உயிர் வளர்க்கும் திருமந்திரம் 28: ஒன்று அது பேரூர்

By கரு.ஆறுமுகத்தமிழன்

 

நா

ய் ஒன்று, குன்றைப் பார்த்துக் குரைக்கிறது. என்ன நோக்கம்? இதற்கென்ன நோக்கம் வேண்டி இருக்கிறது? நாய்க்குக் குன்றைப் பற்றி ஒரு சுக்கும் தெரியாது; ஆகையால் குரைக்கிறது. ‘நாய்க்கு என்ன வேலை? கஞ்சியைக் கண்டால் குடிக்க வேண்டியது; கதுப்பைக் கண்டால் குரைக்க வேண்டியது’ என்று சொல்வழக்குகூட உண்டு. நாய் பசியே இல்லாமலும் கஞ்சி குடிக்கும்; தெரிந்துகொள்ளவே முயலாமலும் குன்றைப் பார்த்துக் குரைக்கும்.

ஒன்றுஅது பேரூர்; வழிஆறு அதற்குஉள;

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது, தீதுஇது என்று உரை யாளர்கள்,

குன்று குரைத்துஎழு நாயைஒத் தார்களே. (திருமந்திரம் 1557)

ஓர் ஊருக்குப் போவதற்கு ஆறு வழிகள் உள்ளன. எந்த வழியில் போனாலும் ஊரை அடையலாம். யார் யாருக்கு எந்தெந்த வழி தோதான வழியோ அந்த வழியாக, அவரவர் வசதிக்கேற்ப ஊரை அடைவார்கள். ‘எனக்குத் தெரிந்த வழி இந்த வழி ஒன்றுதான்; ஆகவே, இதன் வழியாகத்தான் அந்த ஊரை நீங்கள் அடைந்தாக வேண்டும்; வேறு வழிகளில் அடைந்தால் உங்கள் அடைவை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று அடம் பிடிக்கிற மூடரை என்னவென்று சொல்வது? எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளவே முயலாமல், இந்த மதம் நல்லது, அந்த மதம் தீயது என்று கிறுக்குத்தனமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசுகிறவர்களைக் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயோடு ஒப்பிடாமல் வேறென்ன செய்வது?

திருமந்திரக் கருத்தை அப்படியே வழிமொழிகிறது சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான சிவஞான சித்தியார்.

...ஒருபதிக்குப் பலநெறி கள்உள ஆனாற்போல்

பித்தர் குணம்அது போல ஒருகால் உண்டாய்ப்

பின்ஒருகால் அறிவுஇன்றிப் பேதை யோராய்க்

கத்திடும் மாக்கள்உரைக் கட்டில் பட்டோர்

கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.

(சிவஞானசித்தியார், மங்கல வாழ்த்து, 8)

ஓர் ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். எந்த வழியில் போனாலும் ஊரை அடைவதுதான் நோக்கம் என்பது விளங்காத பேதைகள், ‘வழி என்றால் என்ன தெரியுமா? அந்த வழியில் எப்படிப் போக வேண்டும் தெரியுமா?’ என்று எல்லாம் தெரிந்ததுபோல முழங்குகின்ற முட்டாள்களின் பேச்சில் மயங்கி அவர்கள் பின்னால் போவார்கள். இவ்வாறாகப் பொன்மலைக்குப் போகக் கிளம்பியவர்கள் கடைசியில் கடலில் போய் விழுவார்கள்.

நம்பினார்கள் நம்பினார்கள்

மதம் என்பது அச்சத்தில் காலூன்றி நிற்பதாக ஒரு பொதுக் கருத்து உண்டு. முன்பின் அறிந்திராத (கடவுள் என்ற) ஒன்றைப் பற்றிய அச்சம், தோல்வியைப் பற்றிய அச்சம், சாவைப் பற்றிய அச்சம் என்று அச்சமே மனிதர்களை ஆட்டுகிறது. இந்த அச்சம்தான் மனிதர்களை மதத்தை நோக்கிச் செலுத்துகிறது. எதைக் கண்டெல்லாம் மனிதர்கள் அஞ்சினார்களோ அதையெல்லாம் வணங்கத் தொடங்கினார்கள். பாம்புக்கு அஞ்சினார்கள்; பாம்பை வணங்கினார்கள். தீயைக் கண்டு அஞ்சினார்கள்; தீயை வணங்கினார்கள். தலைவர்களுக்கு அஞ்சினார்கள்; தலைவர்களையும் தலைவர்களின் வாகனங்களையும்கூட வணங்கினார்கள். கடவுளுக்கு அஞ்சினார்கள்; கடவுளை வணங்கினார்கள். வணங்கியவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் வணங்காதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் நம்பினார்கள்.

அச்சத்தை அடிப்படையாகக் கொண்டே மதங்கள் கட்டமைக்கப்பட்டன. எதை வணங்க வேண்டும், எங்கே வணங்க வேண்டும், எப்படி வணங்க வேண்டும், எதைப் படைத்து வணங்க வேண்டும் என்றெல்லாம் சடங்குகள் வரைமுறைப்படுத்தப்பட்டன. இந்தச் சடங்கு வரைமுறைகளை மீறினால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகிவிடாது. என்றாலும், ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் சடங்குகளை நிலைப்படுத்தியது. சடங்குகள் மதத்தைக் கெட்டிப்படுத்தின. கெட்டிப்படுத்தப்பட்ட மதங்கள் நெகிழ மறுத்தன. மக்கள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கினர்.

பேரன்பு, பெருவியப்பு, பெருமகிழ்ச்சி

இந்த வகையாக மதங்களை உருவாக்கியதில் அச்சத்துக்கு ஒரு மறுக்க முடியாத பங்கு உண்டு என்றாலும், அச்சம் என்ற ஒற்றை உணர்ச்சி மட்டுமே மதத்தை நிரப்பிவிடவில்லை. அச்சத்துக்கு அப்பால் பேரன்பு, பெருவியப்பு, பெருமகிழ்ச்சி என்று பல்வேறு உணர்ச்சிகளாலும் ஆனது மதம்.

அச்சத்துக்கு மாற்று அன்பு. அச்சத்தை முறிப்பது அன்பு. அன்பைத் தங்கள் மத உணர்ச்சியாகக் கொண்டவர்கள் அச்சத்தையும் ஆணவத்தையும் எதிர்த்துச் சண்டையிடுவார்கள். அச்சத்தைத் தங்கள் மத உணர்ச்சியாகக் கொண்டவர்களோ மாற்று மதத்தவரை எதிர்த்துச் சண்டையிடுவார்கள். அன்பு எல்லா உணர்ச்சிகளையும் ஆதரித்து நெகிழச் செய்கிறது; அச்சமோ எல்லா உணர்ச்சிகளையும் மறுதலித்து இறுகச் செய்கிறது.

‘அச்சம் குரூரத்தை வளர்க்கிறது’ என்கிறார் மேலைநாட்டு மெய்யியல் அறிஞரான பெர்ட்ரண்ட் ரசல். கடும்நெரிசலில் சிக்கிக்கொண்டவர்கள், ‘நெரிசல் நெகிழட்டும், ஒவ்வொருவராகப் போவோம்’ என்று பொறுமை காப்பதில்லை. பதற்றமும் பரபரப்பும் அடைவார்கள். ‘வெளியேற முடியாமல் போய்விடுமோ, நெரிசலில் மூச்சடைத்தோ மிதிபட்டோ செத்துவிடுவோமோ’ என்ற அச்சத்தில் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பக்கத்திலிருப்பவர் பெரியவரா குழந்தையா குட்டியா என்றும் பார்க்காமல் குரூரமாக எக்கித் தள்ளித் தமக்கு வழியை உண்டாக்கிக்கொண்டு வெளியேறவே முயல்வார்கள். வாய்ப்பிருந்தால், தான் மீண்டு வந்த ஆபத்தை வரலாற்றில் பதிவுசெய்வதற்காக, நெரியும் கூட்டத்தைப் பின்னாலும் தன்னை முன்னாலும் வைத்து, தப்பிப் பிழைத்த சாகச உணர்ச்சி முகத்தில் தொனிக்க, ஒரு ‘தற்படம்’ (செல்ஃபி) எடுத்துக்கொள்வார்கள்.

அந்த மயக்கம் ஒழிக

அச்சத்தில் வளர்ந்த மதங்கள், அச்சத்தை வளர்க்கும் மதங்கள், நெகிழ்ச்சியின்றிக் கெட்டிப்பட்டு நிறுவனமயமான மதங்கள் பிறரைப் பற்றிக் கருதியும் பார்க்காத குரூரத்தையே விளைபயனாக்கித் தருகின்றன. ‘நான் முன்னால், நீ பின்னால்; இதை மீறி நீ முண்டினால் உனக்கும் எனக்கும் முரண்; உன்னை எக்கிப் பின்னுக்குத் தள்ளுவேன்; நீ நெரிபட்டுச் சாவாய்’ என்று வன்முறைகள் வழியாகப் பிறருக்குப் பாடம் படித்துக் கொடுக்கின்றன.

‘காணாப் பொருளாகிய கடவுளை நாங்கள் கண்டோம் கண்டோம்’ என்று கூத்தாடுகின்றன மதங்கள். ‘கண்ட கடவுளை எங்களுக்கும் காட்டு’ என்று கேட்போருக்குக் கடவுளைச் சொற்களாலும் கற்களாலும் வடிவநிலைப்படுத்திக் காட்ட முயல்கின்றன. அவ்வாறு முயல்கின்ற மதங்களைப் பற்றித் திருமூலர் சொல்கிறார்:

ஆன சமயம் அதுஇது நன்றுஎனும்

மான மனிதர் மயக்க மதுஒழி

கானம் கடந்த கடவுளை நாடுமின்;

ஊனம் கடந்த உருஅது ஆமே

(திருமந்திரம் 1545)

அந்தச் சமயம் நல்லது, இந்தச் சமயம் நல்லது என்று மக்கள் பல திறமாய்ப் பற்று வைத்து மயங்குவார்கள். அந்த மயக்கம் ஒழிக. கடவுள் சொற்களைக் கடந்தவன்; தன் உருவம் எழுதிய கற்களையும் கடந்தவன். அவனை நாடும் வகையில் நாடுக.

நாடும் வகை எது? சொற்களில் ததும்புகிற கானத்தையும் கற்களில் ததும்புகிற ஊனத்தையும் கடந்து நிற்கிற கடவுளை எங்கே கண்டுகொள்வது?

ஆயத்துள் நின்ற அறுசமய யங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா;

மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்

பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே (திருமந்திரம் 1530)

கடவுளின் இருப்பிடத்துக்கு உங்களை அழைத்துச் செல்வதாகக் கூறும் மதங்களுக்கு உண்மையிலேயே கடவுளின் இருப்பிடம் தெரியாது. அவற்றிடத்தில் கடவுள் இல்லை. கடவுள் உங்களிடத்தில் இருக்கிறார்; உங்களுக்குள் இருக்கிறார். மனைவி மக்களையே பார்த்துக்கொண்டிருப்பதால் கடவுளைப் பார்க்கத் தெரியாமல் பரிதவிக்கிறவர்களே! அகப்பட்டு நிற்கிற கடவுளுக்கு அகப்படுங்கள்.

(அகம் தேடுவோம்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்