பாபாவின் பேரருளையும் பெருங்கருணையையும் அளவிடவே முடியாது! அவரின் விளையாடல்களும் அருளாடல்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதுமெனத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இன்றைக்கு பாபாவின் திருநாமத்தை உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள், உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘சாய்ராம்... சாய்ராம்...’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் அப்போது?
பகவான் சாயிபாபா ஷீர்டிக்கு வந்து அமர்ந்து, அருளாட்சி செய்யத் தொடங்கிய தருணம் அது. சொல்லப் போனால்... அங்கே ஷீர்டிக்கு வந்த பிறகுதான் அவரை எல்லோரும் சாயிபாபா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.
அப்படியொரு காலகட்டத்தில்தான், அந்தக் கள்வன் போலீசில் மாட்டிக் கொண்டான். அவனிடம் ஏகப்பட்ட நகைகள். கைகொள்ளாத நகைகள் சிக்கின. அவனைப் பிடித்து வைத்திருந்த போலீஸார், பிடிப்பதற்கு முன்பும் அடித்திருந்தார்க்ள். அடித்து உதைத்துதான் பிடித்தார்கள். இப்போது திமிறியதால், மீண்டும் அடித்தார்கள்.
‘சொல்லு... இந்த நகைகளை எங்கே திருடினே. ஏது இந்த நகைகள்’ என்று கேட்டுக் கேட்டு அடித்தார்கள். அடி உதையை ஒருகட்டத்தில் தாங்கமுடியாமல் துடித்துப் போனான். கதறினான்.
‘சொல்லுடா... எதுடா இந்த நகையெல்லாம்’ என்று மீண்டும் கேட்டுவிட்டு, அடிக்க கை ஓங்கினார்கள். அந்தத் திருடன் சொன்னான்... ‘இதெல்லாம் நான் திருடலை’ என்றான்.
‘அப்புறம்... நகை எப்படி வந்துச்சு உங்கிட்ட...’ என்று கேட்டார்கள். சட்டென்று அவன் சொன்னான்... ‘‘ஷீர்டியில இருக்காரே... சாயிபாபா... அவருதான் கொடுத்தாருங்க...’’ என்றான்.
அதிர்ந்து போனார்கள் அனைவரும்.
என்ன இது.. என்ன இது... எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘நம்ம சாமியை இழுத்து விட்டுட்டானே’ என அரற்றினார்கள். ‘யாருங்க அவரு’ என விவரம் புரியாதவர்கள் கேட்டார்கள். கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அப்படி தெரிந்து கொண்டதும் ‘அய்யோ... என்னங்க இது கொடுமை’ என்று பதறினார்கள். பரிதவித்தார்கள். ‘சாய்ராம்... சாய்ராம்’ என முணுமுணுத்தபடியே இருந்தார்கள்.
அவன் சொன்னதைக் கேட்டு ஆடித்தான் போனார்கள் போலீசாரும். திருடன் சொன்னதைக் கேட்டு, சாயிபாபாவை சந்தேகப்படுவதா என்று யோசித்தார்கள். அதேசமயம் வேறு வழி இல்லையே என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்கள். ஆனால் இவன் வார்த்தைக்கு வார்த்தை, ‘சாயிபாபாதான் தந்தார்... சாயிபாபாதான் தந்தார்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆகவே என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என முடிவுக்கு வந்தார்கள்.
அரை மனதுடன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சாயிபாபாவுக்கு சம்மன் தயார் செய்தார்கள். போலீஸ்காரர் ஒருவர், சாயிபாபாவைப் பார்க்க வந்தார். விழுந்து நமஸ்கரித்தார். தயங்கித் தயங்கிச் சொன்னார்... ‘பாபா, உங்களுக்கொரு சம்மன்...’ என்று இழுத்தார்.
இரண்டு நிமிடம் அந்த போலீஸ்காரரையே உற்றுப் பார்த்த சாயிபாபா, ஆவேசமானார். கடும் கோபத்துடன்... ‘யாருப்பா அங்கே. யாராவது அந்தப் பேப்பரை வாங்கி நெருப்புல கொளுத்துங்கப்பா’ என்றார்.
சிங்கம் கர்ஜித்த உணர்வு எல்லோருக்கும். கிடுகிடுத்துப் போனார்கள் அனைவரும். யாரோ ஒருவர் விறுவிறுவென ஓடினார். அந்த போலீஸ்காரரிடமிருந்து காகிதத்தை விருட்டென வாங்கினார். பேப்பரைப் பறித்துக் கொண்டு வந்தவர், அதற்கு நெருப்பிட்டுக் கொளுத்தினார்.
அவ்வளவுதான். அரசு செயல்பாட்டை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லவா அது. இன்னும் பதற்றம் கூடியது அங்கே! இறுகிய முகத்துடன் போலீஸ்காரர் அங்கிருந்து நகர்ந்தார்.
மறுநாள்... அரசு தரப்பில் இருந்து ஓலை வந்தது. அதாவது நீதிமன்றக் கடிதம். அதாவது நேற்று வந்தது போல், சம்மன் அல்ல இது. வாரண்ட். பிடிவாரண்ட். சாயிபாபாவை கைது செய்து அழைத்து வருவதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கடிதம் அது.
கடிதம் கொண்டு வந்த அதிகாரி, ‘பாபா, எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அருகில் உள்ள தூலியா நகருக்கு என்னுடன் வந்துவிட்டுச் செல்லுங்கள். திருட்டில் ஈடுபட்ட ஒருவனைப் பிடித்தோம். அவன் நகைகளை நீங்கள் தந்ததாகச் சொல்கிறான். அதற்காகத்தான் இந்த வாரண்ட். எங்களை மன்னிக்கவும் பாபா’ என்று விவரித்தார்.
பாபாவுக்கு மீண்டும் வந்ததே கோபம். ‘அந்தப் பேப்பரை வாங்கி, கழிவறைல வீசுங்கப்பா’ என்று கத்தினார். அவரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, ஒருவர் ஓடிச் சென்று அந்தக் காகிதத்தை அதிகாரியிடம் இருந்து வாங்க முனைந்தார். ஆனால் இந்த முறை விபரீதத்தை உணர்ந்த சிலர், தடுத்து நிறுத்தினார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்கள்.
சிறிது சலசலப்புக்குப் பிறகு, ஆஜராக சம்மதம் தெரிவித்தார் பாபா.
‘எவ்ளோ பெரிய மகான் இவரு. நமக்கெல்லாம் சாமீ. என்னப்பா இது அநியாயமா இருக்குதே...” எனப் புலம்பினார்கள். ‘எவனோ ஒரு திருடன் சொன்னானாம். இவர் பேரைச் சொன்னதால, உடனே இவருக்கு சம்மனாம். என்ன அநியாயம்யா இது’ என யாரோ சில பக்தர்கள் எகிறினார்கள்.
இதனிடையே இன்னொன்றும் நிகழ்ந்தது. ‘எங்கள் பாபா எங்கும் வரமாட்டார். வேண்டுமெனில், கமிஷனரோ அதிகாரியோ இங்கு வந்து விசாரித்துக் கொள்ளட்டும். இதற்கு அனுமதி தேவை’ என்று மனு கொடுத்தார்கள் பக்தர்கள் சிலர்.
அந்த மனு ஏற்கப்பட்டது. அதன்படி, ஷீர்டி எனும் புண்ணீய பூமிக்கு, மாஜிஸ்திரேட் ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டார். அவரும் வந்தார். சாயிபாபாவைப் பார்த்தார். பார்த்த நிமிடமே... ‘இவரொரு மகான். இந்தத் திருட்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது’ என உறுதியாக நம்பினார். ஆனாலும் புகார், வழக்கு, சட்டம், குற்றம், தண்டனை, தீர்ப்பு என்றெல்லாம் இருக்கிறதே!
ஆகவே சாயிபாபா... அந்த மாஜிஸ்திரேட்டால் விசாரிக்கப்பட்டார்.
இது விளையாட்டு. பாபாவின் விளையாட்டு. தன்னை வெளிப்படுத்த மகான்கள் இப்படி ஏதேனும் செய்வார்கள். விளையாடுவார்கள். பாபாவின் இந்த விளையாடலுக்குப் பிறகுதான், இன்னும் இன்னுமாகப் பலரும் அவரைப் புரிந்துகொண்டார்கள். உணர்ந்து சிலிர்த்தார்கள். சிலிர்த்துப் பூரித்தார்கள். பூரித்துப் புளகாங்கிதத்துடன் ‘பாபா... பாபா...’ என்று அரற்றினார்கள். அவரின் திருநாமம் ஒன்றே போதும்... நம்மை உயிர்ப்பிப்பதற்கும் உய்விப்பதற்கும்!
மாஜிஸ்திரேட்... ‘உங்கள் பெயர் என்ன?’ என்று பாபாவிடம் கேட்க, ‘சாயிபாபா என்று இவர்கள் அழைக்கிறார்கள்’ என்றார் பாபா.
‘சரி... உங்கள் அப்பாவின் பெயர்?’ என்று கேட்டார். அவர் சிரித்துக் கொண்டே, ‘என் அப்பாவின் பெயரும் சாயிபாபாதான்’ என்றார்.
’என்ன விளையாடுகிறீர்களா’ என்று சற்றே கோபமானார் மாஜிஸ்திரேட். ஆனால் பாபா கோபப்படவில்லை. கோபமெல்லாம் வரவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தார். சிரித்தபடியே பதில் சொன்னார். ‘நான் எங்கே விளையாடுகிறேன். என் பெயரும் அதுதான். என் தந்தையின் பெயரும் அதுவே’ என்றார் புன்னகைத்தபடி!
மாஜிஸ்திரேட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் குழம்பித்தான் போனார்.
அடுத்து என்ன கேட்பது என்றே மறந்துபோனது அவருக்கு. சிறிது நேரம் யோசித்தார். அடுத்து என்ன கேட்கலாம் என யோசித்துக் கொண்டே இருந்தார்.
கேள்வி கேட்பதற்கு அந்த மேஜிஸ்திரேட் யோசித்து யோசித்துப் பார்த்தபடி இருந்தார். ஆனால் பதில் சொல்வதற்கு எந்தக் குழப்பமோ தயக்கமோ இல்ல்லை பாபாவிடம். மளமளவென பதில் சொல்லிக்கொண்டிருந்தார் சாயிபாபா!
இந்த விசாரணை எங்கே சென்று முடியும் என்பது அந்த மாஜிஸ்திரேட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சாயிபாபா எனும் மகானுக்குத் தெரிந்திருந்தது.
நமக்கேக் கூட என்ன தரவேண்டும், நமக்கு என்ன தேவை என்பதெல்லாம் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ... சாயிபாபாவுக்குத் தெரியும், நமக்கு என்ன வழங்கவேண்டும் என்று!
சாய்ராம்... சாய்ராம்... சாய்ராம்..
- அருள்வார்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 mins ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago