று வழங்குவதில்லையா?
துதலின் சுவையை அறிய விரும்பினால், துதலை வாங்கிச் சுவைத்துப் பார்த்துவிடுவதுதான் வழி. ‘மருப்பு ஒசித்த’ மாதவனின் வாய்ச்சுவையையும் நாற்றத்தையும் அறிய விரும்பினால், மாதவனை வளைத்திழுத்து இதழோடு இதழ் வைத்து முத்தாடிப் பார்த்துவிடுவதுதான் வழி. அல்லாது சுவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டிருப்பதன்று.
ஒன்றுகண் டீர்உல குக்குஒரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயிர் ஆவதும்
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்குஇது தித்தித்த வாறே (திருமந்திரம் 2962)
பல்வேறு பெயர்களில் தெய்வத்தைக் குறித்தாலும் தெய்வம் என்பது ஒன்றுதான். அது உலகத்துக்கு அப்பாலே நின்று, உலகத்தைத் தன் அதிகாரத்தால் ஏவிக் கொண்டிருக்கவில்லை; மாறாக, உடம்புக்குள் உயிர்போல உலகத்துக்குள்ளேயே நின்று எல்லாவற்றையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. அதை நமச்சிவாயப் பழம் என்க. மிக நல்ல சுவை உடையது என்ன சுவை என்பீர்களேயானால், அனுபவித்துத் தின்று பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன்—தித்திப்பு என்கிறார் திருமூலர்.
எங்கனம் சொல்வேன்
தித்திப்பு என்பது சரி. என்ன மாதிரியான தித்திப்பு? திகட்டுகின்ற தித்திப்பா அல்லது திகட்டாத தித்திப்பா? விளக்குக என்றால், எவ்வாறு விளக்க?
திருமூலர் தன் இயலாமையைக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார்:
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்!
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்என்றால் சொல்லுமாறு எங்ஙனே?(திருமந்திரம் 2944)
மகளுக்குத் திருமணம். நாற்றைப் பிடுங்கி நடுவதைப்போல வேற்றுக் குடும்பத்துக்குள் புகுத்தப் போகிறார்கள் மகளை. புகுந்த வீட்டில் மாமி இருப்பாள்; நாத்தூண் நங்கை இருப்பாள்; வேறொரு சூழல் இருக்கும். தக்கவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளாவிட்டால் சங்கடப்பட்டுப் போவாள் மகள். எனவே, எந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள என்று தான் வாழ்ந்த வாழ்வை முன்வைத்து மகளுக்கு வாழ்க்கைப் பாடம் எடுக்கிறாள் தாய். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவள், மகள் தன் மணாளனோடு உறவாடித் தோய்ந்து பெற வேண்டிய இன்பத்தின் தன்மையை மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த அனுபவம் தாய்க்குக் கிடையாது என்பது அன்று. அந்த அனுபவத்தைச் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதே.
‘கணவனோடு உறவாடி மகளைப் பெற்றவளே! அந்த உறவாட்டத்தில் நீ பெற்ற இன்பத்தை உன் மகளுக்குச் சொல்’ என்றால் தாய் எவ்வாறு சொல்வாள்? கருதிப் பார்க்க விரும்பாமல் எல்லாவற்றையும் கண்ணில் பார்க்க விரும்புகிறவர்களே! தனிநிலை அக அனுபவங்களை வெளிப்படுத்திக் காட்டச் சொல்லாதீர்கள். யாரும் அப்படிக் காட்ட முடியாது. எனவே, உங்கள் முகக் கண்களை மூடிவிட்டு அகக் கண்களைத் திறந்து பாருங்கள். எதைப் பெற விரும்புகிறீர்களோ அதைத் தேடுங்கள்; அதில் தோயுங்கள். கண்டுகொள்வீர்கள் என்று கடவுளைத் தேடுதலைத் தனிநிலை அக அனுபவமாக்குகிறார் திருமூலர்.
துதலின் சுவை அறியும் அனுபவம்கூடத் தனிநிலை அனுபவம் என்ற நிலையில், தட்சிணைகளோடு தக்கவகையில் வழிபட்டால் கடவுள் அனுபவத்தையே கைவசப்படுத்தித் தருவதாகச் சொல்கிற மத நிறுவனங்களையும் மத ஆசிரியர்களையும்பற்றி என்ன சொல்ல?
பார்த்தவர் சொல்லவில்லை; சொன்னவர் பார்க்கவில்லை.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.
(விண்டு சுவைப்போம் திருமந்திரத்தை...)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago