மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - விழாக்கோலம் பூண்ட மதுரை

By சுப.ஜனநாயகச் செல்வம்


மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலையில் 8.51 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து திருமணமான பெண்கள் புதிய தாலிக்கயிற்றை அணிந்துகொண்டனர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறும். இந்த வருடத்துக்கான சித்திரைத் திருவிழா ஏப். 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் தினமும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் திருவீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 8-ம்( ஏப்.19) நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது‌. 9ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு திக்கு விஜயம் நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் இன்று அதிகாலை அழகிரிசாமி நாயுடு, சூறாவளி சுப்பைய்யா், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்

பின் முத்துராமய்யர் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் கன்னி ஊஞ்சலாடிய பின்பு திருக்கல்யாண மேடைக்கு 8 மணிக்கு வந்தனர். பவளக்கனிவாய் பெருமாள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினர். வண்ணப்பூக்களாலும், பச்சரிசியாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனித்தனியாக எழுந்தருளினர்.

தொடர்ந்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் வேத மந்திரங்கள் முழங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது.

அம்மானுக்கு திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமணமான பெண்கள் புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. பின்னர் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டன. இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோயில் அறங்காவல் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கலந்துகொண்டனர்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE