சுவாமி சரணம் 43: திருவாபரணப் பெட்டியில்..!

By வி. ராம்ஜி

ஐயப்ப பக்தர்களே... உங்களுக்காக..!

பட்டாபிஷேகத்துக்காக வாங்கி வைத்திருந்த ஆபரணங்கள்... ராஜ்ஜியத்தையே மணிகண்டனுக்குத் தரத் தயாராக இருந்த மன்னன், கொஞ்சம் இடம் கொடுக்கிறீர்களா என்று கேட்ட மணிகண்டன்..., அம்பு விட்டு நிற்கும் இடம் தந்தால் போதும் என்ற பெருந்தன்மை. அந்த அம்பு குத்திட்டு நின்ற சபரிமலை... என ஐயன் ஐயப்ப மகிமையைச் சொல்லச் சொல்ல மலைப்பும் வியப்பும் கூடிக்கொண்டே போகின்றன.

அந்தத் திருவாபாரணம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

ஸேவிப்போர்க்கு ஆனந்த மூர்த்தியான ஐயப்பனின் யாத்திரையே, ஆனந்தம் தரக்கூடியது. அதில் ஒவ்வொன்றும் நமக்குப் பரவசம் ஊட்டக்கூடியது. அதில் முக்கியமான உற்ஸவம் மகர விளக்கு உத்ஸவம். ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையான ராஜசேகர பாண்டியன், வருடந்தோறும் மகர ஸங்கராந்தியன்று திருவாபரணங்களோடு வந்து ஐயப்பனைத் தரிசிப்பதாக வாக்களித்துள்ளார்.

பண்டைய காலத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே சபரிமலையின் நடைத்திறப்பு. வருடம் முழுதும் தவத்தில் இருக்கும் ஐயப்பன், திருவாபரணம் சார்த்தும் நேரத்தில் கண்திறந்து பக்தர்களைப் பார்க்கிறார் என்பதே ஐதீகம்.

பந்தளம் அரண்மனையிலிருந்து திருவாபரணம் புறப்படும் கண் கொள்ளாக் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. வருடத்தின் மற்ற நாட்கள் முழுவதும் பந்தளம் அரண்மனையின் பொறுப்பில், பெட்டகத்தின் உள்ளே பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணம், வருடத்தில் வெகு சில நாட்களுக்கு மட்டும்தான் வெளியே கொண்டு வரப்படுகிறது.

மகர விளக்கு உத்ஸவத்தின் 3 நாட்கள் முன்பு, பந்தளம் அரண்மனையில், பூஜைகளை முடித்து சபரிமலை புறப்படுவதற்காக இன்றைய அரசர் (ராஜ குடும்ப ப்ரதிநிதி) உட்பட அனைவரும் காத்திருப்பார்கள். எத்தனை நேரம் ஆனாலும் எல்லோரும் வானை நோக்கிப் பார்த்தபடி காத்து இருப்பார்கள். கண்கூடாகக் காணும் அதியமாக வானில் கருடன் வந்து யாத்திரை துவங்க வட்டமிட்டு உத்தரவு தரும். திருவாபரணத்தை கருடன் வட்டமிட்ட

பிறகுதான் திருவாபரண யாத்திரை புறப்படும்.

ஐயப்பன் காலம் தொட்டு இந்த ஆபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பாரம்பரியமாக சில குடும்பங்கள் இருக்கின்றன. பரம்பரை பரம்பரையாக அவர்களே இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்காக விரதம் இருந்து வருகிறார்கள். அவர்கள் எங்கெங்கு இருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் தங்கள் பாக்கியத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் வந்து சேர்ந்து விடுவார்கள்.

பந்தளம் அரண்மனையிலிருந்து, நகரம், காடு, எஸ்டேட் என தலைச்சுமையாக புறப்படும் திருவாபரண ஊர்வலத்தைக் காண வழியெங்கும் உள்ள மக்கள், சாதி மத பேதமின்றி வாசல்களில் கோலமிட்டு, விளக்கேற்றி காத்திருந்து வரவேற்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

சுமார் மூன்று நாட்கள் காட்டுப் பாதையில் வந்து சேர்ந்த ஆபரணம் பெரியானைவட்டத்தை அடையும் போது உண்டாவது பரவசம். வட்டமிட்டுப் பறக்கும் க்ருஷ்ணப்பருந்து சாட்சியாய் உடன் வர, ஆட்டம் ஆடி துள்ளி துள்ளி மலைமேல் ஏறும் அந்தக் காட்சியை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.

சரங்குத்தி கடந்து பதினெட்டாம் படியேறி ஆபரணம் சந்நிதானம் அடைவதைக் கண்டாலே ஆனந்தம்.

ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தி காணக்கிடைக்கும் தரிசனம் - கண நேரம் மட்டுமே கிடைக்கும் அரிதானதொரு தரிசனம். அந்த ஆபரணங்களைக் குறித்து அறிய பல பக்தர்களுக்கு ஆர்வம் இருக்காதா?

சபரிமலைமெய்யனின் அளவிடமுடியாத திருவருளின் காரணமாய் ஒரு நாள் முழுதும் அந்த திருவாபரணங்களை கண்ணாரக் காணும் பாக்யம் கிட்டியது.

சுத்தமான பசுந்தங்கத்தால் ஆன அந்த ஆபரணங்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு, பந்தள மன்னனால் சபரிமலை சாஸ்தாவுக்காக செய்யப்பட்டது.

ஒருமுறை சிறப்பு அழைப்பின் பேரில் பந்தளம் அரண்மனைக்கே சென்று ஆபரணங்களை ஒருநாள் முழுக்க காணும் அரிய வாய்ப்பு கிடைத்ததுஎன்கிறார் ஐயப்ப உபந்யாசகர் அரவிந்த் சுப்ரமண்யம்.

இந்த ஆபரணங்களைக் குறித்த சரியான தகவல்கள் பக்தர்களிடம் போய் சேராததால் பலரும் பலவிதமாக கூறிவருகிறார்கள்.

நான் கோயிலருகே நின்று கொண்டிருக்கும் போது கூட சிலர் "இது ஐயப்பனே அணிந்து கொண்டிருந்தது" என்று கூறினார்கள்.

பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தள ராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் போது பார்த்திருப்போம்... மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது.

1. திருவாபரணப் பெட்டி

2. வெள்ளிப் பெட்டி

3. கொடிப் பெட்டி

இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.

திருவாபரணப்பெட்டி - பெட்டி 1

ஐயப்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளன.

- திருமுகம் - (சாஸ்தாவின் முகக் கவசம்)

- (மீசையுடன் ராஜ கோலத்தில் காணப்படும் முகம்)

- ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி-திருவாச்சி)

- வலிய சுரிகை (பெரிய கத்தி)

- செறிய சுரிகை (சிறிய கத்தி)

- யானை - யானை விக்ரஹம் 2

- கடுவாய் - புலி விக்ரஹம் 1

- வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு

- பூர்ணா - புஷ்கலா (நிற்கும் கோலத்தில் தேவியர் உருவம்)

- பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)

- நவரத்தின மோதிரம்

- சரப்பளி மாலை

- வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)

- மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)

- எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

வெள்ளிபெட்டி (பெட்டி 2)

வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்,

தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.

இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்.

கொடிப்பெட்டி (பெட்டி 3)

மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில்,

யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் உள்ளன.

கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.

இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல.

திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.

இந்தத் தகவல்கள் எல்லாம், திருவாபரணம் குறித்து பக்தர்கள் அறிந்துக்

கொள்ளத்தான். ஆனால் அறிவும், ஞானமும் செயல்படாத பக்திப்பித்து தலைக்கேறி இருக்கும் அந்த நொடி, திருவாபரணம் சந்நிதானம் அடையும் நொடி. மொத்த சபரிமலையும் நிலை கொள்ளாத ஆனந்த நிலையில் தன்னை மறந்து இருக்கும். இவ்வளவு நுணுக்கங்களையும் பார்க்க நம் மனம், சிந்தனை நம் வசம் இருக்காது. திருவாபரணம் சந்நிதானத்தை அடைவதைக் காண்பதே பரவசமான அனுபவம்!

வானில் மாமலை மேலே மகர நக்ஷத்ரம் உதித்து நிற்க, கொடிமரத்தை கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்கள் சந்நிதானத்துக்குள் சென்று, ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் அந்த நொடி, பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிய ... மனம், உடல், இடம், காலம் என அனைத்தும் மறக்கும் பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.

சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் மட்டுமே அங்கே சத்தியம்!

சுவாமியே சரணம் ஐயப்பா!

- ஐயன் வருவான்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்