பசிக்கும் போது சாப்பிடுகிற உணவே சத்தானது. ருசியானது. நன்றாக ஏப்பம் விடும் அளவுக்குச் சாப்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்ததும், ‘இந்தாங்க அல்வா’ என்று நெல்லையில் இருந்து வந்த அன்பர் கொடுத்தால் எப்படியிருக்கும்? எப்படி உணருவோம்?
'அடடா... பசிக்குதுங்களா... ஆனா சாப்பிட பழையதைத் தவிர எதுவும் இல்லீங்களே’ என்று சொல்லும் போது, நாம் என்ன சொல்லுவோம். ‘பரவாயில்லீங்க... கொஞ்சம் பழையதும் நாலு வெங்காயமும் கொடுங்க. அதுதான் அமிர்தம்’னு சொல்லி சிலாகிப்போம்தானே.
உண்மையில்... அது அமிர்தம்தான். அப்படியான இனிய தருணம்தான் அந்த உணவு வழங்கும் நேரமும்!
மணிகண்ட சுவாமி, இந்தப் பூவுலகுக்கு வரும் தருணம் நெருங்கிவிட்டது. அதனால்தான் மகிஷி எனும் அரக்கியால் அல்லல்பட்ட தேவர்கள், பிரம்மாவிடம் சென்று கதறினார்கள். வரம் கொடுத்த பிரம்மாவுக்கு வழி தெரியாததால், பரமேஸ்வரனிடமும் பரந்தாமனிடமும் சென்று முறையிட்டார்கள்.
விவரம் அறிந்த சிவனாரும் மகாவிஷ்ணுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மூன்றாவது முறையாக மோகினி அவதாரம் மேற்கொள்ளும் தருணம் நெருங்கி விட்டது என்பதை பார்வையாலே உணர்த்தினார் சிவபெருமான். அதை உணர்ந்து புரிந்து தலையசைத்தார் திருமால்.
அங்கே... மீண்டும் மோகினிக் கோலத்தில்... திருக்காட்சி தந்தருளினார் மகாவிஷ்ணு. உலகின் ஒட்டுமொத்த அழகும் திரண்டிருந்த கோலம் அது. பார்ப்பவர்கள் பிரமிக்கும் பேரழகு.
சிவபெருமானும் மோகினியாக நின்ற மகாவிஷ்ணுவும் பார்த்துக் கொள்ள... அங்கே மகா பிரமாண்டமான சக்தி ஒன்று அந்த இடத்தைச் சூழ்ந்தது. திடீரென்று அந்த இடமே பிரகாசித்தது. அற்புதமான, அழகான, தேஜஸ் பொருந்திய, ஜோதி ஸ்வரூபனாக குழந்தை ஒன்று, அங்கே தரையில் இருந்தது. மூவுலகில் இருந்தும் வணங்கினார்கள். தேவர்கள் அனைவரும் பூமாரி பொழிந்து, அந்தக் குழந்தையின் வருகையை வரவேற்றார்கள். வணங்கினார்கள்.
யட்சர்களும் கந்தவர்களும் வாத்தியங்கள் இசைக்க, பாடினார்கள். எல்லோரும் ஆடினார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். மகிஷியின் கொட்டம் முடியப் போகிறது என நிம்மதியுடன் உற்சாகமானார்கள். பிரம்மா குழந்தைக்கு அருகில் வந்தார். அதன் உச்சந்தலையைத் தொட்டார். ஆசீர்வதித்தார். கண்கள் மூடி, சிரசை வருடிக் கொடுத்தார். வைத்த கையை எடுக்கவே இல்லை. அந்தக் குழந்தையின் காதுக்கு அருகே வந்த பிரம்மா, ‘தர்மசாஸ்தா, தர்மசாஸ்தா, தர்மசாஸ்தா...’ என்று சொன்னார். அந்தக் குழந்தைக்கு தர்மசாஸ்தா எனப் பெயரிட்டார்.
எல்லோரும் குழந்தையின் அழகைக் கண்டு வியந்தார்கள். குழந்தையின் கண்களில் இருந்து வந்த ஒளியை அவர்களால் பார்க்கமுடியவில்லை. அத்தனைப் பிரகாசமாய், தீட்சண்யமாய் ஜொலித்த கண்களை, யாரால்தான் பார்க்கமுடியும்..
சிவபெருமான், குழந்தைக்கு அருகில் வந்தார். கன்னம் வருடினார். நவரத்தின மணிமாலையை குழந்தையின் கழுத்தில் அணிவித்தார். எல்லா தெய்வங்களும் அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்தன. ஆசீர்வதித்தன. அந்தக் குழந்தை... தெய்வக்குழந்தை. தெய்வப் பேரருள் கொண்ட குழந்தை. தெய்வமானது... குழந்தையாக அவதரித்திருக்கிறது.
’பந்தளராஜன் எனும் அரசன், என்னுடைய பக்தன். மிகச்சிறந்த பக்தன். பிள்ளை இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் குழந்தை, அவனிடம் வளரட்டும். அவனிடம் இருந்து கொண்டே, பந்தளதேசத்தில் வளர்ந்துகொண்டே, தன் அவதாரக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். நிறைவேற்ரும்’ என்றார் சிவபெருமான்.
வேட்டையாட மனமே இல்லை, ராஜசேகர பாண்டிய மன்னனுக்கு. ஆனாலும் வேட்டையாடக் கிளம்பிவிட்டான். இருப்பினும் வேட்டையாட வே இல்லை. மிருகங்களையோ பறவைகளையோ அவன் மனம் நாடவே இல்லை.. வில்லை எடுக்கவும் இல்லை. அம்பு தொடுக்கவும் இல்லை. அரண்மனையில் கிளம்பும் போது இருந்த அம்புகள், அப்படியேதான் இருந்தன.
குதிரையில் அமர்ந்தவன், எப்போதுமே குதிரைவேகத்தில் பறப்பான். அங்கேயும் இங்கேயும் என நாலாதிசைகளையும் கண்களால் மேய்வான். மேய்ந்து கொண்டிருக்கும் மிருகங்களை ஒன்றுவிடாமல், துவம்சம் செய்வான். ஆனால் இன்றைக்கு, ஏனோ விட்டேத்தியாகவே இருந்தான் வேட்டையில்!
ஒருகட்டத்தில், குதிரையும் சுணக்கம் காட்டியது. கழுத்தை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தது. கனைத்தது. ‘ஓ... குதிரைக்கு தாகம் எடுக்கிறதோ’ எனப் புரிந்துகொண்டான் மன்னன். அப்படியே குதிரையின் வேகம் கூட்டினான். பம்பா நதிக்கரைக்குப் போனால், வயிறு முட்ட தண்ணீர் குடிக்கலாம். அப்படியே கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொள் என்று குதிரையிடம் பேசினான் .
அப்போது, குதிரை வேகம் குறைத்தது. மன்னன், குதிரையின் தாகம் தணிக்க வேகம் கூட்டியிருந்தாலும், வேகமாகப் போ என்று குதிரைக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், சட்டென்று குதிரை வேகம் குறைந்து, நாலாப்பக்கமும் பார்த்தபடியே மெதுவாகச் சென்றது. அப்போது... அங்கே... குழந்தையின் அழுகுரல் கேட்டது. திடுக்கிட்டுப் போனான் மன்னன். அழுகைச் சத்தம் வந்த திசை நோக்கி, குதிரையைச் செலுத்தினான். ஒருகட்டத்தில், குதிரையில் இருந்து இறங்கினான். விறுவிறுவென நடந்தான். அழுகைச் சத்தம் இன்னும் பலமாக, அதிகமாகக் கேட்டது. குழந்தை இருக்குமிடத்தை நெருங்கிவிட்டதாக உணர்ந்தான். இன்னும் வேகம் கூட்டி நடந்தான். ஓட்டமும் நடையுமாக முன்னேறினான்.
அங்கே... புல்வெளியே மெத்தையாக இருக்க... ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசத்துடன், தகதகவென தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது குழந்தை.
அப்படியே வாரியெடுத்து, அணைத்துக் கொண்டான் மன்னன். குழந்தையின் வாசனை அவன் உடம்பில் ஒட்டிக் கொண்டது. இந்த வாசனைக்காகத்தான் தவமாய் தவமிருந்தோம்!
குழந்தையை கைகளில் ஏந்திய மன்னன், அப்படியே நெஞ்சில் அணைத்துக் கொண்டான்.
சுற்றுமுற்றும் பார்த்தான். குழந்தையின் அப்பாவையும் காணோம். அம்மாவையும் காணவில்லை. உறவுகளும் தென்படவில்லை.
ஆனால் அப்பன் சிவனாரும் அம்மையான திருமாலும் உறவுகளான பிரம்மா முதலான முக்கோடி தேவர்களும் வானில் இருந்து, இதையெல்லாம் கவனித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago