மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ்பெற்றவை. சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று ஏப்.12-ல் காலை கொடியேற்றம் நடைபெற்றது.

இன்று கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் இனி தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெறும். முக்கிய விழாக்களான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வரும் 19-ம் தேதியும், திக்விஜயம் 20-ம் தேதியும்,மீனாட்சி திருக்கல்யாணம் 21-ம் தேதியும், 22-ல் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும், இந்த திருவிழாவுடன் இணைந்த, மற்றொரு பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி கள்ளழகர் எதிர் சேவையும், 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளன. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண, ஆற்றின் இருகரைகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை வைகை ஆற்றில் மதுரை மாநகராட்சி, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE