குருவே... யோகி ராமா..! 34: நான் யார்?

By வி. ராம்ஜி

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

‘நான் இன்னாரின் மகன்’ என்கிறோம். நான் இந்தப் பள்ளியில் படிக்கிறேன் என்று சொல்கிறோம். அந்தக் கல்லூரியில் நான் சேர்ந்திருக்கிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறோம். நான் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் என்று பெருமிதத்துடன் சொல்கிறேன். நான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன், நான் இன்னாரின் மகளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என்னுடைய வீடு இந்த இடத்தில், இந்தப் பகுதியில் இருக்கிறது என்றெல்லாம் விவரம் சொல்கிறோம்.

முக்கால்வாசி பேருக்கு, அடுத்த வீட்டுக்காரர் யார், எதிர் வீட்டில் வசிப்பவரின் பெயர் என்ன என்பதெல்லாம் தெரியவே தெரியாது. அந்தத் தெருவில் நான்காம் வீட்டில் வசிப்பவருக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா, அந்த பச்சைக்கலர் பெயிண்ட் அடித்திருக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களைப் பார்க்க , அதே ஊரில் தனியே வசிக்கிற மகனும் மருமகளும் எப்போதாவது மட்டுமே வருகிறார்கள் என்பது குறித்தெல்லாம் அறிந்து வைத்திருப்பதே இல்லை.

உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ அடுத்தவருக்கு, அக்கம்பக்கத்தாருக்கு என்ன பிரச்சினைகள் என்று தெரிந்து கொண்டுவிட்டால், அவர்களை எந்தத் தருணத்திலும் தெரிந்தோ தெரியாமலோ காயப்படுத்த மாட்டோம்தானே!

இன்னும் சிலர், ஏரியாவில் வசிப்பவர்கள் எல்லோருமே இவர்களுக்கு அத்துப்படி. புதிதாக வாடகைக்குக் குடிவந்திருப்பவர் முதல் நான்கு மாதம் கழித்து வேறொரு பகுதிக்கு இடம் மாறிப் போகப் போகிறவர்கள் வரை தெரிந்து வைத்திருப்பார்கள். டீக்கடைக்கார், மெடிக்கல் கடைக்காரர், மளிகைக்கடைக்காரர், கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் இளைஞன் என்று எல்லோரின் பெயர்கள், ஊர் மற்றும் விவரங்களையெல்லாம் சொல்பவர்களாக இருப்பார்கள்.

எல்லாம் இருக்கட்டும். முக்கியமான ஒருவரைத் தெரிந்து கொள்ளவேண்டாமா. அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா. அவர் யார் என்பது தெரியுமா நமக்கு. ஆமாம்... யார் அவர்? அவர்தான்... நாம். அதாவது... நீங்கள்!

சிலரைத் தெரிந்து வைத்திருப்பதும் பலரைத் தெரியாமலேயே இருப்பதுமெல்லாம் இருக்கட்டும். நீங்கள் உங்களைப் பற்றி, தெரிந்து வைத்திருக்கிறீர்களா? இன்னாரின் மகன், இந்தப் பள்ளியில் படிக்கிறேன், இந்தக் கல்லூரி மாணவன், இன்ன இடத்தில் வேலை செய்கிறேன், இவ்வளவு சம்பளம், மனைவியின் பெயர், குழந்தைகள் என்பதெல்லாம் இருக்கட்டும். நீங்கள், உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா.

அதன் முதல், முழுக் கேள்விதான்.. நான் யார்?

திருச்சுழி வேங்கடரமணன் என்கிற வேங்கடராமன் என்கிற பகவான் ரமணருக்குள் எழுந்த இந்தக் கேள்விதான் அவரின் வாழ்க்கையையே, வாழ்க்கைப் பாதையையே மாற்றியது. அவரின் அந்தக் கேள்விதான், அந்த விசாரம்தான், நமக்கெல்லாம் அற்புதமான மகானான ரமண மகரிஷியை வழங்கியது.

நான் யார்? இந்த ஆத்ம விசாரத்தில் இருந்துதான் தொடங்கவேண்டும், ஒவ்வொருவரின் ஆன்மிகப் பயணமும். ஆன்மிகப் பயணம் என்றில்லை... இந்தப் பிறவியில், மரணத்தை நோக்கியதான வாழ்க்கையில்... நான் யார் என்பதை நாம் எல்லோருமே தெரிந்து, அறிந்து, உணர்ந்து, தெளிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

அப்பாவின் மரணம்.... ‘நான் யார்’ எனும் ஆத்மவிசாரத்துக்குள் வேங்கடராமனை இணைத்தது. ஏன் பிறக்க வேண்டும், ஏன் இறக்க வேண்டும், இறப்புக்குப் பின்னே என்ன உண்டு. அது வாழ்தலா... அல்லது வேறு எதுவுமா. வேங்கடராமன் யோசிக்க யோசிக்க... அவருக்குள் திருவண்ணாமலையே படமென விரிந்து ஓடியது.

அருணாசலரிடம் அடைக்கலமாவதே அதற்கான வழி என உணர்ந்தார். அதற்கு திருவண்ணாஅமலை செல்லவேண்டும் என உறுதி கொண்டார்.

திருச்சுழியில் இருந்து திண்டுக்கல்லுக்கும் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்குமாக பாடம் படிக்கச் சென்றவர், பிறவியையும் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள, மதுரையில் இருந்து கிளம்பி திருவண்ணாமலை வந்தார். வேங்கடராமன் என்கிற வேங்கடரமணன்... ரமணரானார். ரமண மகரிஷி என்று கண்டறியப்பட்டார். பிறகு இவரை முழுவதுமாக உணர்ந்தவர்கள், உணர்ந்து சிலிர்த்தவர்கள்... அவரை பகவான் ரமணர் என்றும் பகவான் ரமண மகரிஷி என்றும் போற்றினார்கள். கொண்டாடினார்கள். துதித்தார்கள். தொழுதார்கள். வணங்கினார்கள். ஞானகுருவென ஏற்றுக் கொண்டு, அவரைப் பின் பற்றினார்கள். அவரையே பற்றிக்கொண்டார்கள்.

ஆஸ்ரமத்தில் அமர்ந்திருந்தார் பகவான் ரமண மகரிஷி. அவரைத் தரிசிக்க சீடரொருவர் வந்தார். அப்போது அந்தச் சீடர், ‘சுவாமி, நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். உடனே ரமண பகவான், ‘அதை ஏன் அறிய விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதைக் கேட்ட சீடர், ‘நீங்கள் கடவுளைப் பார்த்திருந்தால், நானும் அவரைப் பார்க்க உங்களின் உதவியை நாடுவேன். நானும் கடவுளைப் பார்ப்பேன். எனக்கும் கடவுள் பார்க்க ஆசையாக இருக்கிறது சுவாமி’ என்று பதில் சொன்னார்.

இரண்டு நிமிடம் மெளனமாக இருந்த ரமண மகரிஷி, ‘’நான் கடவுளைக் காண வேண்டும் என்கிறீர்களே. முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள்’ என்று கேட்டார்.

உடனே வந்திருந்தவர், ‘என் பெயர் தேவதத்த சர்மா.’ என்று சொன்னார். ‘அது சரி. இது உங்கள் பெயர். நீங்கள் யார். அதைச் சொல்லுங்கள்’ என்று கேட்டார்.

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.

’அதான் சர்மா என்று முன்பே சொல்லிவிட்டேனே சுவாமி. நான் ஒரு அந்தணர்’ என்று அடுத்த விளக்கம் சொல்லிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

’அது உங்கள் பணியாக இருக்கலாம். நீங்கள் யார். இன்னும் இதற்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே...’ என்று அழுத்தமாகக் கேட்டார் பகவான்.

சிறிதுநேரம் யோசித்த அந்த மனிதர், ‘நான் யார் என்று என்னால் இதைத் தவிர எதுவும் சொல்ல முடியவில்லை. ஏன் சுவாமி?’ என்று வெள்ளந்தியாகச் சொன்னார்.

அதற்கு ரமணர், ‘நீங்கள் யார் என்பது உங்களுக்கேத் தெரியவில்லை. அதுவே தெரியாத போது, கடவுளை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்? கடவுளை அறிவது மிக எளிது. முன்னதாக, நீங்கள் உங்களை அறிந்திருக்க வேண்டும். அதாவது நீங்கள் உங்களை அறிந்திருந்தால், கடவுளையும் அறியலாம்!’ என்று பதிலளித்தார் பகவான் ரமண மகரிஷி.

அவர் பதிலேதும் பேசவில்லை. இனி பேசுவதற்கு எதுவுமில்லை அவரிடம். ஆனால்... அந்த ஒற்றைக் கேள்விதான்... அந்தக் கேள்வியையொட்டிய சிந்தனைகள்தான் பகவான் ரமணமகரிஷி எனும் மகானை நமக்குத் தந்தது.

இந்தத் தேடலும் தேடலுடனான சிந்தனைகளும் அமைந்துவிட்டால், நாம் மகான்களாக, சித்தபுருஷராக, துறவியாக இருக்க வேண்டும், அப்படிப் போயாக வேண்டும் என்பதெல்லாம் இல்லை. உள்ளே ஒரு தெளிவு அவசியம். நாம் யார் என்பதான தெளிவு மிக மிக அவசியம். இந்தத் தெளிவு இருந்து விட்டால், குறைந்தபட்சப் புரிதல் வந்துவிட்டால்... பிரச்சினைகளின்றி வாழலாம். அல்லது பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழலாம்!

அந்த ‘நான்யார்’ ... யார் வேண்டுமானாலு,ம், எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். கேள்விக்குள்ளே இருக்கிற பதிலைத் தேடலாம். தேடிப் பயணப்படலாம். தேடிக் கண்டடையலாம்!

நான் யார்?

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா

- ராம்ராம் ஜெய்ராம்

 

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்