பழநி கோயில் பஞ்சாமிர்த லாரியை சிறைபிடித்து போராட்டம்

By செய்திப்பிரிவு

பழநி: பழநியில் பஞ்சாமிர்தம் எடுத்துச் சென்ற தேவஸ்தான லாரியை இந்து அமைப்பினர், பொதுமக்கள் நேற்று சிறை பிடித்தனர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ டப்பா ரூ.40-க்கும், டின் ரூ.45-க்கும் விற்பனை செய்யப் படுகிறது. பஞ்சாமிர்த டப்பாவில் குறிப்பிட்ட தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

அதன்படி, விற்பனையாகாமல் காலாவதியான பஞ்சாமிர்தத்தை 50-க்கும் மேற்பட்ட கேன்களில் எடுத்துச் சென்று, ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் உள்ள பழநி தேவஸ்தானத்துக்கு சொந் தமான கோசாலையில் கொட்டி அழிப்பதற்காக நேற்று காலை லாரியில் கொண்டு சென்றனர். தேவஸ்தான லாரி பழநி அடிவாரம் அய்யம்புள்ளி சாலையில் வந்தபோது, இந்து அமைப் பினர், பொது மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பஞ்சாமிர்தம் காலா வதியான நிலையில் எடுத்து செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப் படுகிறதா? என கேள்வி எழுப்பினர். தகவலறிந்து வந்த அடிவாரம் போலீஸார் தேவஸ்தான லாரியை காவல் நிலையம் எடுத்து சென்றனர். தைப்பூச திருவிழாவின் போது தயாரிக்கப்பட்டு விற்பனை யாகாமல் காலாவதியான பஞ்சா மிர்தத்தால் ரூ.30 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது என இந்து அமைப்பினர் குற்றம் சாட்டினர்.

மேலும், லாரியில் எடுத்துச் சென்ற பஞ்சாமிர்தம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்தனர். இதேபோல், பணி செய்ய விடாமல் தடுத்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் இந்து அமைப்பினர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்படியே, காலா வதியான பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுகிறது. இது வழக்கமான ஒன்று. அதே போலத்தான், நேற்றும் காலாவாதியான பஞ்சாமிர்தத்தை அழிப்பதற்காக கேன்களில் எடுத்து செல்லப்பட்டது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE