ந
மக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம்.
நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளைத் துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்கத் துக்கஹேதுவும் குறையும். இந்தப் பிறவி முடியும் முன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம். அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகிவிடலாம்.
நிலைத்த ஆனந்தம்
மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்துவிடுகிறான்? நாயும் நரியும் கரப்பான் பூச்சிகளும் கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாகின்றன. பொதுவாக மனிதனும் இதற்குமேல் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. அப்பொழுது இவனது விசேஷ ஞானத்தில் பெருமைப்பட என்ன இருக்கிறது? எல்லாவற்றிலும் பெரிய ஞானம் நிலைத்த ஆனந்தத்துக்கு வழிகண்டு கொள்வதுதான். மனிதன் இப்படிப்பட்ட நிலைத்த ஆனந்தத்தைப் பெறுகிறானா?
யோசித்துப் பார்த்தால், பரம தாத்பரியமாகத் தெரிவது, இந்த ‘ஞானம்’, ‘ஆனந்தம்’, ‘நாம்’ என்பதெல்லாம் ஒன்றுதான். நாம் உண்மையில் யார் என்பதை உணரும் ஞானம் வரும்போது, நாமே ஞானமயமான ஆனந்தம் என்று கண்டுகொள்வோம்.
‘எனது’ என்ற சம்பந்தம்
வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய்விட்டால் ஆனந்தம் போய்விடுகிறது. உதாரணம் சொல்கிறேன்.
ஒருவருக்குச் சொந்தமாக கொஞ்சம் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் முதலில் வருஷத்துக்கு வருஷம் விளைச்சல் அதிகமாவதாக வைத்துக்கொள்ளுங்கள். ‘இந்த வயல் என்னுடையது’ என்பதால், விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் அவருக்கு மனம் குளிருகிறது. ஆனந்தம் உண்டாகிறது.
அப்புறம் விளைச்சல் குறையத் தொடங்குகிறது. வயலை வேறு ஒருவருக்கு விற்று சாசனம் பண்ணி விடுகிறார். மறுபடி அடுத்த வருஷம் அதே வயலில் ஏகமாக விளைச்சல் கூடியிருக்கிறது. இப்போது அதைப் பார்க்கும்போது இவர் மனம் குளிரவா செய்கிறது? “அடடா, போன வருஷம் நம் கையில் இருந்தபோது தரிசு மாதிரிப் பொட்டலாக இருந்தது. இப்போது எவனோ ஒருவனுக்கு அதிருஷ்டம் அடிக்கிறதே” என்று வயிற்றெரிச்சல்தான் உண்டாகிறது. ‘எனது’ என்ற சம்பந்தம் இருந்த மட்டுந்தான் அமோக விளைச்சலில் சந்தோஷம் இருந்தது. பிறகு, அதே விளைச்சலில் உணர்ச்சி அடியோடு மாறிவிட்டது.
மாயைக்கு ஆளான ‘நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும் சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற அந்த வெறும் ‘நான்’ எத்தனை ஆனந்தமயமாக இருக்கும். வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காய்க் கறியிலும் சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம். வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால், அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம் என்ன.
கசப்பான துக்க உலகத்தில் ‘நான்’ என்பதன் மாயக் கிரணங்கள் சம்பந்தப்படுகிறபோதே அதில் தித்திப்பு ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால், அந்த ‘நான்’ மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது எத்தனை தித்திப்பாக ஆனந்த மயமாக இருக்க வேண்டும்?
மாயச் சட்டியை உடைத்துப் போடுங்கள்
சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும். மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய துவாரங்கள் வழியாகக் கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த ஒளியைப் பார்க்கிறோம். மாயச்சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த ஜோதிர் மயமாகவே ஆகிவிடலாம்.
துவாரங்களின் அளவைப் பொறுத்துப் பல்வேறு அளவுகளில் ஒளி வெளிவந்தாலும் உள்ளேயிருப்பது ஏக ஜோதிதான். நாம் மாயச்சட்டியை உடைத்துவிட்டால் உலகத்தில் பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம் ஒன்றான ஆனந்த ரூபமாகவே தெரியும்.
ஆத்ம ஞானம் பெற்ற ரிஷிகள் சக்தியே இதற்கு திருஷ்டாந்தம். சகல லோகங்களுக்கும் சகல காலங்களுக்கும் சென்று அவர்கள் விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். நம் காதுக்குக் கேட்காத சப்தங்களை ஆகாயத்தில் கேட்டு வேத மந்திரங்களைக் கொடுத்தார்கள். எப்படி ஆசையை அடக்குவது? எப்படி மனத்தை நிறுத்துவது? எப்படி நிலைத்த ஆனந்தத்தை அடைவது என்று கேட்கிறவர்கள் அந்த வேதங்கள் சொன்னபடி நடந்தாலே போதும். முடிவில் பேரானந்தம் அடையலாம். இதற்குப் பரமேசுவரன் அனுக்கிரகம் செய்வாராக.
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago