சிவாலய ஓட்டமும் 12 கோயில்களும்!

By வி. ராம்ஜி

மகா சிவராத்திரியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் பனிரெண்டு சிவாலயங்களை ஓடியபடி சென்று தரிசிப்பார்கள் பக்தர்கள்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த சிவாலய ஓட்டக் கோயில்கள் பனிரெண்டு என்னென்ன?

திருமலை: சிவாலய ஓட்டம் துவங்கும் முன்சிறை என்ற ஊரை ஒட்டியுள்ள திருமலை சிவாலயம் முக்கியத்துவம் வாய்ந்தாகப் போற்றப்படுகிறது. மலை மீது இருக்கும் கோயிலுக்குச் செல்வதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் தனித் தனியே சந்நிதிகள் உண்டு. இங்கு ஸ்ரீராமர் வந்து வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்! .

பிரணவத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை முருகப்பெருமான் இங்கு சிறைப்பிடித்ததாகவும், அதனால் இந்த ஊர் முன்சிறை என்றானது என்றும் சொல்வார்கள். திருமலை கோயிலில் சாயரட்சை பூஜை முடிந்ததும், சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. பின், மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சியை அடைவார்கள்.

திக்குறிச்சி: திருமலையில் இருந்து 12 கிமீ. தொலைவு. தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள ஆலயம். இங்கு மகாதேவர், விநாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, நாகராஜா ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. ஆற்றில் நீராடி மகாதேவரை தரிசித்த பின், இங்கிருந்து அருமனை களியல் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ள திற்பரப்பு எனும் பிரபலமான அருவி கொண்ட திருத்தலத்தை அடையலாம்.

திற்பரப்பு: மேற்கு நோக்கியுள்ள அற்புதமான ஆலயம். இந்தக் கோயில் வட்ட வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. விசேஷமானது. இங்கு மகாதேவர், முருகப்பெருமான், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், அம்மன் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன.

சிவன் கோயில்களில் சிவலிங்கத்தின் எதிரில் நந்தி இருக்கும். இதுதானே வழக்கம். ஆனால், இங்கு சிவனின் உக்கிரத்தைத் தணிப்பதற்காக, கருவறை ஓரத்தில் உள்ளது. இதையொட்டிய திற்பரப்பு அருவி இன்னும் ரம்மியம், பேரழகு. இதையடுத்து திருநந்திக்கரை தலத்தைத் தரிசிக்கலாம்!

திருநந்திக்கரை: குலசேகரம் வழியே 8 கி.மீ. தொலைவு. இங்கு, பார்வதி சமேதராக ஈசன் திருவருள் புரிகிறார். இங்கு உள்ள பரந்து விரிந்த பாறையின் வெப்பம் தாங்காத சிவபெருமான், கோயில் தெப்பக் குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி, தனக்குக் குளத்திலேயே ஆலயம் எழுப்புமாறு கட்டளையிட்டார் என்கிறது ஸ்தல புராணம்.

இது கேரள மாநிலத் தந்திரிகளால் ஆகம விதிப் படியும், கேரள தச்சு சாஸ்திரப்படியும் உண்டான ஆலயம். கோயிலையொட்டி குகைக் கோயில் ஒன்றும், கல்வெட்டுகளும் உள்ளன. அடுத்து, பக்தர்கள் பொன்மனை நோக்கி சிவனாரைத் தரிசிக்க ஓடுகின்றனர்.

பொன்மனை: சுமார் 7 கி.மீ. தொலைவு. தீம்பிலான்குடி மகாதேவர் ஆலயம் என்பது இந்தப் பகுதியில் வெகு பிரபலம். இங்கு, கிழக்குப் பார்த்தபடி சிவபெருமான் அருள்புரிகிறார். இந்தத் தரிசனத்துக்குப் பின் பன்றிப்பாகம் நோக்கி ஓடுகின்றனர்.

பன்றிப்பாகம்: இந்த ஊர் சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள பன்றிப்பாகம் ஆலயத்தில், சிவலிங்கம் கருவறையில் இருக்க, விநாயகர் மற்றும் நாகராஜாவுக்குத் தனியே சந்நிதிகள் உள்ளன. தரிசனத்துக்குப் பிறகு, பக்தர்கள் கல்குளம் நோக்கிச் செல்கின்றனர்.

கல்குளம்: பன்றிப்பாகத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அங்கே புகழ் பெற்ற பத்மனாபபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள கல்குளம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். அற்புதமான ஆலயம். மனதை ரம்மியமாக்கும் அமைதியாக்கும் சூழல், பக்தர்களை இன்னும் பரவசப்படுத்தும்.

இங்கு ஆதிமூல மூர்த்தியாக, 10 அடி உயர சிவலிங்கம் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில், முன்புறம் அழகுமிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. அடுத்து, மேலாங்கோடு செல்ல ஓட்டத்தைத் தொடங்குவார்கள் பக்தர்கள்.

மேலாங்கோடு: சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலாங்கோடு இசக்கியம்மன் ஆலயம், பத்மனாபபுரம் கோட்டை ஆகியவையும் அருகில் உள்ளன. இதையடுத்து திருவிடைக்கோடு நோக்கி தொடருவார்கள் பக்தர்கள்.

திருவிடைக்கோடு: சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிடைக்கோடு. மேற்கு நோக்கி அமைந்துள்ள ஆலயங்களில் இதுவும் ஒன்று. கேரள- தமிழக கட்டடக் கலை பாணிகளைக் கொண்டு கட்டப்பட்டது, இன்னொரு ஆச்சரியம்... வித்தியாசம்! . அடுத்து திருவிதாங்கோடு தரிசனம்.

திருவிதாங்கோடு: சுமார் 8 கி.மீ. தொலைவு. சிவபெருமானுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இங்கே தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆலய மண்டபத் தூண்களில் கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் சிற்பங்களாக அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. கட்டடக் கலையின் அற்புதங்கள் பேசும் ஆலயங்களில் இதுவும் ஒன்று. அடுத்து திருப்பன்றிக்கோடு.

திருப்பன்றிக்கோடு: சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். பள்ளியாடி அருகில் உள்ள ஆலயம் இது. விமானத்தில் ஸ்ரீநரசிம்மர், ஐயப்ப சுவாமி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன. சிவபெருமானும் நந்தியும் முறையே வேடனாகவும் பன்றியாகவும் உருமாறியதும், அந்தப் பன்றியை வேட்டையாடும்பொருட்டு சிவபெருமானுடன் அர்ஜுனன் போர்புரிந்த இடமும் இது என்கிறது புராணம்! பிறகு, திருநட்டாலம்.

திருநட்டாலம்: திருப்பன்றிக்கோட்டிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தக் கோயிலை நாடி ஓடி வருவார்கள். இந்த திருநட்டாலம்தான் 12 வது திருத்தலம். இத்துடன் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள் பக்தர்கள்!

இந்தக் கோயிலில், ஸ்ரீசங்கரநாராயணர் எனத் திருநாமம் விஷ்ணுவுக்கு! 12-வது ருத்திராட்சம் விழுந்ததாகவும் வியாக்ரபாதர் இந்த ஆலயத்தை அமைத்தார் என்றும் சொல்கிறது ஸ்தல புராணம்.

இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சிவபெருமானையும் பின்னர் சங்கரநாராயணரையும் தரிசித்து, ஹரியும் சிவனும் ஒன்றே என உணர்ந்து, பூரித்து, நிம்மதியும் நிறைவுமாகச் செல்வார்கள் பக்தர்கள்.

ஹரியும் சிவனும் ஒன்றென உணர்வோம். சைவ வைணவ பேதமின்றி வணங்கித் தொழுவோம்!

கோவிந்தா... கோபாலா... தென்னாடுடைய சிவனே போற்றி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்