அம்மா அடை பிரமாதமாகப் பண்ணுவாள். ஊரில் இருந்து சித்தி வந்தால், ஆப்பம் செய்யச் சொல்லலாம். அத்தனை சிறப்பாகச் செய்வாள். சீடையும் அதிரசமும் அத்தையின் கைப்பக்குவத்தால் சுவைக்கும். தாத்தாவிடம் நிறையக் கதைகளைப் பெறலாம். மாமாவிடம் உள்ள தன்னம்பிக்கையை, எப்படியேனும் பேசிப்பேசி பாடமாகக் கற்றுக் கொள்ளவேண்டும்.
என் தோழி ரமா செய்யும் மைசூர்பா, அத்தனைச் சுவையானது. வீட்டுக்கு வந்து இறங்கியதும், ‘ரமா அத்தை... மைசூர்பா பண்ணிக் கொடுங்க’ என்று குழந்தைகள் கேட்பார்கள்.
உணவு விஷயத்தில், யார் யார் என்னவிதமாக, எப்படியெல்லாம் செய்வார்கள் என்று உணர்ந்து, அவர்களிடம் கேட்டுச் சாப்பிடுகிற குழந்தைகளைப் போலத்தான் தெய்வங்களும்!
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அப்படியெனில் தெய்வமும் குழந்தையும் கூட ஒன்றுதான். கடவுள் கூட, குழந்தைக்கு இணையானவர்கள்தான். குழந்தையைப் போல், யாரிடம் இருந்து எதைப் பெறுவது, எதைக் கேட்பது, யார், எதைக் கொடுக்கமுடியும் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருந்து பெற்றுக் கொள்வார்கள்.
சபரிமலை தர்மசாஸ்தாவும் அப்படித்தான். யாரிடம் இருந்து எதைப் பெற வேண்டும், எவரிடம் சொன்னால் அதை சிரமேற்கொண்டு எடுத்துச் செய்வார்கள் என்பதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு, அதை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான் ஐயன் ஐயப்ப சுவாமி.
சினிமாவில் கொடூர வில்லனாக நமக்குத் தெரிந்த நடிகர் நம்பியாரின் பக்தியும் தெய்வ குணமும் எப்போது தெரிந்து கொள்ளமுடிந்தது, நம்மால். ‘நம்பியார் ரொம்ப நல்லவருப்பா. அவரால சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருந்து போன சினிமாக்காரங்க எத்தினி பேர் பாரேன்’ என்று வியக்காதவர்களே இல்லை. சிவாஜி, முத்துராமனில் இருந்து ரஜினி, ஸ்ரீகாந்த் என்று விரிந்து, வடக்கே உள்ள அமிதாப் முதற்கொண்டு எத்தனையோ பேரை சபரிமலை சந்நிதானத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் நம்பியார் குருசாமி.
பாடகர் வீரமணி, அவரின் குடும்பத்தில் இருந்து வீரமணி ராஜூ, இப்போது இந்தத் தலைமுறையில் அவரின் மகன் அபிஷேக் ராஜூ என தன்னைப் பாடுவதற்குமான மனிதர்களை, பக்தர்களைத் தேர்வு செய்து அருளினார் ஐயப்ப சுவாமி.
இப்படித்தான் சாமி அண்ணா போன்றவர்களும் புனலூர் தாத்தா முதலானவர்களும்!
இறைவனின் பூரண அனுக்ரஹம் பெற்ற அருளாளர்களின் வல்லமை, அவர்கள் வெளிப்படுத்தாவிட்டாலும், வெளிப்படுத்தத் தெரியாது போனாலும் தக்க சமயத்தில் அது தானாகவே வெளிப்படும். கடவுளே வெளிப்படுத்துவார்.
சாமி ஐயரின் இந்தத் தன்மை - அவரது ஒவ்வொரு முயற்சியிலும் வெளிப்பட்டது. மற்றவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனைகளை, ஐயப்பன் - எனும் துணை கொண்டு ஐயப்ப பக்தியை அவர் சர்வ சாதாரணமாக நிகழ்த்தினார்.
அப்படி அவரது சாதனைகளின் சிகரம் தான் சபரிமலையின் பங்குனி உத்திர மஹோத்ஸவம். ஐயப்பனுக்கு உகந்த நாளாக, - சாஸ்தாவின் அவதார தினமாக இருந்த போதும், பல்லாண்டுகளாக பங்குனி உத்திர பூஜை சபரிமலையில் நடைபெறவில்லை. அவ்வளவு ஏன்... ஆலயம் அப்போது திறக்கப்படுவது கூட இல்லை.
தனக்கிட்ட அருளாணையை உணர்ந்த சாமி அண்ணா, இந்த பங்குனி உத்திர மஹோத்ஸவத்தை சபரிமலையில் நடத்திட முடிவு செய்தார். பக்தர்களின் ஆதரவுடன் சாமி அண்ணா முயற்சிகள் மேற்கொண்டார். சபரிமலை ஆலயத்தை பங்குனி உத்திரத்துக்காக திறக்கச் செய்தார்.
தன் சொந்த முயற்சியில் வைதீகர்களை அழைத்துக் கொண்டு மலையேறினார் சாமி அண்ணா. லட்சார்ச்சனையைத் தொடங்கினார். பின்னர் வருடா வருடம் அது வளர்ச்சியை அடைந்து - வைதீக ஹோமங்கள், ஜபங்கள் என கோலாகலமாக நடந்தேறியது.
சில வருடங்களிலேயே சாமி அண்ணாவின் பங்குனி உத்திர யாத்திரைக்கு 500க்கும் மேற்பட்ட ஐயப்பன்மார்களும், 80 வைதீகர்களும் வந்தார்கள். ஏழு பஸ்களும், எட்டு கார்களும், 2 லாரிகளும் என மகத்தான உத்ஸவமாக அது வளர்ந்தது.
பங்குனி உத்திர மஹோத்ஸவத்தை அவர் நடத்திய வித பிரமிக்கத் தக்கது. எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
அன்றைய சபரிமலை, - இப்போது இருப்பது போலக் கிடையாது; பார்த்தாலே பயமுறுத்தும் வகையிலான காடு. ஒவ்வொரு பொருளையும் தேடிப்பிடித்து எடுத்துப் போக வேண்டும். எதையாவது மறந்து விட்டால், அவசரத்துக்கு எங்கும் வாங்க கூட முடியாது.
கற்பூரத்தில் இருந்து அம்மிக் குழவி வரை. அரிசி, பருப்பு, காய்கறிகளில் இருந்து தீப்பெட்டி வரை பாலக்காட்டிலிருந்து தான் போக வேண்டும்.
லாரிகளை ஏற்பாடு செய்து, அம்மிகுழவியையும், ஆட்டாங்கல்லையும் ஏன் வருபவர்களுக்கு காபி, பால் வேண்டும் என்பதற்காக பசுமாட்டையும் கூட ஏற்றிச் சென்ற கதைகளை, கதைகதையாக பிரமித்தபடி விவரிக்கிறார்கள் இன்றைக்கும். அந்த பூஜையில் பங்கெடுத்த வைதீகர்களும் பக்தர்களும் அதிசயித்துச் சொல்கிறார்கள்.
இத்தனைக்கும் சாமி அண்ணாவுக்கு என்றுமே பணத்தேவை என்பது உண்டானதே இல்லை. டொனேஷன், வசூல் என்று எங்கும் போனது கிடையாது. எவரிடமும் கேட்டது கிடையாது. அவர் வீட்டுத் திண்ணைக்கு தேடி வந்து, தேவையான பொருட்களையும், வசதிகளையும் அவரவரே செய்து கொடுத்தார்கள்.
யாரிடமிருந்து என்ன பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஐயப்பனுக்கு தெரியும் என்று திடமாக நம்பிய சாமி அண்ணாவிடம் இருந்து எதையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியும் என உணர்ந்து, திட்டமிட்டு அவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டார் சாஸ்தா. சாமி அண்ணாவின் அத்தனை செயல்களுக்கும் ஐயன் ஐயப்ப சுவாமி, பக்கபலமாக நின்றான் என்பதே உண்மை.
சாமி ஐயரால் 1988ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட சபரிமலை பங்குனி உத்திர மஹோத்ஸவம் பற்றி - அதைப் பார்த்தவர்கள், உணர்ந்து அனுபவித்தவர்கள், ஆனந்தத்துடன் இன்றைக்கும் மெய்சிலிர்க்கப் பேசுகிறார்கள்.
லட்சார்ச்சனையாக துவங்கிய பங்குனி உத்திரம், புருஷ ஸூக்த ஹோமம், ருத்ராபிஷேகம் என வளர்ந்து மஹா ருத்ரமாகி, அதிருத்ரம் நடத்தும் அளவுக்கு வளர்ந்தது, ஐயப்பனின் ஸங்கல்பம். சாஸ்தாவின் கட்டளை.
இனிய ஐயப்ப பக்தர்களே! நீங்கள் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். விரதம் மேற்கொண்டிருக்கிறீர்கள். இருமுடி கட்டிக் கொண்டு, சபரிமலை ஏறப்போகிறீர்கள். சந்நிதானத்தில் நிற்கப் போகிறீர்கள். சாஸ்தாவை கண்குளிரத் தரிசிக்கப் போகிறீர்கள். இவை அனைத்துமே ஐயப்ப சுவாமியின் கட்டளை; திட்டம்.
உங்களுக்கு ஏதோ செய்யத் திட்டமிட்டிருக்கிறான் ஐயப்பன். உங்கள் குடும்பத்துக்கான தேவையை நிறைவேற்றித் தர முடிவு செய்துவிட்டான் மணிகண்டன். உங்கள் வாழ்வை நேராக்கவும் எதிர்காலத்தை வளமாக்கவும் அருளப்போகிறான் சபரிகிரிவாசன்.
ஆமாம்... நீங்கள் ஐயப்பனுக்கு என்ன தரப்போகிறீர்கள்?
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
- ஐயன் வருவான்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago