த
வம் என்பதென்ன? உலகத்தைத் துறந்து காட்டுக்குப் போதல், ஊணையும் உறக்கத்தையும் குறைத்தல், உடலை வறட்டுதல், தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் சரி, ஏது நடந்தாலும் சரி என்று எதையும் கருத்தில் கொள்ளாது தியானத்தில் மூழ்கியிருத்தல், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், தூய்மை பேணுதல், மந்திரங்கள் ஓதுதல்—இவையெல்லாந்தான் தவம் என்று நமக்குத் தோன்றும்.
ஆனால், மெய்யான தவத்துக்கு இவையெல்லாம் தேவையே இல்லை என்கிறார் திருமூலர்.
கத்தவும் வேண்டாம்,
கருத்துஅறிந்து ஆறினால்;
சத்தமும் வேண்டாம்,
சமாதிகை கூடினால்;
சுத்தமும் வேண்டாம்,
துடக்குஅற்று நிற்றலால்;
சித்தமும் வேண்டாம்,
செயல்அற்று இருக்கிலே.
(திருமந்திரம் 1634)
ஆன்மிகப் பாதையில் பயணம் புறப்பட்டவர்கள் ஆன்மிகத்தின் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் நூல்களின் உட்கருத்தை உண்மையாகவே அறிந்திருந்தால், அவற்றைப் போற்றிப் பாடி முழங்க வேண்டியதில்லை; மனம் அடங்கும் நிலைபெற்றுவிட்டவர்கள் வீடுபேற்றுக்காக மந்திரம் முணுமுணுக்க வேண்டியதில்லை; அகத்தில் படிந்திருக்கிற அழுக்கை அகற்றிக்கொண்டுவிட்டவர்கள் புறத்தில் திரண்டிருக்கிற அழுக்கைக் கண்டு அருவருக்கத் தேவையில்லை; ஏதேனும் ஒன்று பற்றி எப்போதும் இரைந்துகொண்டே இருக்கிற உள்ளத்தை ஓய்ப்பதும், தறிகெட்டுத் தலை விரித்தாடுகிற தன்முனைப்பைச் சாய்ப்பதும்தான் அவர்கள் செய்ய வேண்டுவது. சுருங்கச் சொன்னால், தன்முனைப்புச் செயல்களை அறுத்தடிப்பதுதான் தவம். அந்தத் தவத்தை எப்படிச் செய்வது?
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்து
உள்ளே நோக்குமின்;
பார்த்தஅப் பார்வை
பசுமரத்து ஆணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட்டு ஓடுமே
(திருமந்திரம் 1631)
நூல்களை மேற்கோள் காட்டிப் பேசுவதில் நமக்குப் பிரியம் கூடுதல். மேற்கோள்கள் நம் அறிவின் பரப்பைப் பிறருக்குப் புலப்படுத்துகின்றன என்று பொதுவில் கருதியிருக்கிறோம். துறவிகள் என்றும் தவசிகள் என்றும் தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்களும் இதற்கு விதிவிலக்கல்லர்.
...வடமொழியிலே
வல்லான் ஒருத்தன்
வரவும் திராவிடத்திலே
வந்ததாய் விவகரிப்பேன்;
வல்லதமிழ் அறிஞர்வரின்
அங்ஙனே வடமொழியில்
வசனங்கள் சிறிது புகல்வேன்;
வெல்லாமல் எவரையும்
மருட்டிவிட வகைவந்த
வித்தை என் முத்தி தருமோ?
(தாயுமானவர் பாடல்கள், சித்தர் கணம், 10)
-என்று மெய்யான துறவியும் தவசியுமான தாயுமானவரே தன் நிலை சொல்லிப் புலம்புகிறார். ‘வடமொழி அறிஞன் வந்தால், தமிழில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா என்று கதைப்பேன். தமிழ் அறிஞன் வந்தாலோ, வடமொழியில் சில வசனங்கள் பேசி அவனைக் கிறுகிறுக்க வைப்பேன். நான் உட்பட யாருமே என்னை வென்றுவிடாமல் எல்லோரையும் மருட்டுகிற வித்தையில் நான் விற்பன்னன்; ஆனால், நூல் பல கற்று நான் வசப்படுத்தி வைத்திருக்கும் இந்த வித்தை எனக்கு விடுதலையைத் தருமா?’ என்று கவலையோடு அகத்தாய்வு செய்கிறார் தாயுமானவர்.
கெட்டிக்காரத்தனத்தை ஏறக்கட்டுங்கள்
அதற்குத்தான் முன்னர் சொன்ன திருமந்திரப் பாட்டில் விடை தருகிறார் வித்தகச் சித்தர் கணத்தின் தலைமைச் சித்தரான திருமூலர்: எதற்கெடுத்தாலும் சாத்திரத்தை மேற்கோள் காட்டிப் பேசுவது ஒரு கெட்டிக்காரத்தனம். நீங்கள் வெல்ல வேண்டியவற்றை அது வென்று தராது. ஆகையினால் அந்தக் கெட்டிக்காரத்தனத்தை ஏறக்கட்டுங்கள். புறத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கண்ணையும் கருத்தையும் மறித்து, அகத்துக்குத் திருப்பி, நொடிப் பொழுதளவு உங்களுக்குள் பாருங்கள்.
மரத்துக்குப் புறத்திருந்த ஆணியை மரத்துக்குள் அடித்து இறக்கிய பிறகு மரம் ஆணியைப் பற்றிக்கொள்வதுபோலவும் ஆணி மரத்துக்குள் குத்திக்கொள்வதுபோலவும், அகத்துக்குள் இறக்குகிற பார்வையை அகம் பற்றிக்கொள்ளும். அதன் பிறகு, எதற்கெடுத்தாலும் முழங்குவதும் முரணுவதுமாக இருக்கும் உங்கள் ஆரவார இயல்பு உங்களைவிட்டு அகன்று ஓடும். நீங்கள் ஒடுங்குவீர்கள். இவ்வாறு உள்ளுக்குள் திரும்புதல்தான் தவம்.
தவம் என்னும் சொல் ‘தவ்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘தவ்’ என்னும் வேர்ச்சொல் சுருங்குதல் என்னும் பொருளுடையது. ‘தவ்’ என்பதோடு அகரம் சேர்ந்து ‘தவ’ என்றாகிப் பின் ‘தவம்’ என்றாயிற்று. புறத்தைச் சுருக்கி அகத்தைப் பெருக்குதல் தவம்.
தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதலும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருத்தலுந்தான் தவம். அதை விட்டுவிட்டுத் தன்னை வருத்திக்கொண்டு சடங்கு வழியில் செல்வது தவம் ஆகாது. திருமூலர் சொல்கிறார்:
என்பே விறகா இறைச்சி
அறுத்துஇட்டுப்
பொன்போல் கனலில்
பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி
அகம்குழை வார்க்குஅன்றி
என்பொன் மணியினை
எய்தஒண் ணாதே.
(திருமந்திரம் 272)
நம் எலும்பையே விறகாக்கி, நம் சதையையே இறைச்சியாக்கி, அதைப் பொன்னிறமாக வறுத்து மொறுமொறுப்பாய்ப் படையலிட்டாலும் கடவுளை அடைந்துவிட முடியாது. வேறு எவ்வாறு அடைய முடியும்? அன்பினால் உருகி அகம் குழைந்தால் அடையலாம்.
அகம் குழையுங்கள்
அகம் குழையவும் அன்புருகவும் யார் கற்றுத் தர முடியும்? நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். வேண்டுமானால் இருப்பதைப் பெருக்கிக்கொள்ளலாம். அப்படிப் பெருக்கிக்கொள்வது தவம். அதற்கு மற்ற உயிர்களோடு கூடியிருக்க வேண்டும்.
கூடித் தவம்செய்து
கண்டேன் குரைகழல்;
தேடித் தவம்செய்து
கண்டேன் சிவகதி;
வாடித் தவம்செய்வதுஏது?
அவம்; இவைகளைந்து
ஊடில் பலஉல கோர்எத் தவரே?
(திருமந்திரம் 1636)
பிறரோடு கூடியிருந்து தவம் செய்தேன்; திருவடியைக் கண்டுகொண்டேன். பிறருக்கான நன்மையையும் தேடித் தவம் செய்தேன்; சிவகதியையே கண்டுகொண்டேன். தனியாக இருந்து வாடித் தவம் செய்வதால் என்ன பயன்? அது வீண். பிறரோடு கூடுதல், பிறருக்காகவும் தேடுதல், இவற்றை விட்டுவிட்டுத் தவம் செய்கிறேன் என்று சொல்கிறவர்கள் என்ன தவம் செய்வார்களோ?
துறவுக்கும் தவத்துக்கும் உலகத்தில் மதிப்பு மிகுதி. தவவேடம் கொண்டவர்களில் சிலர் அறியாமை மிக்கவர்களாக இருந்தாலும், வேடத்தைக் கருதியும் பீடத்தைக் கருதியும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது பொது வழக்கம். வேடம் வழங்கும் பாதுகாப்பைக் கருதி, துறவைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டு அதற்குள் மறைந்து ஒழுகுபவர்கள் பலர். புரண்டு படுக்கையில் போர்வை கலைவதுபோல, மிரட்டிப் பேசுகையில் வேடம் கலைந்து அவர்கள் வெளிப்பட்டுவிடுகிறார்கள்.
ஞானம்இ லார்வேடம்
பூண்டும் நரகத்தர்;
ஞானம்உள் ளார்வேடம்
இன்றெனில் நன்முத்தர்;
ஞானம்உள தாக
வேண்டுவோர் நக்கன்பால்
ஞானம்உள வேடம்
நண்ணிநிற் போரே.
(திருமந்திரம் 1668)
அறிவு வாய்க்கப் பெறாதவர்கள், தவவேடம் பூண்டிருந்தாலும் துன்பத்தில் உழல்வார்கள்; அறிவு வாய்க்கப் பெற்றவர்களோ, வேடமே பூணாவிட்டாலும் விடுதலையில் திளைப்பார்கள். அறிவு வாய்த்திருத்தல்தான் தவவேடம். உடையும் சின்னங்களும் வாய்த்திருப்பதன்று. செம்பொருட் சிவனுக்கு உடையுண்டா? வேடம் உண்டா? அவன் உடையே உடுத்தாத நக்கன் அல்லவா? திசைகளையே ஆடையாக உடுத்த திகம்பரன் அல்லவா? எனவே, மதிசூடிய அம்மணனாகிய அவனிடம் வேண்டுகிறவர்கள் அறிவைத்தான் வேண்ட வேண்டுமே அன்றி, ஆடையை அன்று.
இன்பமாகக் கும்மாளம் போடலாம் என்று ஆற்றில் இறங்கியவன் ஆற்றில் முதலை கிடப்பதைக் கண்டு அஞ்சிக் காட்டுக்குள் ஓடினானாம்; அங்கே குட்டிபோட்ட கரடி ஒன்று கடுஞ்சினத்தோடு அவனை எதிர்கொண்டு பிறாண்டியதாம். உலகத்துக்குப் பயந்து துறவுக்குப் போனவர்கள் துறவுக்குப் பயந்தால் எங்கே போவார்கள்? துறவு சோற்றுத்துறை அல்லவே? வீடுபேற்றுத் துறை அல்லவா?
ஆற்றில் கிடந்த
முதலைகண்டு அஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட
அதன்ஒக்கும்;
நோற்றுத் தவம்செய்யார்
நூல் அறி யாதவர்
சோற்றுக்கு நின்று
சுழல்கின்ற வாறே.
(திருமந்திரம், 1642)
தவம் செய்கிற கூர் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் தவம் கைவசப்படும். மற்றவர்கள் தங்களைத் தவசிகள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அவர்களிடம் தவம் இருக்காது. அவம்தான் இருக்கும்.
(திருமந்திர அறிவு தொடரும் )
தொடர்புக்கு:arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago