ஏப்.12-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்.19-ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 22-ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. அதேபோல் கள்ளழகர் கோயில் சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு ஏப்.23ல் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

இது தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 11-ம் தேதி வாஸ்து சாந்தி நடைபெறும். ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

அன்றிரவு கற்பக விருட்சம், சிம்மம் வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து தினமும் காலை மாலையில் சுவாமி அம்மன் புறப்பாடு நடைபெறும். ஏப்.13-ல் காலையில் தங்கச்சப்பரம், மாலையில் பூதம், அன்னம் வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். ஏப்.14 கைலாசபர்வதம், காமதேனு வாகனம், ஏப்.15ல் பாவக்காய் மண்டகப்படி, தங்கப்பல்லக்கு, ஏப்.16ல் தங்கக்குதிரை வாகனம், ஏப்.17ல் மீனாட்சிசுந்தரேசுவரர் சைவசமய ஸ்தாபித லீலை நடைபெறும்.

ஏப்.18ல் நந்திகேசுவரர், யாளி வாகன புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து ஏப்.19-ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் இரவு 7.35 முதல் 7.59 மணிக்குள் நடைபெறும். ஏப்.20ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திக்கு விஜயம் நடைபெறும். முக்கிய விழாவான ஏப்.21-ல் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் நடைபெறும்.

அன்று மாலையில் பூப்பல்லக்கு, வெள்ளி சிம்மாசனம், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகன புறப்பாடு நடைபெறும். ஏப்.22-ல் காலை 7மணியளவில் தேரோட்டம் நடைபெறும். அன்றிரவு சப்தாவர்ணச்சப்பரம் எழுந்தருளல் நடைபெறும். ஏப்.23ல் சித்திரைப் பெருவிழா நிறைவு பெறுகிறது.

அதனைத்தொடர்ந்து கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்.22ல் கள்ளழகர் எதிர்சேவை நடைபெறும். தொடர்ந்து முக்கிய விழாவான ஏப்.23ல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE