உ
லகத்தில் நாம் காண்கிற அன்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மகான்கள், யோக்கியர்கள், சத்தியசந்தர்கள், பரோபகாரிகள், ஞானிகள், அநுக்கிரக சக்திவாய்ந்த உத்தமர்கள் ஆகியோரிடம் அவர்களது குணத்துக்காக அன்பு ஏற்படுகிறது. பந்துக்களுடனும் சிநேகிதர்களுடனும் சேர்ந்து பழகுவதால் அவர்களிடம் ஒருவித அன்பு உண்டாகிறது. மூன்றாவது, ஒரு காரியத்துக்காக, லாபத்துக்காகச் சிலரிடம் அன்பு வைக்கிறோம். உதாரணமாக, வியாபாரத்தில் சகாயம் செய்வார் என்பதற்காக ஒரு செல்வந்தரிடம் அன்பு பாராட்டுகிறோம். சம்பளம் கொடுக்கிறார் என்பதால் எஜமானரிடம் அன்பாக இருக்கிறோம்.
இந்த மூவகை அன்பும் உண்மையானதல்ல; சாசுவதமானதல்ல. எஜமானர், “நீ போய்விடு” என்றால் உடனேயே நம் அன்பும் போய்விடும். பழகினவர்கள் தூர தேசம் போனாலோ, காலகதி அடைந்தாலோ, வேறு விதத்தில் அவர்களுடன் பழக்கம் போய்விட்டாலோ நாளடைவில் அன்பும் போய்விடுகிறது. முதலில் பிரிவின்போது அழுத அழுகை, அப்புறம் எப்படியோ மறைந்துவிடுகிறது. உண்மையான அன்பானால், அந்த அழுகை என்றைக்கும் அப்படியேதானே இருக்க வேண்டும்? உத்தம புருஷர்களான மகான்களிடம் வைக்கும் அன்புகூட நிரந்தரமில்லைதான். மகான்களிடம் உத்தம குணம் குறைந்தால் — அல்லது குறைந்ததாக நமக்குத் தோன்றினாலே போதும் — அவரிடம் வைத்த அன்பும் குறைந்துவிடுகிறது.
அதுவே உண்மை அன்பு
மூவகை அன்பும் காரணத்தால் ஏற்பட்டது. எனவே தான் அவை நிரந்தரமாக இருக்கவில்லை. உத்தம புருஷர்களிடம் இன்ன குணம் இருக்கிறது என்பதால், அந்தக் குணத்தைக் காரணமாகக் கொண்டே அன்பு வைக்கிறோம். அதோடு அவர்கள் நம்மை உத்தாரணம் செய்வார்கள் (உய்விப்பார்கள்) என்ற சுய காரியமும் உள்ளூற இருக்கவே செய்யும்.
இப்படியெல்லாம் எக்காரணமும் வியாஜமும் இன்றி பிரியமாக இருப்பதுதான் உண்மை அன்பு. ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி, அவருக்கு ஆத்ம குணங்களும் அநுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி – அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.
அப்படிப்பட்ட அன்பு யாருக்காவது இருக்கிறதா? ஒரே ஒருவருக்கு இருக்கிறது. சுவாமிதான் அந்த ஒரே ஒருவர்.
சுவாமிக்கு நம்மிடம் இருக்கும் அன்புக்கு ஒரு காரணமும் இல்லை. காரணத்தை அவர் பாராட்டுவதாக இருந்தால், நமக்கு ஒருவேளை சோறுகூடப் போட மாட்டார்! நம் பிழைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு, நம்மை இந்த மட்டும் காப்பாற்றுபவர் அன்பு மயமான பரமேசுவரனே. இந்தப் பரமசிவ அன்பின் திரிபே உலகில் காணும் மூன்று வகை அன்புகளும்.
அந்தக் காரணமற்ற பரமசிவ அன்பை நாமும் அப்பியசிக்க வேண்டும். தப்புச் செய்பவன் என்று காரணம் பார்த்து நாம் ஏன் ஒருவனை வெறுக்க வேண்டும்? நாமே தப்புச் செய்கிறோமே, அப்போதும் நம்மை நாமே உதறித் தள்ளுகிறோமா? அப்படியே மற்றவர்களிடத்திலும் இருக்க வேண்டும். மகா பெரியவர்களிடத்தில் அன்பு இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவனிடமே அதிக அன்பு வைக்க வேண்டும். “நாம் தப்பு செய்வது போலவே இவனும் செய்கிறான். இவன் மனம் இவனை இப்படித் தூண்டுகிறது. அந்த மனத்தை நல்லதாக்க முயல்வோம்” என்று நினைக்க வேண்டும். ஈசுவர கிருபையால் அநுக்கிரக சக்தி பெற்றிருப்பவர்கள், அதைக் கொண்டு பாவியிடம் உள்ள பாவங்களை நிவர்த்தி பண்ணுவதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.
லோகமே குரு
ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதனிடம் காரணமில்லாத தூய அன்பை வைக்கப் பழகிவிட்டால், பின்னால் அதுவே நம்மை அன்பு மயமாக்கி, அந்த அன்பை எல்லோரிடமும் பரப்ப உதவி புரியும். குருவிடம் இவ்விதம் பயன் எதிர்பாராமல் பூரண அன்பு வைக்கப் பழக வேண்டும் என்பது பெரியோர்கள் ஏற்படுத்தியுள்ள விதி. குருவிடம் காரணம் பார்க்காமல், வியாஜம் இல்லாமல் அன்பு செலுத்த ஆரம்பிக்க வேண்டும். பின்பு அந்த அன்பு தருகிற ஆனந்தத்தில் பழகிப் பழகி லோகம் முழுவதும் குருவாக நினைத்து, சமஸ்தப் பிராணிகளிடமும் காரணமில்லாத சமமான அன்பு செலுத்த வேண்டும். லோகம் முழுவதும் அன்பை நிரப்பினால் அதுவே ஆனந்த நிலை, அதுவே பரிபூர்ண நிலை; அதுவே பரம சாந்தி.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago