மகாசிவராத்திரியில் ... சிவாலய ஓட்டம்! விண்ணை எட்டும் ‘கோவிந்தா, கோபாலா’ கோஷம்!

By வி. ராம்ஜி

துவாதஸ லிங்க தரிசனம்... அதாவது 12 சிவலிங்கங்களையும்... அதாவது 12 சிவாலயங்களையும் ஓடிச் சென்று தரிசிக்கும் சிவாலய ஓட்ட தரிசனம்... மகத்துவம் கொண்டது; மகா புண்ணியம் நிறைந்தது என்கிறார்கள் பக்தர்கள்!

மகா சிவராத்திரி நாளில், குமரி மாவட்டத்தில், பனிரெண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ எனும் வெகு பிரபலம்!

‘அரியும் சிவனும் ஒன்றே!’ எனும் சைவ வைணவ இணைப்புத் தத்துவத்தை உணர்த்துவதே இந்தச் சிவாலய ஓட்டம் என்பார்கள்.

மகா சிவராத்திரியன்று பக்தர்கள் விரதம் இருந்து கன்யாகுமரி மாவட்டம் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்கிற 12 சிவாலயங்களை ஓடி ஓடி தரிசிப்பார்கள் பக்தர்கள். இதுவே சிவாலய ஓட்டம்!

ஏன் இப்படி? எதனால் இந்த சிவாலய ஓட்டம்?

இதற்கு புராணக் கதை ஒன்றைச் சொல்வார்கள்.

இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள்.

புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது; தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால், அவரைக் கடுமையாகத் தாக்கிவிடும்.

‘தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது!’ என்று நம்பியவன் பீமன். இவனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘சிவனும் அரியும் ஒன்று’ என்பதை உணர்த்தவேண்டும்... இதன் மூலமாக இந்த உலகுக்கும் உணரச் செய்யவேண்டும் என்பது பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் விருப்பம்.

ஒருமுறை தர்மர், ராஜசூய யாகம் நடத்த விரும்பினார். யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். அவனும் சம்மதித்தான். ஆனால், ‘வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று, எப்படி பால் பெற்று வருவது?’ என்று ரொம்பவே தயங்கினான்.

ஆனால், ‘‘பயப்படாதே பீமா! நான் உனக்கு 12 ருத்திராட்சங்கள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் பூஜை செய்யத் தொடங்கிவிடும். அப்போது நீ தப்பித்து விடலாம்!’’ என்று அருளினார் பகவான் கிருஷ்ணர்.

அதன்படி, காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் பாறை ஒன்றின் மீது அமர்ந்து, சிவபெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது பீமன், ‘கோவிந்தா, கோபாலா!’ என்று குரல் கொடுத்து கூவினான். இதில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. தவம் கலைத்த கோபம் ஒருபக்கம்... மகாவிஷ்ணுவின் பெயரைச் சொன்னதால் வந்த கோபம் இன்னொருபக்கம். அந்த புருஷா மிருகம், பீமனைத் துரத்தியது. பீமன் அப்போது, ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் கோபம் மறைந்தது. சிவபூஜை செய்ய ஆரம்பித்தது. இதையடுத்து, பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என்று மீண்டும் குரல் எழுப்பினான். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அந்த ருத்திராட்சமும் சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி.

இப்படி, 11 இடங்களைக் கடந்து 12&-வது இடத்தில் (திருநட்டாலம்) ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்கு உள்ளேயும், மற்றொரு கால் வெளியேயுமாக இருந்தன. உடனே பீமன், ‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’ என்றான்.

அப்போது, தர்மர் அங்கே வந்தார். அவரிடம் நியாயம் கேட்டனர். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், அவர் பாரபட்சம் இல்லாமல், ‘’கால்களில் ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே!’’ என்று நியாயமாகத் தீர்ப்பு வழங்கினார். அப்போது அங்கே ஒளிப்பிழம்புடன் தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், ‘அரியும் சிவனும் ஒன்றே!’ எனும் தத்துவத்தை உணர்த்தினார்.

எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கினர். அதுமட்டுமின்றி, தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் பெரிதும் உதவியது.

இதைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, அன்று விரதத்தைத் தொடங்குவார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி முதலான ஆடைகள் அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா... கோபாலா’ என்று கோஷமிட்டுக் கொண்டே, திருமலையில் இருந்து சிவாலய ஓட்டத்தைத் தொடங்குவார்கள். இப்படியாக ஓடிக் கொண்டே 12 சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்.

சிவாலய ஓட்ட தரிசனம், வருகிற மகா சிவராத்திரி நன்னாளில் நடைபெறும். முன்பெல்லாம் ஓட்டமாகவே பக்தர்கள் சென்று தரிசித்தார்கள். ஆனால் இப்போது, ஓட்டமாகச் செல்வதுடன் இன்னும் சிலர் இரு சக்கர வாகனங்களிலும் கார் முதலான வாகனங்களிலும் வந்து 12 சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள்!

பனிரெண்டு சிவாலய தரிசனம்... அதாவது துவாதஸ லிங்க தரிசனம்... சகல பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைச் சேர்க்கும் என்பது ஐதீகம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்