பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
உண்மையான பக்தியுடன் இருப்பவர்கள், உண்மையான பக்தி எவரிடம் இருந்தாலும் அவரை ஆராதிப்பார்கள். தேடிச் சென்று அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிவார்கள். அந்த அனுபவச் சிலிர்ப்பில், இன்னும் இன்னும் அவர்களுடன் நெருங்குவார்கள். அணுக்கமாவார்கள். மிகுந்த பிரியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவார்கள்.
திருவண்ணாமலைப் பகுதியை ஆட்சி செய்யும் விஜய நகரப் பேரரசு வழி வந்த மன்னனுக்கு, அருணகிரிநாதரைப் பற்றி யாரோ சொல்ல, அவ்வளவுதான். கடவுளையே நேரில் தரிசிக்கப் புறப்பட்டவர் போல், அருணகிரிநாதரைத் தேடி வந்தார். அவரை வணங்கி, கையோடு அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.
அவரை உற்சாகமாக ராஜ உபசாரம் செய்து வரவேற்றார். அரண்மனையில் உள்ள அத்தனை பேரையும் அழைத்து, வணங்கச் சொல்லி ஆசி பெறச் செய்தார். அருணகிரிநாதரும் ஆசி வழங்கினார்.
அருணகிரிநாதர் தன் அனுபவங்களை மன்னருக்கு விவரிக்க, அதில் சிலிர்த்துப் போனான் மன்னன்.
‘இங்கேயே இருங்கள் சுவாமி’ என்று சபையில் அந்தஸ்தும் பதவியும் வழங்கினான். ‘என்னை வழிநடத்துங்கள் சுவாமி. இந்த தேசத்துக்கு உங்கள் ஆசியும் அருளும் எப்போதும் வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து கொண்டாடினார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசவையின் ஆஸ்தான பண்டிதரான சம்பந்தாண்டனுக்கு கோபம் தலைக்கேறியது. அந்தக் கோபம் உக்கிரமாகி உஷ்ணமென உடலெங்கும் பரவியது. அந்த உடற்சூட்டில் கண்மண் தெரியாமல் கத்தினான். குத்துவேன் கொல்லுவேன் என்று தன் ஆதரவாளர்களிடம் சவடால் பேச்சில் ஈடுபட்டான்.
ஒருகட்டத்தில், அருணகிரிநாதர் பற்றி மன்னனிடம் கோள் மூட்டினான். இந்த உலகில், தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் வைத்திருக்கக் கூடிய அஸ்திரம்... கோள் மூட்டுதல்தான்!
மன்னனிடம் சென்றான். குனிந்தான். பணிந்தான். வணங்கி எழுந்தான். ‘மன்னா. அடியேன் உமக்கு நெருங்கிய நண்பன் என்பது புரியும்தானே உங்களுக்கு. நானொரு தேச நலன் விரும்பி என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா. உமக்கும் இந்த நாட்டுக்கும் நல்லது செய்வான் இந்த சம்பந்தாண்டான் என்பது தெரியும்தானே உங்களுக்கு?
அருணகிரி ஒரு பைத்தியம். அவன் நல்லவனில்லை. பண்டிதனும் இல்லை; பகவானின் அருள்பெற்றவனும் அல்ல. அவனொரு பரதேசி. பரத்தையரே உலகம் என்று மோகித்துக் கிடந்த சுகவாசி.
அவன் சகவாசம் வேண்டாம் மன்னா. ஊரும் கைவிட்டது. வீடும் வெறுத்தது. உறவுகளும் புறந்தள்ளின. அப்பேர்ப்பட்டவனை, ஒரு தேசத்தின் ராஜாவான தாங்களே பழகுவது நல்லதல்ல. அவனுக்கு அவ்வளவு பெரிய பாராட்டோ மரியாதையோ தேவையே இல்லை. இதற்கெல்லாம் தகுதியே இல்லாதவன் அவன்.
அருணகிரி சித்தபுருஷர் அல்ல. சித்துவேலைக்காரன். ஏதோ வித்தைகளும் மந்திரங்களும் வைத்துக் கொண்டு வித்தை காட்டுகிறான். முருகன் வந்தார் என்கிறான். விழப் போனவனைப் பிடித்தார் என்கிறான். ஆட்கொண்டார் என்கிறான். அருள்பாலித்தார் என்கிறான். முருகனுக்கு நான் அடிமை என்றெல்லாம் பிதற்றுகிறான். பித்தன் பிதற்றத்தானே செய்வான் மன்னா. ஆகவே அவனை நம்பாதீர்கள். என்னை நம்புங்கள். நான் சொல்வதை நம்புங்கள் மன்னா’ என்று அடுக்கிக் கொண்டே போய்ப் பேச்சை நிறுத்தினான் சம்பந்தாண்டான்.
அவன் சொல்லுவதை அமைதியாகக் கேட்டான் மன்னன். நடுவே குறுக்கிடாமல் கேட்டான். அருணகிரிநாதரின் ஆன்ம பலம் கண்களில் தெரிகிறது. அவரின் பக்தி, ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது. யோக சக்தி அறிந்தவராகத் திகழ்கிறார் அருணகிரிநாதர்.
உள்ளே ஒளி இருந்தால்தான், வார்த்தைகளில் இவ்வளவு வெளிச்சங்கள் பரப்ப முடியும். அந்த வார்த்தைகளைப் பாட்டாக்கி, பாட்டில் சுவை கலக்க முடியும். அது அருட்சுவை. இறைச்சுவை. கடவுளின் ருசி.
அருணகிரிநாதரைப் பத்தடி தள்ளி நின்று பார்த்தாலே பிடிக்கிறது. பக்கத்தில் சென்று அவரையும் அவரின் தேஜஸ் பொருந்திய திருமுகத்தையும் பார்க்க இன்னும் பிடிக்கிறது. அவரிடம் இருந்து வெளிப்படுகிற வார்த்தைகள், மனதுக்கு இதம் சேர்க்கிறது. ஆகவே இன்னும் இன்னும் பிடிக்கிறது. ஆனால் இந்த சம்பந்தாண்டானுக்கு அருணகிரிநாதர் மீது ஏன் இத்தனை கோபம். இவ்வளவு தூஷணைகள்.
’சம்பந்தாண்டான். நிதானம் இழக்காதீர்கள். நீங்கள் தேவி உபாஸகர். அருணகிரிநாதரோ முருக பக்தன். முருகப்பெருமானே அருணகிரிநாதரைத் தேடி வந்து, ஆட்கொண்டு அருளியிருக்கிறார்.
கோபுரத்தின் உச்சியில் இருந்து விழப்போனதையும் அருணகிரிநாதர் அந்தரத்தில் அப்படியே நின்றதையும் ஊர் மக்கள் நிறையபேர் பார்த்திருக்கிறார்கள். அவர் எந்தக் குறிப்பேடுகளும் இல்லாமல், ஓலை நறுக்குகளும் வைத்திருக்காமல், மனதுக்குள்ளிருந்து மளமளவென, சரசரவென பாடுவதை ஏகப்பட்ட பேர் பார்த்து, கேட்டு வியந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, அருணகிரிநாதர் பரதேசி அல்ல. பரம ஞானி. சித்து வேலைக்காரன் அல்ல. சித்த புருஷர். முருகனுக்கு அடிமை. அப்பேர்ப்பட்டவருக்கு நானும் இந்த நாடும் அடிமை!
முன்பு எப்படியோ... இப்போது பரிசுத்தமாக வாழ்ந்து வரும் அருணகிரிநாதரைக் களங்கம் சுமத்துவதும் தவறு. காயப்படுத்துவதும் அயோக்கியத் தனம்.
முருகப்பெருமான், அருணகிரிநாதரை ஆட்கொள்ளவில்லை; அருள்பாலிக்கவில்லை என்றெல்லாம் எதை வைத்துச் சொல்கிறாய். ’ என்று சம்பந்தாண்டானிடம் கேட்டான் மன்னன்.
சற்று நேரம் முகம் இறுகி, வெறித்தபடி தரையையே பார்த்துக் கொண்டிருந்தான் சம்பந்தாண்டான்.
நல்லவர்களுக்கும் நல்லவற்றுக்குமான யோசனைகளும் சில முடிவுகளும் தீர்வுகளும் கொஞ்சம் தாமதமாகத்தான் கிடைக்கும். கெட்டவர்களுக்கு அப்படியில்லை. தடதடவென வரும். ஏனெனில், எவர் நலன் குறித்தும் அக்கறைப் படமாட்டார்கள் அவர்கள்.
சம்பந்தாண்டான் தொண்டை செருமி, பேசத் தொடங்கினார்.
அந்தப் பேச்சு முழுக்க ஆணவம் இருந்தது. கர்வம் இருந்தது. அலட்டல் இருந்தது.
இவை இருக்குமிடத்தில், இறைசக்தி எப்போதுமே வராது. வந்தால்தானே தங்குவதற்கு!
நம்மைக் காட்டிக் கொள்ளவும் வெளிக்காட்டிக் கொள்ளவும் நாம் பிரயத்தனப்பட வேண்டும். மகான்களை நாம் அறிவதற்கு, ஆண்டவனே உறுதி செய்வான். உறுதியாக நிற்பான். உறுதுணையாக, வழித்துணையாக வருவான்!
சம்பந்தாண்டானின் சூழ்ச்சியை கந்தக் கடவுள் அறியாமலா இருப்பார்?
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா.
- ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago