பாம்பன் சுவாமிகள் கோயிலில் மயூர வாகன சேவகம் உள்ளிட்ட பூஜைகளை மேற்கொள்ள சரியான அமைப்பை கண்டறிய வேண்டும்: நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் மயூர வாகன சேவகம் உள்ளிட்ட பூஜை புனஸ்காரங்களை மேற்கொள்ள சரியான அமைப்பை கண்டறிய வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த 1850-ம் ஆண்டு பிறந்த பாம்பன் சுவாமிகள் என்ற ஸ்ரீ பாம்பன் குமரகுருதாசர், முருகப்பெருமான் மீது கொண்ட பற்றால் 6 ஆயிரத்து 666 பாடல்களை தமிழில் பாடியுள்ளார். சென்னையில் வசித்து வந்த இவர், 1929-ல் முக்தியடைந்தார்.

அவரது உடல் திருவான்மியூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 3 ஏக்கர்நிலத்தை வாங்கிய மகா தேஜோ மண்டல சபா என்ற கமிட்டி, அங்கு ஜீவசமாதி எழுப்பி 1940-ம் ஆண்டு முதல் குருபூஜை உள்ளிட்ட பூஜைகளை செய்து வருகிறது.

கடந்த 1984-ம் ஆண்டு இந்த கோயில் அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அறநிலையத்துறை கோயில்களைத்தான் நிர்வகிக்க முடியுமேயன்றி ஜீவசமாதியை நிர்வகிக்க முடியாது எனக் கூறி, மகா தேஜோ மண்டல சபா என்ற அமைப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாம்பன் சுவாமிகள் கோயிலை உரிமை கோரிய மகா தேஜோ மண்டல சபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த கோயிலுக்கு உரிமை கோரி வேறு சில அமைப்புகளும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதேபோல், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அறநிலையத் துறையும் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த கோயிலை அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க இடைக்காலமாக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் வளாகத்தில் உள்ள பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி மற்றும் அங்குள்ள விநாயகர், முருகன் சந்நிதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜை புனஸ்காரங்கள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். இது ஆரம்பத்தில் ஜீவசமாதியாக இருந்தாலும் தற்போது கோயிலாக உருவெடுத்துள்ளது.

இந்த சமாதி மற்றும் கோயிலுக்கு பல சபாக்கள் உரிமை கோரி வருவதால், பாம்பன் சுவாமிகள் எழுதி வைத்துள்ள உயிலின்படி, இந்த கோயிலில் நடத்தப்படும் மயூர வாகன சேவகம் உள்ளிட்ட இதர பூஜை முறைகளை நடத்துவதற்காக சரியான அமைப்பைக் கண்டறிய வேண்டும்.

அதற்காக அறநிலையத் துறை அனைத்து தரப்புக்கும் முறையான நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணை நடத்தி அதன்பிறகு பூஜைகள் செய்யும் பொறுப்பை உண்மையான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதுவரை, இங்கு நடைபெறும் பூஜைகள் மற்றும் திருவிழாக்களை அறநிலையத் துறை மேற்கொள்ள வேண்டும். அப்போது அனைத்து தரப்பினரையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அதேபோல், இந்த கோயிலில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்