வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை: பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருவாரூர்: ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளை, கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, நடப்பாண்டு கடந்தபிப்ரவரி 14-ம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. மார்ச் 24-ம் தேதி குருத்தோலை பவனியும், மார்ச் 28-ம் தேதி பெரியவியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சியும், 29-ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப் பாதை ஊர்வலமும் நடைபெற்றன.

தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பின்னர் வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் இயேசுகிறிஸ்து உயிர்ப்பிக்கும் பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘பாஸ்கா ஒளி’ ஏற்றப்பட்டது. கலை அரங்க வளாகத்தின் மையப் பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். அப்போது பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்தியை ஏந்தியவாறு ஜெபம் செய்தனர். தொடர்ந்து சிலுவைக் கொடியை கையில் தாங்கிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், ஈஸ்டர் திருநாளை சிறப்புபிரார்த்தனை மற்றும் திருப்பலியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பல்வேறு மொழிகளில் திருப்பலி: தொடர்ந்து, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், மேல் மற்றும் கீழ் கோயில், விண்மீன் ஆலயம், மாதா கோயில் ஆகியவற்றில் நேற்று காலை முதல் மாலை வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை தமிழ், ஆங்கிலம், கொங்கனி, மலையாளம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE