பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்
காஞ்சி மகாபெரியவாளுக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்குமான தொடர்பு, சொல்லில் அடக்கமுடியாத ஒன்று. அது ஆத்ம பந்தம். அந்தப் பந்தத்தை சிலிர்க்க சிலிர்க்க விவரித்திருக்கிறார் ரா.கணபதி அண்ணா.
’’மகாபெரியவாளின் அடியார்களில் சந்திரமெளலி என்பவர், திருவண்ணாமலையிலேயே வசிக்கும் பாக்கியம் கிடைக்கப்பெற்றார். அப்படி திருவண்ணாமலையில் இருக்கும்போது, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அன்பும் ஆசியும் கிடைக்கப் பெற்றவரானார்.
சந்திரமெளலி, காஞ்சிபுரத்துக்கு வரும்போதெல்லாம்,மகாபெரியவா அவரிடம் கேட்கும் முதல் கேள்வி... முக்கியமான கேள்வி... ’விசிறி மட்டை சாமியார்’ எப்படி இருக்கார்? என்றுதான்! கேட்பதற்கு முன்பும் கேட்ட போதும் கேட்ட சிறிது நேரமும் கண் மூடி தியானத்தில் இருப்பார் மகா பெரியவா.
அது 1985ம் வருஷம். டிசம்பர் மாதம். காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தார் சந்திரமெளலி. மடத்துக்கு வந்திருந்தவரிடம், ‘’ஏகாம்பரேஸ்வரர் கோயில்ல ஹோமம் நடந்துண்டிருக்கு. போய் பிரசாதம் வாங்கிக்கோ’ என அருளினார் மகாபெரியவா. அதைக் கேட்ட சந்திரமெளலியும் ஓடிப்போய், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று, பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வந்தார்.
அப்போது மகாபெரியவா, காமாட்சி அம்பாளின் பிரசாதத்தையும் அவரிடம் கொடுத்தார். இப்போது அவரிடம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் பிரசாதமும் காமாட்சி அம்பாள் பிரசாதமும் இருந்தன. ’இதை அவர்கிட்டே போய்க் கொடு’ என ஆசீர்வதித்து அனுப்பினார்.
அந்தப் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்ட பகவான் யோகி ராம்சுரத்குமார், ரொம்பவே உணர்ச்சிமிகுந்து காணப்பட்டார். பிரசாதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். தன் சிரசில் நெடுநேரம் வைத்துக் கொண்டார். நெஞ்சில் வைத்து அணைத்துக் கொண்டார். பிறகு, அருகில் இருந்தவர்களுக்கெல்லாம் வழங்கினார்.
சரி... மகா பெரியவா பிரசாதங்கள் கொடுத்தார். பகவான் யோகி ராம்சுரத்குமார் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார். இப்படியாக சாதாரணமாகச் சொல்லிவிடமுடியாது. ஏன் தெரியுமா? அன்றைய நாள்தான்... பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஜயந்தித் திருநாள்! இத்தனைக்கும் டிசம்பர் 1ம் தேதி யோகி ஜயந்தி என்பதெல்லாம் பக்தர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அதனால்தான், பகவான் யோகி ராம்சுரத்குமார், இன்னும் இன்னும் நெகிழ்ந்து போனார். மகிழ்ந்து போனார், மகாபெரியவாளின் பேரன்பில் நெக்குருகிப் போனார்.
இதையடுத்து, எப்படியும் மூன்று மாதம் ஆகியிருக்கும். காஞ்சிக்குச் சென்றார் சந்திரமெளலி. மகாபெரியவாளிடம் வழக்கமான விசாரிப்பு இல்லை. அதாவது, யோகி குறித்து நல விசாரிப்புகள் எதுவும் கேட்கவில்லை. எடுத்ததுமே... ‘ஒடனே நீ ஊருக்குத் திரும்பிப் போ. விசிறி மட்டை சாமியாரை, ஒரு டாக்ஸி வைச்சு கோவிந்தபுரம் அழைச்சிண்டு போ. அவருக்கு போதேந்திராள் சமாதி தரிசனம் பண்ணி வைச்சி, திரும்பவும் திருவண்ணாமலைக்குக் கொண்டுவந்து விடு’ என்று உத்தரவிட்டார்.
அதுமட்டுமா? டாக்ஸி செலவுக்காகிற பணத்தை, வந்திருக்கும் அடியவர்களிடம் இருந்து வாங்கிக் கொடுத்து அனுப்பிவைத்தார்.
இங்கே ஒரு விஷயம்...
ராம நாமத்தை, ராமநாம வைபவத்தை தட்சிண தேசத்தில், அதாவது தென்னகத்தில் பரப்பியவர்களில் முதல் ஸ்தானம் ஸ்ரீபோதேந்திராளுக்கு உண்டு. கோவிந்தபுரம் என்பது கும்பகோணத்துக்கு அருகே இருக்கிறது. இந்த கோவிந்தபுரத்தில்தான், ஸ்ரீபோதேந்திராளின் சமாதி எனப்படும் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது. இவருடைய சமாதியில் இருந்து தினமும், எப்போதும், எல்லா நேரமும் ராமநாமம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று பலரும் சொல்வார்கள். மனதை ஒருநிலைப்படுத்துகிற ஏராளமான பக்தர்கள், இந்த ராமநாமத்தைக் கேட்டு, மெய்சிலிர்த்திருக்கிறார்கள்.
அதாவது, ராமநாமத்தையே போதித்து வந்து போதேந்திராளின் அதிஷ்டானத்துக்குச் சென்று தரிசிக்கவேண்டும் என்பது மகாபெரியவாளின் அவா. யார் தரிசிக்கவேண்டும்? இப்போது, ராமநாமத்தையே சதாசர்வகாலமும் உச்சரித்துக் கொண்டு, எல்லோரையும் உச்சரிக்கச் செய்கிற பகவான் யோகி ராம்சுரத்மார் சென்று தரிசிக்கவேண்டும்.
காஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தார் சந்திரமெளலி. மகாபெரியவா கூறியதை பகவான் யோகி ராம்சுரத்குமாருக்குத் தெரிவித்தார்.
இதைக் கேட்டுக் கண் மூடி தியானித்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார். சந்திரமெளலி பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே அப்படியொரு மெளனம் சூழ்ந்திருந்தது.
சிறிது நேரம் கழிந்த நிலையில்... கண் மூடியது மூடியபடி இருக்க... ‘பரமாச்சார்யா எங்கே இருந்தாலும் அதுவே இந்தப் பிச்சைக்காரனுக்கு கோவிந்தபுரம்’ என்றார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
சந்திரமெளலிக்கு என்ன செய்து? எதுவும் புரியவில்லை.
டாக்ஸி வரவழைக்கப்பட்டிருந்தது. டாக்ஸியைப் பார்த்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார். விறுவிறுவென சென்று, அதில் ஏறிக் கொண்டார். ஓடிவந்து சந்திரமெளலியும் ஏறினார்.
’காஞ்சிபுரம் போவோம்’ என்றார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.
அதிர்ந்துபோனார் சந்திரமெளலி. திடுக்கிட்டுப் போனார் டிரைவர்.
ஆனாலும் வண்டி காஞ்சிபுரம் நோக்கிப் பயணித்தது.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெயகுரு ராயா.
-ராம்ராம் ஜெய்ராம்
தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago