திருவண்ணாமலையில் 2-வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2-வது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை வழிபட்டனர்.

‘மலையே மகேசன்' என போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் 14 கி.மீ. கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர்.

பக்தர்களின் கிரிவல யாத்திரை 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அண்ணாமலையாரை வழிபட்டனர். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில், துர்கை அம்மன் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலைமோதியது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ராஜகோபுரம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE