ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருச்சி: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்நடப்பாண்டு பங்குனி தேர்த் திரு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் 27-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் தொடக்கமாக நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபத்துக்கு வந்துசேர்ந்தார். சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையைச் சென்றடைந்தார். மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு, சித்திரை வீதிகளில் வலம் வந்து, இரவு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

விழாவின் 2-ம் நாளான இன்றுகாலை நம்பெருமாள் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். நாளை ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். வரும் 20-ம் தேதி தங்க கருடவாகனத்திலும், 21-ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

வரும் 25-ம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. வரும் 27-ம் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். அன்றுடன்திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில்இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊழியர்கள் செய்து வரு கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE