கிறிஸ்துவின் தானியங்கள்: புயலுக்குத் தப்ப முடியுமா?

By அனிதா அசிசி

யோ

ர்தான் நதியும் கலிலேயா கடலும் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நீர்நிலைகள். யூதேயா வனப்பகுதியில் உருவாகும் யோர்தான் நதியின் ஒரு கிளை கலிலேயா கடலில் கலக்கிறது. கலிலேயா மலைப்பகுதியில் உள்ள நாசரேத் என்னும் சிறு நகரத்தில்தான் இயேசு வளர்ந்தார். இந்தச் சிறிய நகரம் கலிலேயா கடல் என்ற பரந்து விரிந்த பெரிய ஏரிக்கு மேற்கே இருக்கிறது. கலிலேயா கடலில் மீன்பிடிப்பதையே தங்கள் ஜீவாதாரத் தொழிலாகச் செய்துகொண்டிருந்த சீமோன், அந்திரேயா யாக்கோபு, யோவான் ஆகிய நால்வரையும் அழைத்து, “வாருங்கள் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குகிறேன்” என்று ஆசீர்வதித்து சீடர்களாகச் சேர்த்துக்கொண்டார். கலிலேயா கடற்கரையின் ஓரத்தில் அசைந்தாடிக்கொண்டிருக்கும் படகில் அமர்ந்தபடி மக்களுக்கு இயேசு போதித்திருக்கிறார்.

தனிமைப் பயணம்

இப்படிப்பட்ட கலிலேயா கடலில் அடிக்கடி பயணம் செய்து அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்கு இயேசு தன் சீடர்களோடு சென்று வந்ததை விவிலியம் சுட்டிக்காட்டுகிறது. அப்படித்தான் கலிலேயா கடலில் சீடர்களை ஒருமுறை தனியாக பெத்சயிதா என்ற ஊருக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்து இயேசு அற்புதம் செய்த நாளில் தன் தந்தையாகிய கடவுளிடம் தனித்திருந்து பிரார்த்தனைசெய்த இயேசு, சீடர்களை முன்னதாகச் செல்லுமாறு பணித்தார். தங்கள் போதகர் இல்லாமல் தனியே பயணித்த சீடர்கள் கலிலேயா கடலில் புயலை எதிர்கொண்டனர். அந்தக் கடலில் மீன்பிடித்து வாழ்ந்த வகையில் நான்கு சீடர்கள் திடீர் சூறைக்காற்றையும் புயலையும் பலமுறை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், கடவுளின் அதிகாரத்தில் இயங்கும் இயற்கையை எதிர்த்து சாமானிய மனிதர்களால் என்ன செய்துவிட முடியும். எதிர் காற்று கடும் சூறைக்காற்றாக மாறி வீசியதால், துடுப்புகளை வலிக்க அவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்று மாற்கு எழுதியிருக்கிறார்.

மந்தமான இதயம்

அப்போது சூறைக்காற்று புயல்போல் வீசியதால் படகைச் செலுத்த முடியாமல் சீடர்கள் திணறினார்கள்; இயேசு அதைத் தன் மனக்கண்ணால் கண்டு, சுமார் நான்காம் யாமத்தில் கடல்மேல் நடந்து அவர்களை நோக்கி வந்தார்; ஆனால், அவர்களைக் கடந்துபோவதுபோல் போனார். அவர் கடல்மேல் நடந்து வருவதை அவர்கள் பார்த்தபோது, “ஏதோ மாய உருவம்!” என்று நினைத்து அலறினார்கள். எல்லாருமே அவரைப் பார்த்துக் கலக்கமடைந்தார்கள். உடனே அவர், “தைரியமாக இருங்கள், நான்தான், பயப்படாதீர்கள்”என்று சொன்னார். பின்பு அவர்களுடன் படகில் ஏறினார், அப்போது காற்று அடங்கியது. அதைப் பார்த்து அவர்கள் மிகவும் பிரமித்தார்கள். ரொட்டிகளை வரவழைத்தவரால் இந்த அற்புதத்தையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய இதயம் மந்தமாகவே இருந்தது (மாற்கு 6:48-52).

அமைதியாக இரு!

இயேசு கடலில் நடந்துவந்து சீடர்களின் கலக்கத்தைப் போக்கிய சம்பவத்துக்கு முன்னர் கலிலேயா கடல் பட்டணத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததை மாற்குவே பதிவு செய்திருக்கிறார். கடுகு விதை உவமையைக் கூறி பிரசங்கித்த நாளில் மாலையில் இயேசு தன் சீடர்களோடு கப்பர்நகூம் நகரத்துக்குப் படகில் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவரது படகைப் பின்தொடர்ந்து வேறு சில படகுகளும் வந்துகொண்டிருந்தன. அப்போது பயங்கரமான புயற்காற்று வீச ஆரம்பித்தது; படகு கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில் இருந்தது.

ஆனால், அவர் படகின் பின்புறத்தில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அதனால், அவர்கள் அவரை எழுப்பி, “போதகரே, நாம் சாகப்போகிறோம்! உங்களுக்குக் கவலையே இல்லையா?” என்று பதற்றமும் பரிதவிப்புமாகக் கேட்டார்கள். அப்போது, அவர் எழுந்து காற்றை அதட்டினார்; கடலைப் பார்த்து, “ஆழியே அமைதியாக இரு!” என்று சொன்னார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது. அதன் பின்பு, “ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள், இன்னும் உங்களுக்கு விசுவாசம் வரவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் பீதியடைந்து, “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

வாழ்க்கையில் வீசும் புயல்

இயேசுவின் காலத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட இப்பேர்பட்ட அற்புதமான அருள் அடையாளங்களைப் பார்க்கும் வாய்ப்பு இன்று நமக்குக் கிடைப்பதில்லை. இன்று மிகவும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்துவரும் சாமானிய மனிதர்களாகிய நாம் இயற்கைச் சீற்றங்களை எதிர்த்துப் போராட முடியாமல் துவண்டுபோகிறோம். அவ்வளவு ஏன், நம் சொந்த வாழ்க்கையில் இழப்பு, பிரிவு, வேதனை, நோய் எனும் புயல்கள் அடித்துவிட்டால் துவண்டுபோய்விடுகிறோம். ஆனால் இந்தப் புயலை எதிர்கொள்ள இயேசு நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்கிறார். புயலுக்கு நடுவிலும் பயணிக்க முடியும் விசுவாசம் வை, பதற்றமடையாதே என்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்