முத்துக்களைப் பயிர் செய்த குட்டிக் கண்ணன்

By என்.ராஜேஸ்வரி

ஒரு சமயம் ராதையின் தலைமையில் அவளது தோழிகள் தங்கள் இல்லத்தின் அருகில் உள்ள நிலத்தை நீர் பாய்ச்சி உழுது, பயிரிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது இடையில் வந்த கண்ணனும் அவனுடைய தோழர்களும், ராதையிடம் என்னவென்று கேட்டார்கள். ராதை தன் கையைப் விரித்துக் காட்டினாள். அதில் முத்துக்கள் ஒளிர்ந்தன. இது எதற்காக ராதா என்று கேட்டான் கண்ணன்.

அப்போது மூன்று நான்கு வயதே நிறைந்திருந்த கண்ணனுக்கு ராதா செய்வது அனைத்தையும் பார்ப்பதில் ஆச்சரியம் இருந்தது. இந்த முத்துக்களை நாங்கள் பயிரிடுவோம். ஒரு முத்து பயிரிட்டால் அது நூறு முத்துக்களாக விளையும். அவற்றைப் பறித்து நானும் என் தோழிகளும் மாலைகளாக்கிக் கழுத்தில் போட்டுக்கொள்வோம் என்று பெருமிதத்துடன் கூறினாள்.

இதனைக் கேட்ட கண்ணனுக்கு ஆசையாக இருந்தது. ராதா எனக்கும் ஒரு முத்து மாலை தருவாயா எனக் கேட்டான். ராதையோ எங்களிடமோ விதை முத்துக்கள் பத்துதான் உள்ளன. அவை விளைந்தால் எங்களுக்கு மட்டுமே மாலைகள் செய்யப் போதுமானதாக இருக்கும் என்று மறுத்துவிட்டாள். இதனைக் கேட்ட கண்ணனின் அண்ணா பலராமனும், கண்ணனின் நண்பர்களும் தங்களுக்கும் முத்து மாலை வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

கண்ணன் தானும் முத்து பயிரிட முடிவு செய்தான். யசோதா அம்மாவிடம் ஓடிச் சென்று பின்புறமாகக் கழுத்தை கட்டிக்கொண்டு கொஞ்சினான். இருட்டினாலும் வீட்டுப் பக்கமே திரும்பாத கண்ணன் பகல் பொழுதிலேயே வந்திருக்கிறானே என்று எண்ணியபடியே, என்ன வேண்டும் கண்ணா என்று கேட்டாள்.

முத்து வேண்டும் என்றது குழந்தை. யசோதைக்கு ஆச்சரியம், முத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, நான் பயிர் பண்ணப் போறேன் அம்மா என்று குழந்தை கொஞ்சியது.

தாயான யசோதா கலகலவென்று சிரித்தாள். முத்தைப் பயிரிடலாம் என்று யார் சொன்னார்கள் எனக் கேட்டாள். ராதாதான் அம்மா சொன்னாள் என்றான் கண்ணன்.

உதட்டை சுழித்துச் சிரித்த யசோதா அப்படியென்றால் சரியாகத்தான் இருக்கும் என்றபடியே நன்கு பெருத்த முத்துக்களை, கண்ணனின் கைகளில் வைத்து மூடினாள். பத்திரம் கண்ணா என்றாள் சிரித்துக்கொண்டே. இரு கைகளையும் மூடியபடியே குதித்து ஓடியது அந்தக் குழந்தை.

கண்ணன் தன் நண்பர்களை எல்லாம் அழைத்தான். ராதா எப்படியெல்லாம் செய்கிறாளோ அப்படியெல்லாம் செய்து முத்துக்களைப் பயிரிடுவோம். நாமும் மாலை கட்டிக் கழுத்தில் போட்டுக்கொள்ளலாம் என்றது அக்குழந்தை.

முத்தை வரிசையாக கண்ணனின் நண்பர்கள் விதைத்தார்கள். நீரும் பாய்ச்சினார்கள். இரவு பகலாகக் கண்ணனே காவல் காத்தான். ராதையின் விளை நிலத்தைக் கண்ணன் கண் கொண்டுகூடப் பார்க்கவில்லை. கண்ணன் விதைத்த முத்துக்கள் முளைவிட்டுத் துளிர்த்தன. தன் நிலத்தின் நடுவே அமர்ந்து கண்ணன் குழலிசைத்தான்.

செடிகள் மளமளவென்று வளர்ந்தன. செடிகளின் கிளை முனைகளில் எல்லாம் குண்டு மல்லிகை மொட்டுக்கள் போல் வெண்ணிறத்தில் ஒளிரும் மிகப் பெரிய முத்துக்கள் தோன்றின. கண்ணன் குழாம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தது.

குட்டிக் கண்ணனோ தனது பொன் வண்ணப் பீதாம்பரத்தில், முத்துக்களை பறித்துப் போட்டு பெரிய மூட்டையாகக் கட்டினான். அப்பெரிய மூட்டையை முதுகில் தூக்கிப் போட்டுக்கொண்டான். யசோதாவின் முன் அத்தனையையும் கொட்டி, அம்மாவுக்கும், தனக்கும், பலராமனுக்கும், அப்பா நந்தகோபனுக்கும், தன் நண்பர்களுக்கும் முத்து மாலைகளைக் கட்டித் தருமாறு கூறினான்.

யசோதாவும் முத்து மாலையைக் கோர்த்தாள். கண்ணனோ விளையாடச் சென்றுவிட்டான். அவன் இல்லம் திரும்புவதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மாலைகளைக் கோர்த்து, ஒரு கூடை நிறைய அடுக்கி வைத்துவிட்டாள். கண்ணன் வரட்டும் அவன் கைகளாலேயே முத்து மாலையைத் தன் கழுத்தில் போடச் சொல்லலாம் என்று காத்திருந்தாள்.

கண்ணன் இல்லத்துக்குள் நுழைகிறான். கூடவே கண்ணைக் கசக்கிக்கொண்டு ராதா வந்தாள். கண்ணன், யசோதாம்மாவிடம், மாலை கோர்த்துவிட்டாயா அம்மா என்று குழைந்து கேட்கிறான். கூடை நிறைய முத்துமாலைகளைக் காட்டினாள் யசோதா.

அக்கூடையைத் தூக்க முடியாமல், தூக்கி வந்த கண்ணன், வீட்டுக்கு வந்த ராதாவிடம் அத்தனை மாலையும் உனக்குத்தான் என்று கொடுத்துவிடுகிறான். கண் விரித்துப் பார்த்த யசோதாவிடம், ராதாவின் நிலத்தில் முத்தே விளையாமல் போனதால் அவளது அழுகையை நிறுத்த அந்த மாலைகளைக் கொடுத்துவிட்டதாக கூறினான்.

கண்ணன் அம்மாவையும் ஏமாற்றவில்லை. அம்மாவின் கழுத்தில் ஒரு முத்து மாலை யைப் போட்டு, அம்மாவின் முகத்தைத் தன்புறம் திருப்பி அழகு பார்த்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

21 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்