திருநள்ளாறு பிரம்மோற்சவம்: தங்க காக வாகனத்தில் சனி பகவான் வீதியுலா

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, சனி பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா வெள்ளிக்கிழமை (மே 20) இரவு நடைபெற்றது.

சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா கடந்த 5- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 12-ம் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, 13-ம் தேதி உன்மத்த நடனத்துடன் செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, 14-ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திலிருந்து இந்திர விமானத்தில் உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபற்றது.

17-ம் தேதி இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சகோபுர வீதியுலாவும் 19- ம் தேதி 5 தேர்கள் தேரோட்டமும் நடைபெற்றன.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தங்க காக வாகனத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவான்

நேற்று இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி சகோபுர வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க காக வாகனத்தில் எழுந்தருளச் செய்து மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது. முன்னதாக செண்பக தியாகராஜ சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் போதும், சனிப்பெயர்ச்சி விழாவின்போதும் மட்டுமே சனிபகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE