பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்
உண்மைக்கு என்றுமே வலிமை அதிகம். அது பக்தியாக இருந்தாலும் சரி... அன்பாக இருந்தாலும் சரி. சத்தியம எங்கே இருக்கிறதோ அங்கே சாந்நித்தியமும் இருக்கும். சக்தியும் இருந்தே தீரும்.
அருணகிரி நாதர் மீது மன்னன் அளவற்ற பிரியமும் மரியாதையும் கொண்டிருப்பதை விரும்பாத சம்பந்தாண்டான் எனும் பண்டிதன், சூழ்ச்சி ஒன்றைக் கையாண்டான்.
அந்தச் சூழ்ச்சிக்குப் பின்னே ஆணவமும் கர்வமும் அலட்டலும் அகங்காரமும் இருந்தன. பொறாமையும் வஞ்சனையும் குடிகொண்டிருந்தன.
‘மன்னா. அந்த அருணகிரி தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். அவனைக் கூப்பிடுங்கள். அடியேன் தேவி உபாஸகன் என்பதை நீங்களே அறிவீர்கள். இந்த ஊர்மக்களும் அறிவார்கள். என்னுடைய சக்தியால் அந்த தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் முருகனடிமை என்று சொல்லிக் கொள்ளும் அருணகிரி, முருகப்பெருமானை இங்கே தோன்றச் செய்யவேண்டும்.
அப்படிச் செய்ய இயலாது போனால், இந்த ஊரை விட்டே அவன் ஓடவேண்டும் என்றான் சம்பந்தாண்டான்.
இந்த இடத்தில் மன்னன் வேறு மாதிரி யோசித்தான். ‘அடடா... சம்பந்தாண்டானால் தேவியையும் தரிசிக்கலாம். அருணகிரியால் முருகப்பெருமானையும் தரிசிக்கலாம். ஒருவேளை இருவரில் ஒருவரே பக்தியில் வல்லவராக இருந்தால், இரண்டு தெய்வங்களில் ஒரு தெய்வத்தைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்’ என நினைத்தான். சம்பந்தாண்டானின் திட்டத்தை ஏற்றுக் கொண்டான்.
இதுகுறித்து அருணகிரிநாதருக்குச் சொல்லப்பட்டது. அவரும் ஏற்றுக் கொண்டார். ‘என் அப்பன் முருகன் என்னை ஒருபோதும் கைவிடமாட்டான். எனக்காக நான் எங்கே கூப்பிட்டாலும் ஓடி வந்து நிற்பான்’ என்று உறுதிபடக் கூறினார்.
திருவண்ணாமலை எனும் க்ஷேத்திரம் சாதாரணமான தலமல்ல. மிகப்பெரிய புண்ணிய பூமி. புண்ணியம் அடைந்தவர்கள் எவரோ அவர்களுக்குத் தரிசனம் செய்யும் திருத்தலம். பலப்பல ஜென்மங்களுக்கு முன்னே செய்திருந்த புண்ணியங்களுக்கான பலன்கள் கூட, திருவண்ணாமலைக்கு எப்போது வருகின்றனரோ அப்போது வட்டியும் முதலுமாகத் திருப்பித் தந்தருள்வார் இறைவன்.
அதனால்தான் முக்தியைத் தேடி இங்கு ஏராளமான சித்தபுருஷர்கள் வந்திருக்கிறார்கள். எனக்கு தரிசனம் தரமாட்டாயா... தரமாட்டாயா என்று மெய்யுருகி வேண்டியிருக்கிறார்கள். இங்கேயே தங்கி, ‘அருணாசல சிவ... அருணாசல சிவ...’ என்று சொல்லி தபஸ் செய்திருக்கிறார்கள். அப்படியான சத்புருஷர்களை, சித்தபுருஷர்களை, மகான்களை கடவுள் ஒருபோதும் கைவிடுவதே இல்லை.
போட்டிக்குக் குறிக்கப்பட்ட நாளும் வந்தது.
சம்பந்தாண்டான், மந்திரக்காரன். மாய்மாலங்கள் தெரிந்தவன். சூழ்ச்சிக்காரன். சூதுவாது அறிந்தவன். தந்திர குணங்கள் கொண்டவன். தன் மந்திர வித்தையாலும் தந்திரத்தாலும் தேவியைப் போன்றதொரு தோற்றத்தை அவனால் உண்டாக்கிக் காட்ட முடியும். எல்லோரும் பார்க்கும்படி தேவியின் உருவத்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட முடியும். அப்படியான நம்பிக்கையுடன் மிதப்பாக இருந்தான். அவனுடைய கர்வத்துக்குக் கேட்கவா வேண்டும்?
அந்த நாளில்... விஷயம் அறிந்த மக்கள், திரண்டு வந்துவிட்டார்கள். அமைச்சரவையில் இருந்தவர்களும் வந்தார்கள். மன்னரும் படையினருடன் வந்து இறங்கினார். மன்னரை வாழ்த்தி வரவேற்றார்கள். சம்பந்தாண்டானும் அருணகிரிநாதரும் கூட்டத்தின் நடுவே நின்றிருந்தார்கள்.
சம்பந்தாண்டனுக்கு முதல் வாய்ப்பு. முதலில் அவனுடைய முறை. தேவி துதிகள் செய்து அவளை வணங்கினான். கண் மூடிக் கும்பிட்டான். நெஞ்சில் கைவைத்து வணங்கினான். ‘நீ இங்கே வந்து காட்சி கொடு’ என்று கேட்டான். அது அதிகாரத் தொனியாக இருந்தது. அன்பாகக் கேட்கவில்லை அவன். அப்படி அன்புடன் கேட்கவும் தெரியாது அவனுக்கு. ஒரு அதட்டலுடனும் அதிகாரத்துடனும் தேவியை அழைத்தான்.
அன்பாகவும் பாசமாகவும் பிரியமாகவும் ஆதுரமாகவும் அழைத்தால்தான் குழந்தையே அருகில் வரும். கடவுள் எம்மாத்திரம்? தேவி, வந்துவிடுவாளா. கடும் கோபம் கொண்டாள். அவளை பல முறை துதிகள் சொல்லி, ஸ்லோகம் சொல்லி, பாராயணம் படித்து, பாடல்கள் பாடி ... என்னென்னவோ செய்தார். ம்ஹூம்... தேவியானவள் வரவே இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக முகம் மாறியது சம்பந்தாண்டானுக்கு. குரல் உடையத் தொடங்கியது. கண்களில் இருந்த கர்வம் காணாமல் போயிருந்தது. கிட்டத்தட்ட அவருடைய தோல்வி உறுதியானது.
இப்போது எல்லோரும் அருணகிரிநாதரைப் பார்த்தார்கள். மன்னன் இன்னும் கூர்மையாக அவரையே கவனித்தான். ஆனால் அருணகிரிநாதர், கண்கள் மூடியே இருந்தன. அவர் கால்கள் மடக்கி, நெஞ்சு நிமிர்த்தி, சீரான சுவாசத்துடன் கண்கள் மூடி அமர்ந்திருந்தார். உதட்டோரத்தில் புன்னகை தொக்கி நின்றது.
சிறிது நேரம் அங்கே நிசப்தம். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. பார்த்துக்கொள்ளவில்லை. என்ன... என்ன... என்பது போல் அருணகிரிநாதரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மன்னர் வைத்த கண் வாங்கவில்லை. இமைக்கக் கூட இல்லாமல் பார்த்தபடியே இருந்தார்.
அருணகிரிநாதர் கண் திறந்தார். உதட்டில் இருந்த புன்னகை, கண்களில் மலர்ச்சியாய் மின்னியது. அருணாசலேஸ்வரர் கோயிலின் வடக்கே இருக்கும் மண்டபத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். வாருங்கள் போகலாம் என்று சொல்லி எழுந்திருந்தார். ஓட்டமும் நடையுமாக மண்டபத்துக்குச் சென்றார். எல்லோரும் ஓடினார்கள். அருணகிரிநாதரின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், எல்லோரும் திணறி, மூச்சுத் திணறி ஓடி வந்தார்கள்.
அங்கே... ‘மணிரெங்கு...’ என்று தொடங்கும் திருப்புகழைப் பாடினார். பரவசப் பெருக்குடன் பாடிக்கொண்டே இருந்தார். பாடலை பாடி முடிக்கும் வரை வரவே கூடாது. பாடலைக் கேட்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ... பாடி முடித்ததும் அங்கே காட்சி தந்தார் கந்தக் கடவுள்!
மயில் மீது அமர்ந்தபடி, மயிலை விட அழகனாய் அங்கே தோன்றினான் முருகப் பெருமான். அமர்ந்திக்கும் மயில் பார்ப்பதா, கையில் வைத்திருக்கும் வேல் அழகு பார்ப்பதா, வேலவனைப் பார்ப்பதா என்பதற்குள் அருளி மறைந்தார் வேலவர்!
அருணகிரிநாதரின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. அவரும் அவரின் திருப்புகழும்... இன்னும் இன்னும் இன்றைக்கும் வியாபித்து, நமக்கெல்லாம் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த மண்டபத்தில் நின்று வானத்தைப் பார்த்தார் ராம்சுரத் குன்வர். மலை பார்த்தார். கோயில் கோபுரம் பார்த்தார். உள்ளே அருணாசலேஸ்வரரைப் பார்த்தார்.
திருவண்ணாமலை சென்றால், அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கே அந்த மண்டபடத்தில் கொஞ்ச நேரம் நின்று பாருங்கள். அமர்ந்து பாருங்கள். கண் மூடி இருந்து பாருங்கள். உணருவீர்கள். அங்கே ஓர் சாந்நித்திய சக்தி பிரவாகித்திருப்பதை உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா.
- ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago