குருவே... யோகி ராமா! 28: ஆராதித்த மன்னன்!

By வி. ராம்ஜி

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

அடுத்தகட்டத்துக்கான முதல் அடியை எவரேனும் சொல்லித் தருவார்கள். எல்லோருக்குமே இது நிகழும். அந்த முதல் அடி என்பது நமக்குத் தெரிவதில்லை. அப்படி சொல்லித் தருபவர் யார்... அதை அறிவதே இல்லை.

ஆனால் அருணகிரி எனும் இளைஞன் அருணகிரிநாதராக கந்தப்பெருமானால், அருள் பெற்று, ஆசி பெற்று, ஆட்கொண்ட பிறகு இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. முருகப்பெருமான், சரவண பவ மந்திரத்தை கற்றுத் தந்த கையுடன்... அடுத்த செயலையும் அருணகிரிநாதருக்கு அரங்கேற்றினார்.

‘முத்தைத்திரு பத்தித் திருநகை’ எனும் முதல் அடியை எடுத்துக் கொடுத்தருளினார். அந்த வார்த்தையை அடியொற்றி மளமளவென, ஜிலீரென அருவி போல் அவரிடம் இருந்து கொட்டிக் கொண்டே இருந்தன வார்த்தைகள்.

ஊர் ஊராகச் சென்றார். புண்ணியத் தலங்களைத் தேடித் தேடி தரிசித்தார். முருகப்பெருமானே என் கண்கண்ட தெய்வம் என்று சொல்லிப் புகழ்ந்தார். கந்தன் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்கெல்லாம் சென்று தரிசித்தார். அழகன் முருகனின் அழகில் மயங்கினார். அவனருளைப் பாடினார். போகிற இடங்களிலெல்லாம் போகிறபோக்கில் உருகி உருகிப் பாடினார். அந்தப் பாடல்கள், திருப்புகழ் என தொகுக்கப்பட்டன.

பன்னெடுங்காலம் கடந்தும் இன்றைக்கும் நமக்கெல்லாம் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.

முருகப்பெருமானைப் பாடும் போதெல்லாம் திருப்புகழைப் பாடுவோம். திருப்புகழைப் பாடும் போதெல்லாம் அருணகிரிநாதரைப் போற்றுவோம். அருணகிரிநாதரைச் சொல்லும்போதெல்லாம், சித்தர்களின் பூமியான திருவண்ணாமலையை நினைத்துப் பூரிப்போம்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை நினைக்கும் போதெல்லாம், இங்கிருந்தபடி உலகையே ரட்சித்து அருளிய சித்தபுருஷர்களையும் மகான்களையும் வணங்கி மகிழ்வோம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், இளையனார் சந்நிதி அமைந்துள்ளது. இந்தச் சந்நிதியில், பெரும்பான்மையான நேரங்களில் கடும் தவத்தில் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அருணகிரிநாதர்.

ஆடாது அசையாது, கண் திறக்காமல் கடும் தவத்தில் இருப்பார். திடீரென்று கண் திறப்பார். மடை திறந்துவிட்ட வெள்ளம்போல், சந்தம் தப்பாமல் பாடல்களை அப்படியே மளமளவெனப் பாடிக் கொண்டே இருப்பார். இவரின் பாடலைக் கேட்டு கோயிலுக்கு வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரிபடவில்லை. ஒன்றுமே புரியவில்லை. ’இந்த சாமி என்ன சொல்லுதுன்னே தெரியலியே...’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு அவரை ஆச்சரியமாகப் பார்த்துச் சென்றனர்.

இன்னும் சிலர், ’இந்த சாமி திடீர்னு பாடும். திடீர்னு ஆடும். அப்புறம் தேமேனு கண்ணை மூடிக்கிட்டு அப்படியே கிடக்கும். பாப்போம்... இன்னிக்கி சாமி எப்போ பாடுதுன்னு பாப்போம்’ என்று அருணகிரிநாதருக்கு நேரெதிர்ப் பக்கத்தில், சத்தமில்லாமல் அமைதியாக உட்கார்ந்து காத்திருப்பார்கள்.

அவரைப் பற்றிய விஷயம் அறிந்தவர்கள், வழக்கம் போல் இந்தச் சந்நிதிக்கு வந்துவிட்டு, அவர்கள்பாட்டுக்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்துவிடுவார்கள். ‘அவரு கண்ணை மூடிட்டிருந்தாலும் நாம அவரையே பாத்துக்கிட்டிருக்கோங்கறது அவருக்குத் தெரியும்பா. அவரு சாமி’ என்று கோயிலுக்கு வெளியே வந்துதான் பேசுவார்கள்.

யோகக் கலையையும் இறை பக்தியையும் சேர்த்து, தன் பாடல்களில் கொடுத்துக் கொண்டே இருந்தார் அருணகிரிநாதர். மிகப்பெரிய ஞானம் உள்ளவர்களால் மட்டுமே இவரின் பாடல்கள் குறித்த அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. மற்றவர்கள், அந்தத் தாளலயத்தில் கிறங்கிப் போய் பாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது திருவண்ணாமலையை விஜய நகரப் பேரரசின் வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் எனும் அரசன், ஆட்சி செய்து வந்தான். பூமியும் மக்களும் அவர்களின் சந்ததியும் சிறந்திருக்க வேண்டும், செழித்திருக்க வேண்டும் என விரும்பி, நல்லாட்சி நடத்தி வந்த அந்த மன்னனிடம், அருணகிரிநாதர் பற்றி எவரோ சொன்னார்கள்.

‘எப்பவும் தியானத்துலயே இருக்கார்’ என்றார்கள். ‘திடீர்திடீர்னு பாட்டெல்லாம் பாடுவார்’ என்றார்கள். ’அவரு முருகப்பெருமான் கூட பேசுவாரு’ என்றார்கள். அனைத்தையும் கேட்ட மன்னன், அதிர்ந்து போனான்.

‘இது எப்பேர்ப்பட்ட பூமி. இந்த மலையும் பூமியும் விசேஷமானவை. இங்கே மகான் அவதரித்திருக்கிறாரென்றால், அவரைத் தரிசிக்கவேண்டுமே!’ என்று ஆர்வமானார்.

அருணகிரிநாதரை அரண்மனைக்கு அழைத்து கவுரவித்தார். மிக அற்புதமாக வரவேற்றார். அவரை நமஸ்கரித்தார். ’எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அருள் செய்யுங்கள் சுவாமி’ என்று வேண்டி கேட்டுக் கொண்டார்.

அங்கே... அருணகிரிநாதருக்கும் அரசனுக்கும் ஓர் இனம் புரியாத ஸ்நேகிதம், தோழமை, பந்தம் ஏற்பட்டது. மன்னனின் மனதை அறிந்து கொண்ட அருணகிரிநாதர், மன்னனை ஆசீர்வதித்தார். தன்னருகில் வைத்துக் கொண்டு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்.

இதையெல்லாம் கண்டு பொறாமைப்படவும் எவரேனும் இருப்பார்கள் அல்லவா. அருணகிரிநாதருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து மன்னனின் ஆஸ்தான பண்டிதரான சம்பந்தாண்டானிடம் தெரிவிக்கப்பட்டது.

கொதித்துப் போனார் சம்பந்தாண்டான். கோபமானார். அருணகிரிநாதர் மீது ஆத்திரப்பட்டார். மன்னனிடம் அருணகிரிநாதர் குறித்து இல்லாததும் பொல்லாததுமாகச் சொன்னார்.

இவை அனைத்தையும் இளையனார் சந்நிதியில் இருந்து கொண்டு, தியானத்தில் ஈடுபட்டிருந்த அருணகிரிநாதர் அறிந்தார். மெல்லச் சிரித்துக் கொண்டார்.

நம்மிடம் இருக்கிற கெட்டவிஷயம்... எதற்கெடுத்தாலும் பொறாமைப்படுவது. மகான்களிடம் இருக்கும் நல்ல விஷயம்... நாம் எது சொன்னாலும் எதைச் செய்தாலும் அதை இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து உணருவது!

அது...அப்போதைய அருணகிரிநாதர் முதல் இப்போது வாழ்ந்து மகாசமாதி அடைந்த பகவான் யோகி ராம்சுரத்குமார் வரை எல்லா மகான்களுக்கும் பொருந்தும்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்