தீர்த்தமலையில் மாசி மக தேரோட்டம் கோலாகலம்

By செய்திப்பிரிவு

அரூர்: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில் மாசி மகத்தேர் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தினமும் சுவாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மதியம் நடந்தது. இதில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். விநாயகர் தேர், ஈஸ்வரன் தேர், அம்மன் தேர் என 3 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலா வந்தன.

விழாவில் தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தேரின் மீது உப்பு, பொரி, நாணயங்களை வீசி பக்தர்கள் வழிபட்டனர்.

விழாவையொட்டி அரூர், ஊத்தங்கரை, செங்கம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டு கூட்ட நெரிசலால் பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் பெரும் அவதிப்பட்ட நிலையில் நிகழாண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலையோரக் கடைகள் அமைக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

டிஎஸ்பி ஜெகன்நாதன் தலைமையில் 300-க்கும் மேற் பட்ட போலீஸார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவிற் கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE